ஏன் பிறந்தாய் என்று உனைத் திட்டுபவர் பலர் !
வார முதல்நாளே ! தடுமாறும் என் தாளே!
இரவில் மட்டும் வரும் இரவு ராணியே!
இரவில் மட்டும் பூக்கும் புதுமலரே
உன் கன்னக் கதுப்பில் அப்படி என்ன கறை ?
கலை மாறா கதிரவன் கடித்தவடுவா ?
பருவக் கோளாறில் வெடிக்கும் பருக்கூட்டமா ?
பாடல் பல கோடி பெற்ற திருத்தலமே !
சூடேற்றும் குளிர் பானமே!முரண் தொடையே !
இருட்டிலும் காய்கிறாய்! காய வைக்கிறாய் !
மேக மேலாடை இன்றி அடிக்கடி பவனி வருகிறாய்!
நட்சத்திர சேடிகளுடன் உலா வருகிறாய் !
வானமென்னும் வீதியில் பூனை நடை புரிகிறாய் !
ஒளிந்து ஒளிந்து என்னை எட்டிப் பார்க்கிறாய் !
எங்கள் கால் உன் மேனியில் பட்டதில் வருத்தம் தானே !
உன்னைக் காட்டி சோறு ஊட்டிய நாங்கள்
உன்மடியில் அமர்ந்து சோறு உண்பது எப்போது ?
வெள்ளி முலாம் பூசிய கருப்பு நிற அழகியா இல்லை
கருப்புச் சாயம் பூசிய வெள்ளைக் காரியா ?
பித்தனுக்கு நீ பிறை! சித்தனுக்கு நீ சிறை !
கவிஞனுக்கு நீ கலை! காதலனுக்கு நீ சிலை !
பௌர்ணமிப் பார்வையில் வெறி ஊட்டுகிறாய்!
அம்மாவாசைப் போர்வையில் காதல் சல்லாபம்!
ஒரே ஒரு சந்தேகம்!
நீ பூமிக்குக் காவலா இல்லை பாலுக்குத் தோழியா ?