வெந்தழலால் வேகாது – கு. அழகிரிசாமி

image

கு. அழகிரிசாமியின் படைப்புலகம்  பெரும்பாலும் வாழ்வின் யதார்த்தங்களை எடுத்துச் சொல்லும்  என்கிறார் பழ. அதியமான்.. தமிழ்ச் சிறுகதையின் தரத்தை உலக அளவுக்கு உயர்த்தியவர்  அழகிரிசாமி என்கிறார் பிரபஞ்சன்.

அவரது  கதைகள் படித்துச் சுவைக்க வேண்டியவை. தோண்டத் தோண்ட  சுரக்கும் ஊற்று அவை!

அதில் “வெந்தழலால் வேகாது “ என்ற புராணக் கதையை இப்பொழுது பார்ப்போம்!

image

நடுராத்திரியில் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறையில்   மீனாட்சியும் சுந்தரரும் படுத்திருக்கயில் உறக்கம் வராமல் அவதிப் படுகிறார் சுந்தரர். காரணம் அன்றைக்குத் தான் தருமிக்காக நக்கீரனை எரித்து, பிறகு மற்றைய புலவர் வேண்டுகோளுக்கு இணங்க அவரை உயிர்ப்பித்து வந்திருக்கிறார். தன்னுடைய  வெறி தணிய சுடுகாட்டுக்குக் போய் பேய்க் கணங்களுடன் தாண்டவம் ஆடிவிட்டு வேறு வந்திருக்கிறார்!

மீனாட்சியும் பெண்ணுக்கே உரிய கவலையுடன்இப்படி தூங்காமல் கண் விழித்தால்  என்னாகும் என்று அவரைத் தொட்டுப் பார்த்த்தாள்! அனல் போல் கொதித்தது அவரது நெற்றிக்  கண்ணும் உடம்பும்! ‘முன்பு ஒருமுறை பஸ்மாசுரனுக்கு வரத்தைக் கொடுத்துவிட்டு பயந்து ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்தமாதிரி இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டு ஏன்  தவிக்கிறீர்கள் ’ என்று சுட்டிக் காண்பித்தாள்  மீனாட்சி! ‘சரி சரி உறங்குங்கள்’ என்று சுருண்டு கிடந்த புலித் தோலை இழுத்து அவர் உடலை நன்றாகப் போர்த்தினாள் !

‘அப்போதே யோசனை செய்யாமல் போனேன் என்று ‘ சுந்தரர்  சராசரி மனிதன் போல புலம்பினார். மன்மதனை எரித்த  தப்பையும் சுட்டிக்காட்ட மீனாட்சி தவறவில்லை!அவருடைய மேலான கவலை என்ன வென்றால் நக்கீரன் கடைசி வரை தான் செய்ததை பிழையென்று ஒப்புக்கொள்ளவில்லை! நீங்கள் சொன்னது சரியென்று நீங்களும் நிரூபிக்கவில்லை என்பதை சுருக்கென்று குத்திக் காட்டினாள் சகதர்மிணி.

image

தமிழ்ச்சங்க புலவர்கள் அனைவரும் சுந்தரரின் செயலை தருமியின் எதிரில் கேவலமாக விமர்சனம் செய்தனர்.  சங்கப் பலகை வேண்டுமென்று புலவர்கள் அவரிடம் போனது புலவர்கள் செய்த முதல் தவறு என்று பரணர் சொல்ல மற்றவரும் அதையே ஆமோதித்தனர். எல்லாரும் போய் நக்கீரனைப் பிழைக்க வைக்க வேண்டினார்கள். அவர் கைவசம் இருக்கும் மன்னிப்பு அவருக்கே தேவையா யிருந்தது. சுந்தரரும்  நக்கீரனிடம் அவர் சொன்னது பிழை என்று ஒத்துக் கொள்ள வைப்பாரோ என்று எல்லாருக்கும் பயம். சிவனைப் பற்றி ஒரு  வெண்பா பாடினால் கரையேற்றுவோம் என்றார். நக்கீரனும் பாடினார். சுந்தரர் அவரை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். நக்கீரனைப் பார்க்க சுந்தரருக்கு கண் கூசியது. உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். அதற்குப் பின் மற்ற  புலவர் எல்லாரும் சுந்தரரை மீண்டும் கலாய்த்தார்கள் இதை தருமி சுந்தரரிடம் சொன்னதால் தான் சுந்தரருக்கு அன்று தூக்கம் அழிந்தது.

குற்றம் குற்றமே என்ற சொற்கள் எரிச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன ! மன  சாந்திக்காக படுக்கையை விட்டு வெளியே வந்தார்! மீனாட்சியும் ‘ஏன் இப்படி உடம்பையும் மனதையும் போட்டு அலட்டிக் கொள்கிறீர்கள்? இனிமேல் சங்க விவகாரத்துக்கு நீங்கள் போக வேண்டாம்’ என்றாள் . சுந்தரருக்கு அந்த வார்தைகளை சகிக்க முடியவில்லை. வெளியே வந்த சுந்தரர் திடுக்கிட்டுப் போனார். தருமி அவர்  வாங்கிக் கொடுத்த பொற்கிழியை வேண்டாமென்று அவர் முன்னால் வைத்து விட்டுப் போய்விட்டான்.

தொப்பென்று படுக்கையில் வீழ்ந்தார் சுந்தரர். மீனாட்சி அவரைத் தடவிக் கொடுத்தாள். அவரது நெற்றிக்கண் கைலாய பர்வதத்தின்  பனிக்கட்டியை விடக் குளிர்ந்து போயிற்று!  

அழகிரிசாமியின் கற்பனையில் யதார்த்தம் மிளிர்கிறது என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்! 

image