மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

 

( உலகப் பிரசித்தி பெற்ற ‘ THE FISH’ என்ற Stephen C Lundin , Harry Paul and John Christensen எழுதிய புத்தகத்தின் தமிழ் வடிவம். தமிழ் வாசகர்களுக்காக இடம் ,பெயர்,மேற்கோள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)

 

image

 கோவாவில் அது ஒரு மோசமான மழைக்காலம். வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது.  ஈரமான, குளிரான, தயக்கமான மயக்கம் தரும் திங்கட்கிழமை அன்று. மதியத்துக்கு மேல் மேக மூட்டம் விலகலாம்  என்கிறது வானிலை அறிக்கை.  இது மாதிரி நாட்களில் தான் மேரிக்கு சென்னையின் அருமை தெரியும்.

‘என் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது?’ மேரி தனது மூன்று வருடங்களை மனதில் மெல்ல வருடிப்பார்த்தாள். அவள் கணவன் ஜானுக்கு கோவாவில்  ஐ டி கம்பெனியில் வேலை கிடைத்டதும்  எவ்வளவு சந்தோஷத்துடன் வந்தார்கள். பழைய வேலைக்கு நோட்டீஸ் கொடுத்து, வீட்டை காலி செய்து, புது ஊரில் புது வீடு பிடித்து, குழந்தைகளுக்கு காப்பகம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்தார்கள். அவளுக்கும் கோவாவில் ‘முதல் நிதிக் கம்பெனியில்’  வர்த்தகப் பிரிவில் வேலை கிடைத்தது.

 

ஜானுக்கு இந்த ஐ டி கம்பனி மிகவும் பிடித்திருந்தது. சாயங்காலம் வீ ட்டுக்கு வரும் பொது மிகவும் சந்தோஷத்துதுடன் வருவான். கம்பெனியில் செய்யும் வேலை மற்றும் அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும் மேரியிடம் சொல்லி மகிழ்வான். ஜானும்  மேரியும்   குழந்தைகளைச்  சீக்கிரம் தூங்கப்பண்ணிவிட்டு வெகுநேரம் சிரித்து மனம் விட்டு பேசி விளையாடிக்கொண்டே இருப்பார்கள். மேரியுடைய நிதிக் கம்பெனியைப் பற்றியும் மற்ற உடன் வேலை பார்ப்பவர்களைப் பற்றியும் ஆர்வத்தோடு கேட்பான். பார்ப்பவர்கள் கண்  படும் அளவிற்கு இருவரும் நல்ல நண்பர்கள் போல – காதல் பறவைகள் போலப்  பறந்து திரிந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவ்வளவு துள்ளல் மகிழ்ச்சி.

                            image

எல்லாவற்றையும் அழகாகத் திட்டம் போட்டிருந்தனர் மேரியும் ஜானும் – ஒன்றே ஒன்றைத் தவிர. ஒரு வருடம் ஆன பிறகு  ஜான் அடி வயிற்றில் ஏதோ ரத்தப் போக்கு என்று ஆஸ்பத்ரிக்குப் போனான். ரத்தப் போக்கு அதிகமாகி அதிலேயே  அவன் திடீரென்று  இறந்து  போனான். சொல்லிக் கொள்ள, அழ, விடை பெற எதற்கும் அவனுக்கு நேரமில்லை.

அது இரண்டு வருடம் முன்பு. ஊருக்கு வந்து முழுவதுமாக ஒரு வருடம் கூட ஆகவில்லை அந்த சமயம். அதை நினைக்கும் பொழுது மேரியின் உள்ளம் சுக்கு நூறாக

வெடித்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் . ‘எனது சொந்தக் கவலைபற்றி நினைக்க இப்போது நேரமில்லை.

திங்கட்கிழமையில்  ஆபீசில் ஏராளமான வேலை இன்னும் பாக்கி இருக்கிறது’.   

(தொடரும்)