ரெண்டு!

               

அன்பு வழியும் விழிகள் ரெண்டு

ஆசை பொழியும் விழிகள் ரெண்டு

இன்ப மூட்டும் விழிகள் ரெண்டு

ஈடில்லா விழிகள் ரெண்டு

உண்மை பேசும் விழிகள் ரெண்டு

ஊஞ்சல் ஆடும் விழிகள் ரெண்டு

என்னை ஈர்க்கும் விழிகள் ரெண்டு

ஏக்கம் தீர்க்கும் விழிகள் ரெண்டு

ஐயமில்லா விழிகள் ரெண்டு

ஒற்றிக் கொள்ளும் விழிகள் ரெண்டு

ஓங்கார  விழிகள் ரெண்டு

ஔவை கண்ட விழிகள் ரெண்டு

யார் சொன்னார் உனக்கு விழி பன்னிரண்டு?

முருகா உனக்கு விழி கோடி கோடி  உண்டு !

2014 ல் வெளியான தமிழ்ப் படங்கள்!

image

அம்மோடியோவ்! எத்தனை தமிழ்ப் படங்கள் மூணு மாதத்தில் !

அகடம்   03-01-2014   

என் காதல் புதிது  03-01-2014  

கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு 03-01-2014 

நம்ம கிராமம் 03-01-2014 

ஜில்லா   10-01-2014 

வீரம்  10-01-2014 

கலவரம் 14-01-2014 

விடியும் வரை பேசு 14-01-2014 

கோலி சோடா  24-01-2014

மாலினி 22 பாளையங்கோட்டை  24-01-2014 

நேர் எதிர்  24-01-2014 

இங்கே என்ன சொல்லுது  30-01-2014 

நினைவில் நின்றவள்  31-01-2014 

ரம்மி  31-01-2014 

பண்ணையாரும் பத்மினியும்  07-02-2014 

புலிவால்  07-02-2014 

உ  07-02-2014 

சந்த்ரா  14-02-2014 

இது கதிர்வேலன் காதல் 14-02-2014 

மாதவனும் மலர்விழியும்  14-02-2014 

ரெட்டை கதிர் 14-02-2014 

ஆஹா கல்யாணம்  21-02-2014 

பிரம்மன்  21-02-2014 

வெண்மேகம்  21-02-2014 

அமரா  28-02-2014 

பனி விழும் மலர்வனம்  28-02-2014 

தெகிடி  28-02-2014 

வல்லினம்  28-02-2014 

வெற்றிமாறன் I.P.S 28-02-2014 

என்றென்றும்  07-03-2014 

எதிர் வீச்சு  07-03-2014 

நிமிர்ந்து நில்  07-03-2014 

வீரன் முத்து ராக்கு  07-03-2014 

ஆதியும் அந்தமும் 14-03-2014 

காதல் சொல்ல ஆசை  14-03-2014 

ஒரு மோதல் ஒரு காதல்  14-03-2014 

குக்கூ  21-03-2014 

கேரளா நாட்டிளம் பெண்களுடனே  21-03-2014 

பனி விழும் நிலவு  21-03-2014 

விரட்டு  21-03-2014 

யாசகன் 21-03-2014 

இனம்  28-03-2014 

மறுமுனை  28-03-2014 

நெடுஞ்சாலை 28-03-2014 

ஒரு ஊர்ல  28-03-2014 )=

எப்போதும் வென்றான்  04-04-2014 

மான் கராத்தே  04-04-2014 

ஒரு கன்னியும் மூணு களவாணியும்  04-04-2014 

கூட்டம் 04-04-2014

                   வரப் போகும் படங்கள்!

கோச்சடையான் 

தெனாலிராமன் 

முருகாற்றுப்படை 

நான் சிகப்பு மனிதன் 

வாயை மூடிக் கொண்டு பேசவும் 

ராமானுஜன்

சைவம்

மஞ்சப்பை

வாராயோ  வெண்ணிலாவே

மெல்லிசை

உத்தம வில்லன் 

மாங்காடுப் பாடல்! நான்காம் வாரம்

—————- image———–

நவில்தொறும்   நூல்களைப்  படிக்கணும்  தாயே!
நாவினில்   நின்பெயர்  நிலைக்கணும்   தாயே!
நினைவினில்   நின்னுரு  இருக்கணும்  தாயே!
நீயின்றி  நானில்லை  என்றாகணும் தாயே!
நுங்கினைப்  போலநான்   இனிக்கணும் தாயே!
நூபுர  கங்கைபோல்  பெருகணும் தாயே!
நெஞ்சினில்  ஈரம்  கசியணும்  தாயே!
நேர்மை  வடிவாய் விளங்கணும் தாயே!
நைடதம்  போல்நூல்  படிக்கணும்  தாயே!
நொந்த  மனமது  மாறணும்  தாயே!
நோன்புற்று   வந்தேன்   மாங்காட்டுத்  தாயே!
ஔஷதம்  போலதினம்  உதவணும்  தாயே!
ந்யாயமாய்  இவைதந்து  காத்திடுவாய் நீயே!

ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை

image

ராணியை   ஆணி   ஆக்கி      
சுவத்திலே   அடித்திடுவோம்
ராஜாவை    கூஜா   ஆக்கி      
ஆணியில்   மாட்டிடுவோம்
மந்திரியை   முந்திரி     ஆக்கி      
சிப்பாயை   சிப்பி ஆக்கி
கூஜாக்குள்   போட்டுடுவோம்  

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !

வானத்தை   வில்லாய்    மாற்றி     
கைகளில்    எடுத்திடுவோம்
பூமியை     அம்பாய்     மாற்றி     
வில்லிலே   தொடுத்திடுவோம்
சந்திரனை   சூரியனாக்கி 
சூரியனை    சந்திரனாக்கி
காலத்தை   மாற்றிடுவோம் !  

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !

மேகத்தைக்  கையில் பிடித்து  
தண்ணீரைப் பிழிந்திடுவோம்
கிரகத்தைப் பையில் அடைத்து
கண்ணீரைத்  துடைத்திவோம்  
நட்சத்திரப்  பூக்கள்  சேர்த்து  
வானவில்   நாரில் கோர்த்து
மாலையாய் கட்டிடுவோம் !    

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! 

ராஜராஜ சோழன் உலா

ராஜராஜ சோழன் உலா

image

தஞ்சைப் பெரிய கோவிலின் சிவாச்சாரியார் பரம்பரை பரம்பரையாகச்  சிவனுக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்றவர். அவர் அன்று மாலை முதல் சற்று பதட்டத்துடன் இருந்தார். அர்த்த ஜாமம் முடிந்து  கோவிலின் கருவறையைப் பூட்டிவிட்டு வரும் போது அன்று இரவில் ஏதோ ஓர்  அமானுஷ்ய செயல் நடக்கப் போகிறது என்று அவரது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்துப் புரண்டாலும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. அன்று சதயத் திருநாள். பெரிய கோவிலைக் கட்டிய தமிழ் சக்ரவர்த்தி ராஜராஜனின் பிறந்த நட்சத்திரம். அரசன் காலத்தில் அந்தச்  சதயத் திருநாள் ஒரு வார காலம் படு விமரிசையாக நடைபெற்று வந்தது. இன்றைய காலத்திலும் அந்த நன்னாளில் சிறப்பு அபிஷேகங்களையும்  வழிபாடுகளையும் சிவாச்சார்யார்கள் செய்வதுண்டு.

இரவு பன்னிரண்டைத்  தாண்டியும் தூக்கம் வராமல் தவித்தார் சிவாச்சாரியார். சதயத் திருநாள்  இரவைப் பற்றி அவருக்குப்  பலவித சந்தேககங்கள் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஒவ்வொரு முறை சதயத் திருவிழா முடிந்த மறுநாள் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் பிரகாரத்தில் – கோபுரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அடுத்த வருடமாவது அது என்ன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் நினைப்பார். ஆனால் அதற்கான தைரியம் மட்டும் வந்ததில்லை. இன்றைக்கு அந்தத்  தைரியம் அவருக்கு வந்ததைப் பற்றி அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

கோவில் சாவியை இடுப்பு வேட்டியில் சொருகிக் கொண்டார். நேர் வாசலில் சென்றால் மற்றவர்களுக்குத்  தெரிந்து விடுமே என்று பயந்து நந்தவனத்தில் அருகே இருக்கும் ஒரு ரகசிய வழி மூலம் பிரகாரத்துக்குள் சென்றார். நந்தியின் பின்புறம் மறைந்து கொண்டு அகன்ற வெளிப் பிரகாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்

.

imageimage

 

