V வரதராஜனின் “ இது நம்ம நாடு” ஓர் அரசியல் ஊசி வெடி பட்டாசு !. யுனைடெட் விஷுவல்ஸ் நாடகக் குழுவிற்காக துக்ளக் சத்யா எழுதி TV வரதராஜன் நாடக வடிவாக்கி இயக்கிய மேடை நாடகம் இது!
வரதராஜனின் தாத்தா அவருக்கு 25 கோடி சொத்தை கொடுக்க அதை எப்படி முதலீடு செய்வது என்று வரதராஜனும் அவரது குடும்பமும் ஆருயிர் நண்பனும் சேர்ந்து ஆடுவது – ஆட்டுவது தான் இது நம்ம நாடு.
சினிமா, பத்திரிகை என்று ஆரம்பித்து அதில் அரசியல் வாதிகளின் குறுக்கீட்டால் நஷ்டமடையும் வரதராஜன் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்றதும் அதுவரை ஷேர் ஆட்டோவாயிருந்த கதை சும்மா SUV மாதிரி ஓட ஆரம்பிக்கிறது.
சும்மா சொல்லக் கூடாது! – வசனத்தில் துக்ளக் சத்யா பூந்து விளையாடுகிறார். காங்கிரசைத் தாக்கும் போதும் சரி, தமிழ் நாட்டு அரசியலைத் தாக்குவதிலும் சரி துக்ளக் சத்யா தான் வரதராஜன் குரலில் பேசுகிறார் என்பது சுத்தமாகத் தெரிகிறது. ஆனால் வரதராஜன் மற்றும் அவரது மனைவி, நண்பர் ராமசேஷன், , அரசியல்வாதிகள், ஹை கமாண்டின் எடுபிடி சர்தார்ஜி அனைவரது நடிப்பும் கன கச்சிதம்! நாடகத்தை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.
குடியை ஒழிக்க ‘டாஸ்மாக்’ பெயரில் தனி மாவட்டம் அமைத்து அங்கு மட்டும் குடிக்கலாம் , அரசுக்கு வருமானத் திற்கும் பஞ்சமில்லை, குடிகாரருக்கும் கஷ்டமில்லை என்பது புதுமையான நகைச்சுவை.
கருணாநிதி,மன்மோகன் சிங், சோனியா, ஹை கமாண்ட், 3ஜி, ஓட்டுக்கு காசு,போன்ற அரசியல் நையாண்டிகள் வரதராஜனின் வார்த்தையில் நொறுங்கும் பல்புகள். பவுண்டரி,சிக்ஸர் என்று கவலைப் படாமல் சிங்கிள் ரன்னாக ஸ்கோர் செய்கிறார்கள் நடிப்பவர்கள் அனைவரும்!
எப்போதும் துக்கப்படற பிரைம்மினிஸ்டர்,குடும்பாலயம், அரசியல் வாதிகளால் பாதிக்கப் பட்டவர் முன்னேற்றக் கழகம் ( அ.பா.மு.க), டெபுடி பிரைம் மினிஸ்டர் ஆன வரதராஜன் முதன் முதலில் கையெழுத்திட்ட கோப்பின் மூலம் மூணு லட்சம் கோடிக்கு மேல ஊழல், அதனால் வரும் சிபிஐ விசாரணை, முடிவில் அப்பீல் இல்லா ஆயிரம் ஆண்டு கடுங்காவல் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி – நாடகம் முழுவதையும் நம்மை சிறு புன்னகையுடன் பார்க்க வைக்கிறார்கள்.
வசனத்தில் இருக்கும் பஞ்ச்சுக்கு ஒரு பதச் சோறு – ‘ஹை கமாண்ட் அவனுமில்லை, இவனுமில்லை so நீயா ‘ – கை தட்டல் எகிறுகிறது!
அந்த மாதிரி பஞ்ச் கதையிலும் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருக்க முடியும்.
இது நாடகமல்ல -அரசியல் நையாண்டிகளின் தொகுப்புச் சிதறல்! என்ற ஹிந்து பத்திரிகையின் விமர்சனத்துக்கு நாமும் வழி மொழிகிறோம்!