நாலு வரிக் கதைகள்

நாலு வரிக் கதைகள் 

 

பசி       சைட்       மதம்      சாமி      கீதை

பாட்டு   நெருடல்    அப்பா

பசி   

பசி வயிற்றைக்  கிள்ளியது! முந்தா நாள் கிராமத்தை விட்டு ஓடி வந்தவனுக்கு பட்டணத்தில்  என்ன கிடைக்கும்? மாடசாமி பசியின்  கொடுமையில் துடித்தான். அவன் அதிர்ஷ்டம் குப்பை லாரியிலிருந்து காஞ்சு போன பிரட் பாக்கெட் அவன் கிட்டே விழுந்தது. ஆசை தீர பிரிச்சு சாப்பிடப் போகும் போது எதிரே நாலு வயசு பொண்ணு அண்ணே! சாப்பிட்டு நாலு நாளாச்சு அண்ணே !!

 

சைட்

 

ரவிக்கு பெரியவர் மீது கோபம் கோபமாய்  வந்தது. பின்னே என்ன ஒரு நாளைப்போல தினமும் சாயங்காலம் ஆறே காலுக்கெல்லாம் வீட்டுக்குத்  திரும்பணுமாம் 1 அந்த நேரத்திலே பீச்சிலே எத்தனை அழகு  சுந்தரிகள்! வயசாயிடிச்சு பெரியவருக்கு! கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலே!

 ‘ம் ! ம் !  நடையைக் கட்டு !’ பெரியவர் உத்தரவு போட்டார்.

கண்கள் சிவக்க அழுதுகொண்டே அடி வானத்தில் மறைந்தான் ரவி – சூரியன்.

 

மதம்

 

ராமசாமிக்கு மதம் பிடித்துவிட்டது! அவன் யானை இல்லை!மனுஷன்!

சாமி

 

சாமிக்கு பூர்வாசிரமம் எங்கே?

கும்பகோணம் பக்கத்திலே குடவாசல் ஊரு! ஒரு மாத  சோத்துக்கு என்னை வித்திட்டாரு எங்க அப்பா ! அதுக்கப்புறம் ஆடுதுறையிலே ஆடு மேய்ச்சேன் ! மாயவரத்திலே மாடு மேய்ச்சேன் ! ஏ. வி. எம் மிலே ஏணி தூக்கினேன்! அதிர்ஷ்டம் அடிச்சுது! நடிகனானேன்! காரு, பங்களா, தோட்டம்,ஆளு, படை,பந்தா எல்லாம் வந்தது. படம் ஒண்ணு எடுத்தேன். சாமியானேன்!

 

 

கீதை

கிருஷ்ணா? இந்த துச்சாசனன் கிட்டேர்ந்து காப்பாத்த வர மாட்டியா? பாஞ்சாலி போல அஞ்சலை கத்தினாள். கிருஷ்ணன் கொஞ்சம் லேட்டா வந்தான். அதுக்குள் துச்சாசனன் ரேப்பு செய்துவிட்டு போயி விட்டான். கிருஷ்ணா? இது நியாயமா? அஞ்சலை கேட்டாள்.  அந்தப் பாவாத்மாவுக்குத் தான் எய்ட்சை  கொடுத்திட்டியே ! போகட்டும் கண்ணனுக்கே! தத்துவம் பேசினான். 

பாட்டு 

 

அம்மா சாப்ட்வேர் . அப்பா  ஹார்ட்வேர் . அகிலா ஹார்டு வேரும்  சாஃப்ட்வேரும் சேர்ந்து செய்த லிட்டில்வேர் – ரெண்டு வயசு பொண்ணு. அதில் என்ன ப்ராப்ளமோ? குழந்தை எப்போதும் ஒரே அழுகை! பாட்டியின் லேப்டாப்பில்   இருந்தால் தான் சிரிக்கும். இந்த ரெண்டு வேரைக் கண்டால்  கத்தும். பாட்டி ஒரு நாள் ஊரில் இல்லை. ஒரே கத்தல் நிலாப்பாட்டு பாடு என்று.  ஹார்ட்வேர் அடிக்க வந்தது. அம்மா சாப்ட்வேர் பாடியது. “ மூனே மூனே ஓடி வா! கம்ப்யூட் டர் மேலே தவழ்ந்து வா! பேஸ் புக்கிலே  நடந்து வா!இண்டெர்நெட்டிலே ஏறி வா!” குழந்தை அழுகையே தேவலை.

 

நெருடல்

“தொழிலாளர் வர்க்கம் ஓங்குக! தொழிற்சங்கம் ஓங்குக!”  ஆவேசமாகக் குரல் கொடுத்தான் ஆராவமுதன். கூட்டத்தில் காம்ரேட்  காலை மிதிக்க செருப்பு வாயைப் பிளந்தது. பக்கத்தில் இருக்கும் செருப்புத் தைக்கும்  சிறுவனிடம் ஓடினான். “மூணு ரூபாய் கொடு சார் . இன்னிக்கு காலேயி லிருந்து பட்டினி.” “ அதெல்லாம் முடியாது. ஒரு ரூபாய் தான்.” சிறுவன் தைத்துக்  கொடுத்தான். காசை விட்டெறிந்துவிட்டு ஊர்வலத்தின் முன்னணிக்கு ஓடி ஸ்லோகன் எழுப்பினான். “ தோற்றதில்லை தோற்றதில்லை தொழிலாளர் வர்க்கம் தோற்றதில்லை!”

 

அப்பா

                                                           

டீ   அக்கா ! எனக்கு இந்த அப்பாவைப் பிடிக்கவே இல்லை!

ஏண்டா?

பின்னே என்ன ! நம்ம அம்மாவை நாம தான் கட்டிப்போம். அவர் ஏன் கட்டிக்கிறார்?

போடா மண்டு! அப்பா அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கார்.

அதனால?

அதனால அவா கட்டிக்கலாம்!

அது சரி! சித்திக்கு கல்யாணம் ஆயிடிச்சா?

இல்லையே! ஏண்டா?

ஒண்ணுமில்லை – என்றான் பொடியன்.