சந்திரனின் சாய்ந்த கிரணங்கள் அந்தப்  பிரகாரத்தை நடுநிசியிலும் அழகு ததும்பும் இடமாக மாற்றியிருந்தது. கருங்கல்லில் கட்டப்பட்ட ஒவ்வொரு தூணும், சுவரும், கோபுரமும், விமானமும், மண்டபங்களும் அப்படியே வெள்ளியில்  இழைத்தது போல இருந்தன. பெருவுடையார் கோவில், ராஜராஜேஸ்வரம், பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பெரிய கோவில் அந்த இரவு வேளையில் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அங்கே பிராகாரத்தில் நடை பெற்ற காட்சி சிவாச்சாரியாரைத் திக்கு முக்காடச் செய்தது. அந்த மகோன்னதக் காட்சி அவருக்குப்  பயத்தையும் ஆவலையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தியது. கனவா நனவா என்று புரியாத நிலையில் இருந்தார் சிவாச்சாரியார்.

ஆகா! அது என்ன! ஊர்வலமா? யாரிவர்கள்? முப்பது நாற்பது பேருக்கு மேல் இருப்பார்கள் போலத் தோன்றுகிறதே! தூரத்தில் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின்  நடை, உடை, பாவனை, சந்தோஷம் , உவகை, துள்ளல், சிரிப்பு எல்லாவற்றையும் அவரால் உணரமுடிந்தது.  

image

சிவாச்சாரியாருக்குத் தன் பாட்டனார் கூறியது ஞாபகம் வந்தது. ஆம்!. அது ‘ ராஜராஜன் உலா’ தான். கொஞ்சம் கூடச்  சந்தேகமேயில்லை.அதோ அந்தக் கூட்டத்தின் நடு நாயகனாக வருவது சாட்சாத் ராஜராஜ சோழனே தான். தஞ்சை கோவிலில் இருக்கும் சிற்பம் போலவே இருக்கிறார்.  அவர் கூட வருவது யார்? உன்னிப்பாகக் கவனித்தார். சிவாச்சாரியரால் எல்லாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. ராஜ களையுடன் நடுவில் வருபவர் திரிபுவனச் சக்ரவர்த்தி – கோப்பரகேசரி – மும்முடிச் சோழன் – திருமுறை கண்ட சோழன் – கலிங்கம் முதல் இலங்கை வரை ஒரு குடையில் ஆண்ட மாபெரும் மன்னர் ராஜராஜன் என்ற அருண்மொழித்தேவர். உடன் வருபவர்கள் – அவரது மனைவியர் –தமக்கை குந்தவை, அவருடன் வல்லவரையன் வந்தியத்தேவன் –கூடவே ராஜேந்திர சோழன், சின்னக் குந்தவை, அநிருத்தர், பழுவேட்டரையர், சம்புவரையர், மலையமான்,மற்றும் பல சேனைத் தலைவர்கள், சேவகர்கள், தோழிகள்.

ஆகா!  சிவாச்சாரியாருக்குத் தான் பாட்டனார்  இறக்கும் போது  திரும்பத் திரும்பக் கூறியது நினைவுக்கு வந்தது. “சதயம் – இரவு- கோவில் – ராஜராஜன் உலா”. அதன் பொருள் அன்று விளங்கவில்லை.  இன்றைக்குத் தான் தெரிந்தது.

பேரரசன் ராஜராஜன் காலத்தில் அவன் பிறந்த நட்சத்திரமான சதயத்தை ஒட்டி வருடா வருடம் பிறந்த நாள் விழா ஒரு வார காலத்துக்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் சதய நட்சத்திர நாளன்று ராஜராஜனும் அவனுடைய குடும்பத்தினர்களும் நண்பர்களும், மற்றும் முக்கியமான சிற்றசர்களும் இரவில் நடுநிசிக்குப் பிறகு ஊர் உறங்கிய பிறகு விடியும் வரை பெரிய கோவில் பிராகாரத்தில் உலா  வரும் வழக்கம் இருந்து வந்தது என்பது ஒரு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாமல் இருந்தது. தான் கட்டிய கோவிலில் உற்றார் உறவினர் புடை சூழ வருவது ராஜராஜனுக்கு மிகவும்  விருப்பமான செயலாக இருந்தது.

image

ராஜராஜனின் கனவுக் கோவிலது! ஈழ நாட்டில் அவன் கண்ட கனவை நனவாக்க நான்கு ஆண்டுகள் பிடித்தன. ஆயிரமாயிரம் சிற்பிகள் – கட்டமைப்பு வித்தகர்கள் சேர்ந்து அமைத்த கோவில் அது! அதி  உயரமான கோபுரம் ,ஒற்றைக் கல்லில் விமானம், நிழல் கீழே விழாத வடிவமைப்பு – கல்லில் இழைத்த காவியம்! ‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி ராஜராஜேஸ்வரம்’ என்று பெருமிதத்துடனும் அவை அடக்கத்துடனும் செப்பேட்டில் பதித்த ராஜராஜனுக்குக் குட முழுக்கு செய்த நாளை விட அவன் பிறந்த சதயத் திருநாளில் உற்றார் உறவினருடன்   பிரகாரத்தில் உலா வருவதையே பெருமையாகக் கருதினான்.

