மீனங்காடி ( ஐந்தாம் பகுதி)

வழக்கத்திற்கு மாறாக …………….

image

மேரி படிகளில் இறங்கி வழக்கம் போல ஏரிக்கரைக்கு மதிய உணவிற்காகச் சென்று கொண்டிருந்தாள். கால்கள் நடந்தன. ஆனால் மனம் மட்டும் பிரசாத் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தது.  இன்னும் கொஞ்ச தூரம் அதிகம் நடந்தால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ – அந்தப் பெயர் அவள் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. குப்பைத் தொட்டியை எப்படித் தூக்கி எறிவது? ஏதாவது செய்யணும் !

யோசித்துக் கொண்டே நடந்ததில் மேரி இதுவரை வராத புதுப் பகுதிக்கு வந்து விட்டாள். ‘ஹோய். ஹோய்’ என்று பலர் சிரிக்கும் சத்தம் கேட்டபிறகு தான் அவளுக்குப் புரிந்தது – தான் மீன் மார்க்கெட் பக்கம் வந்து விட்டோம் என்று. அது ஒரு பிரபலமான மீன் மார்க்கெட். அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மிக உயர்ந்த ரக மீன்கள் எல்லாம் கிடைக்கும் என்று.ஆனால் அவள் பொருளாதார நெருக்கடி – இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு அவளை அங்கு வர விடுவதில்லை.ஜானுக்காக வாங்கிய கடனைக் கட்டிய பிறகு தான் மற்ற வசதிகள் எல்லாம்.

அந்த மார்க்கெட் பக்கம் போவது இதுதான் முதல் தடவை.
அங்கே இருக்கிற எண்ணற்ற மீன் கடைகளில் மீனங்காடி என்ற கடையில் மட்டும் ஏராளமான கும்பல் இருப்பதைக் கவனித்தாள்.  அங்கிருந்துதான் அந்த ‘ஹோய் ஹோய்’ சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கடையைச் சுற்றிக் கத்திச் சிரிக்கும் அவர்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது. அவளுக்கும் அந்த சிரிப்பு அலை தொற்றிக் கொள்ளும்படி இருந்தது. ஆனாலும் தன் மண்டையில் ஓடும் எண்ண அலைகளினால் சீரியஸாகவே இருந்தாள்.

image

கொஞ்சம் ஆர்வத்துடன் உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தாள். சரி ஏதோ வித்தை காட்டி  தமாஷ் பண்ணுகிறார்கள் என்று அவர்களை விட்டு விலகிப் போகப் பார்த்தாள். அப்போது தான் அவள் மண்டையில் தட்டுப்பட்டது – அட நமக்கும் கொஞ்சம் வேடிக்கை, சிரிப்பு தேவைப் படுகிறது என்று. கும்பலின் மையத்துக்குப் போனாள்.

அங்கே மீன் விற்றுக் கொண்டிருந்த ஒருத்தன் சத்தமாகக் கத்தினான். “ஹாய் ! டீ கப் வீரர்களே !” அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் தங்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் டீ கப்பைத் தூக்கி உயர்த்தி ‘ஹாய்’ என்று கத்தினார்கள் – நன்றாக டை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்த பத்து இருபது பேரும். ‘இதென்ன கூத்தாயிருக்கு?’ என்று மேரி மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.

(தொடரும்)