பெரிசு

image

பச்சைப் பசேல் என்று வயல்வெளி! வைகைத் தண்ணி பாய்கிற  பூமி!நெல்லும் கரும்பும் மாத்தி மாத்தி போடுவான் மாடசாமி.  "இந்த வருஷம் நல்லா விளையட்டும். உனக்கு வளையல் வாங்கி போடறேன் வள்ளிக்குட்டி!“ என்று கொஞ்சினான்.

"நீ மாடு மாதிரி உழைக்கிறே! உனக்கு மாடசாமின்னு சரியாத்தான் பேரு வைச்சிருக்காங்க” வள்ளி அவனிடம் கொஞ்சினாள்.

“கட்டின புருஷனை பேரு சொல்லியா கூப்பிடறே ? எடு கருக்கருவாளை ! நாக்கை அறுக்கணும் ! என்று செல்லமா கோபித்தான் மாடசாமி.

"அறுவேன்” என்று சொல்லி கிட்டே வந்து அவனுக்கு எதிரில் நாக்கை நீட்டி நின்றாள் வள்ளி! அந்த உடம்பும் அவள் நின்ற கோலமும் அவனை என்னவோ செய்தது. அவளை  அப்படியே பிடிச்சு இழுத்து ….  

“எலே! மாடசாமி! வயக்காட்டுப் பக்கம் மாடு மேயுது பாருடோய்” பெரிசு – அப்பத்தா! எப்பவும் எதினாச்சும் சத்தமா பேசிக்கிட்டே வர்ரதினாலே வள்ளியும்  மாடசாமியும் சுதாரிச்சு எழுந்தாங்க. வள்ளியின் கலைஞ்ச தலையையும் சேலையையும் பார்த்த அப்பத்தாவுக்கு புரிஞ்சிட்டது.

“ அட சே ! கூறு கேட்ட செருக்கி !இனிமே இந்த மாதிரி செய்வியா? சின்னஞ்சிறுசுக இருக்கிற இடத்துக்கு வருவியா? பீடை!” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு மேட்டுப் பக்கம் போனாள் அப்பத்தா!