ஆனால் யாருக்கும் தெரியாத ரகசியம் என்னவென்றால் , ராஜராஜன் இறந்த பின்னும் சோழ வம்சாவளி மறைந்த பின்னரும் அவர்கள் திரு உருவம் உலா வருவதை, ராஜேந்திரன் , குலோத்துங்கன் என்ற மற்ற மன்னர்கள் அனுபவ பூர்வமாகக் கண்டும் கேட்டும் உணர்ந்தும் பங்கு பெற்றும் இருந்திருக்கிறார்கள். கலிங்கத்துப் பரணியில் கூட இது பற்றி குறிப்பாகச்  சொல்லப் பட்டிருக்கிறது! மூவர் உலா என்ற நூலிலும் இது பற்றிக் குறிப்புகள் உள்ளன. கோவிலில் பணி புரியும் சிவாச்சார்யார்களுக்கு இந்த உலா பற்றி அரச புரசலாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் யாருக்கும் இன்று சிவாச்சாரியாருக்கு வந்த தைரியம் வந்ததில்லை.

  image

ஆஹா! அதோ வருகிறது ராஜராஜன் உலா! சிவாச்சாரியார் ஒளிந்து கொண்டிருக்கும் நந்தி அருகில் உலா வரத் தொடங்கியது.  தான் கனவிலும்,படத்திலும், பொன்னியின் செல்வன் கதையிலும் கண்டதைப் போலவே அவர்கள் இருந்தார்கள். ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் இருவர் முகத்தில் தான் எத்தனை கம்பீரம்! அழகு ராணிகளின் நடையும் நாட்டியம் போலவே இருந்தது. ஒருவரை ஒருவர் துரத்துவதும், பிடிப்பதும், விளையாடுவதும் கிட்டத்தட்ட திருமண ஊர்வலம் போலவே மெல்ல சென்று கொண்டிருந்தது அந்த ஊர்வலம். குதூகலத்துடன் அவர்கள் வரும் காட்சி கண் கொள்ளாக்  காட்சியாக இருந்தது. ஓரிரு காவலாளிகள்   சிறிய தீப் பந்தங்களை எடுத்துச் சென்றார்கள். ஆனால் அவற்றிலிருந்து ஒளி வந்ததே  தவிரப்  புகை ஏதும் வரவில்லை. அதே போல் மேளம்,மத்தளம்,நாதஸ்வரம் இவற்றின் ஒலி மட்டும் வந்ததே  தவிர வாசிப்பவர் யாருமில்லை.

ஒவ்வொரு சிலைக்கு அருகில் கூட்டம் வந்ததும் யாராவது ஒருவர் சிலை வடித்த விதத்தைப் பற்றியும் யார் அதற்குப்  பிம்பமாக இருந்தார்கள் என்பதைப் பற்றியும் சொல்ல மற்றவர்கள் அவற்றைக் கேட்டு மகிழ்வதும் அற்புதமான காட்சியாக இருந்தது. சிவாச்சாரியார் தன்னை மறந்து அவர்களை  முழுவதுமாக ரசிக்க ஆரம்பித்து விட்டார்.  சிலைக்கு முன்னால் ராஜராஜன் அந்தச்  சிலை போல நிற்பதும் சிலர் அவனைக் கேலி செய்வதும் சிலர் ஆஹா! ஆஹா! என்று பாராட்டுவதும் காண்பதற்கு ரம்மியமாக இருந்தது. தான் பெற்ற பிறவிப் பயனை சிவாச்சாரியார் அந்தக் கணத்தில் அடைந்தார்.

திடீரென்று  சிவாச்சாரியாருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. தன்னால் அவர்களைக் காண முடியும் என்றால் அவர்களும் அருகில் வந்தால் தன்னைக் கவனித்து விடுவார்களோ என்ற பயம் தோன்றியது. அவர் உடல் கிடு கிடுவென்று  நடுங்கத் தொடங்கியது. அவர் பயந்ததே நடந்தது.

