எங்க அம்மா தங்க அம்மா
( Click the Play Button to listen to the audio version of the poem)
எங்க அம்மா தங்க அம்மா – அது
எங்க அம்மா தங்க அம்மா
இட்டிலிக்குத் தொட்டுக் கொள்ள சட்னி தருவா
சட்டினி கூட சேர்த்து அவ சாம்பார் தருவா
சட்டினியும் சாம்பாரும் தீர்ந்து போனா
மொளகாப்பொடி எண்ணை ஊத்தித் தருவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
தொட்டிலில் கிடக்கும் போது பாலைத் தருவா
பட்டினி கிடக்கும் போது பாத்துத் தருவா
பருப்பு சோறும் பாலு சோறும் தீர்ந்து போனா
ரத்தத்தையே பாலாக ஊட்டி விடுவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
காலை முதல் மாலை வரை காத்துக் கிடப்பா
நேரமானா கண்ணிரண்டும் பூத்துக் கிடப்பா
ரா முழுதும் நான் அழுதா தானும் அழுவா – அட
கண் முழிச்சு நான் சிரிச்சா தானும் சிரிப்பா
அது எங்க அம்மா தங்க அம்மா !
சுரம் வந்து அவதிப் பட்டா ரொம்பத் துடிப்பா
பால் எடுத்து துணியில் ஒத்தி பத்துப் போடுவா
நான் எடுத்த வேலை யெல்லாம் வெற்றி பெறவே
எல்லா ஊரு கோயிலுக்கும் முடிச்சு போடுவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
மடியில் இட்டு முதுகில் தட்டிப் பாட்டுப் படிப்பா
இட்டுக் கட்டி மெட்டுப் போட்டு ராகம் பிடிப்பா
சின்னச் சின்னக் கதையா கோடி சொல்லுவா
கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிக் கொள்ளுவா
அது எங்க அம்மா தங்க அம்மா !
நல்ல சேதி சொல்லி வந்தா ஆரத்தி எடுப்பா
உப்பு மொளகாய் எடுத்து சுத்திப் போடுவா
தப்புத் தண்டா எதுவும் நானுஞ் செஞ்சா
அப்பா கிட்ட சொல்லாம மறைச்சிடுவா !
அது எங்க அம்மா தங்க அம்மா !!
ஓடி ஓடி ஓடாய்ப்போன அம்மாவுக்கு
கோடி கோடி கொடுத்தாலும் ஈடாகுமோ ?
அள்ளி அள்ளித் தந்தாளே எங்க அம்மா – அவளுக்கு
கொள்ளி மட்டும் வைச்சேனே இது தகுமோ ?
அது எங்க அம்மா தங்க அம்மா !