வாதவூரன் – நாடக விமரிசனம்

image

 

வாதவூரன்

 

நரியை பரியாக்கி வாதவூரானை மணிக்கவாசகமாகப் புடம் போட்டு  திருவாசகத்தை பாடி உருக்க வைத்த காவியக் கதையை மேடையில் நாடகமாகப் போட்டிருக்கிறார்கள்!

முயற்சியைக் கண்டிப்பாகப் பாராட்டத் தான் வேண்டும்!

பாண்டியமன்னன் வரகுணன் ஆணைப்படி குதிரை வாங்க பொற் குவியலோடு சென்றார்  பாண்டிய முதலமைச்சர் வாதவூரார் . வழியில் சிலையே இல்லாத ஆவுடையார் கோவிலில் ஈசனை அருவத்தில் ஆனந்த தரிசனம் காண்கிறார். ஈசன் ஆணைப்படி குதிரை வாங்கக் கொண்டுவந்த பொன்னை கோவிலைச் சீரமைக்க செலவிடுகிறார்.

செய்தி அறிந்த பாண்டியன் வாதவூரரை சித்திரவதை செய்கிறான். குறிப்பிட்ட நாள் அன்று குதிரை வரும் என்று  உறுதியாகக் கூறினார் வாதவூரர். குதிரைகளும் வந்தன. ஆனால் ஓரிரவில் அவை நரிகளாக மாறிவிட்டன. வாதவூரார் பல கொடுமையான சித்திரவதைக்கு உள்ளாகிறார். அவரது உடல் வேதனை எல்லாம் தமிழ்ப் பண்ணாக -திருவாசகமாக உருகும் வடிவில் வெளிவருகின்றன!

வானாகி மண்ணாகி….

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே….

பேசப்பட்டேன் ..

பால் நினைந்தூட்டும் தாயினும் சால …..

கோணிலா வாளி  அஞ்சேன்  …..

 

முடிவில் மன்னன் அவரை பொள்ளும் வைகை சுடு மணலில் நிற்க வைத்துக் கொடுமைப் படுத்துகிறான். இறைவனின் கருணை வைகையின் வெள்ளமாய் வந்து அவரைக் காத்து அவர் பெருமையையும் திருவாசகத்தையும் உலகத்திற்குப் பறை சாற்றியது.

 image

அந்தத் திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்!

இந்த காவிய நாடகத்தை  M G W  Productions & ABBAS  Cultural இணைந்து தயாரித்திருக்கிறார்கள்!


 வாதவூரன் சுவாமிநாதனின் நடிப்பு மிகப் பிரமாதம். முழுக்க முழுக்க அவர் தான் வருகிறார். அவரது துன்பம் – உள்ளக் குமுறல் தான் திருவாசகமாக உருக்கியது என்பதைச் சொல்லுவதில் வெற்றி காண்கிறார்கள்.

எஸ். பி. பாலசுப்பிரமணியன் மற்றும் கிரிதரன் அவர்களது நெகிழும் திருவாசகப் பாட்டுக்கள் நம்மை ‘சிக்கெனப் பிடித்து’ விடுகிறது என்பது உண்மை.

இருப்பினும் மனோகர் நாடகத்தில்  இருக்கும் வேகமும் ஆக்ரமிப்பும் தந்திரக் காட்சியமைப்பும் வசனங்களும்   இல்லாதது  குறையாகத் தான் தோன்றுகிறது! அவை இருந்தால் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்திருக்கும்!

ஒருமுறை பார்க்கலாம் !