உலா நந்தியைத் தாண்டும் போது சட்டென்று நின்றது – எதிரே வரும் உருவத்தைப் பார்த்து. அவர் வேறு யாரும் இல்லை.கருவூர்த் தேவர் தான்

.

image

ராஜராஜ சோழனின் ஞானக்  குரு. அனைவரும் அவருக்குத்  தண்டனிட்டு வணக்கத்தைத்  தெரிவித்தார்கள். தஞ்சை கோவிலை உருவாக்கியதில் அந்தச்  சித்தரின் பங்கு தலையானது. அவரும் மன்னனையும்  மற்றோரையும் வாழ்த்தினார்.

“மன்னர் மன்னா! ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் பதும மலர் ஒன்றை உனக்கு இன்று தருகிறேன். கோவில் குடமுழக்கு செய்யும் போது இது போன்ற மலரைக் கொடுத்தேன். அதைக் கொண்டு தான் சிவபிரானுக்கு மருந்து செய்து அவரைப் பிரதிஷ்டை செய்தோம். இன்றும் இதன் மூலம் நமக்கு நற்கதி ஏற்படப் போகிறது. இதை யார் மூலம் சிவனுக்கு சாற்றுவது என்று சென்ற முறை மாதிரி இப்போதும் ஒரு சோதனை நடத்து! ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்! நான் நாரதரும் அல்ல. இது ஞானப் பழமும் அல்ல.”- இடி இடியென்று சிரித்தார். அதன் மகிழ்ச்சி  அலை  அனைவரையும் தொற்றிக் கொண்டது! அந்த சந்தோஷ வலையை அறுத்தெரிந்தது அவரின் அடுத்த சொல்!

“மன்னா! ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை வருவது பதும மலர் மட்டுமல்ல ஒரு மானிடனும் கூட!”

“குருநாதர் அவர்களே! நான் முதலிலேயே அவரைக் கண்டு கொண்டேன் ! வந்தியத்தேவரே! நமது பெரிய நந்தி தேவரை சற்று விலகச் சொல்! சிவாச்சாரியார் நம் முன்  வரட்டும்! “என்றார் ராஜராஜன்!

சிவாச்சாரியார் நடுநடுங்கி விட்டார். தனக்கு ஏன் இந்த விபரீத ஆசை வந்தது? இனி நம் கதி என்னாகுமோ  என்று தயங்கித் தயங்கி அவர்கள் முன் வந்து கண் மூடி கை கூப்பி நின்றார்.

(தொடரும்)

image

இந்தப்பெண் எழுதுவது பெண்ணுரிமை
பற்றிய புதுக் கவிதையா ?

அடிமைக்கு எதற்கு உரிமை என்று
       திமிர் பேசியது முந்தா நாள்!
நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை என்று 
      ஒப்புக் கொண்டது நேற்று!
உன்னால் மட்டுமல்ல என்னாலும் முடியும் என்று
     செயலிலும் காட்டுவது இன்று!
அதனால் தான் முப்பத்து மூன்றைத் 
     தரத் தயங்குகிறான் அவன்!

யார் சொன்னார் பெண்ணுக்கு உரிமை இல்லை என்று?

தந்தை தாயுடன் இருக்கும் வரை அவர்
    சொன்னபடி கேட்கும்  உரிமை உண்டு!
கணவனுடன் இருக்கும் போது தற்காத்து 
    சொற்காத்து இருக்கும் உரிமை உண்டு!
மகன் தயவில் வாழும் நிலையிலும் 
   தன்னிலை எண்ணிக் கலங்கும் உரிமை உண்டு!

வீதிவரை நிறுத்திவிட்ட மனிதனிடம் 
      அவள் கேட்பது ஒரே ஒரு உரிமை! 
என்னை மனுஷியாக உன் துணைவியாக 
     என்று நீ ஏற்றுக் கொள்வாய்?

(ஆனந்த் ஸ்த்ரீ சக்தியின் புத்தாண்டு விழாவில் படிக்கப் பெற்ற கவிதை!)

உலகெங்கும் ஏப்ரல் 1 ந் தேதி முட்டாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மணி ரத்னம் பொன்னியின் செல்வன் எடுத்ததாகக் கூறுவதும் இதற்காகத் தான் !

ராபர்ட் கிளைவின் டயரியும் ஏப்ரல் ஃபூல் கதை தான்!