தி ஜானகிராமனின் “ஐயரும் ஐயாறும்”

image

image

திருவையாற்றுக்கு தியாகையர் பஞ்ச கீர்த்தனை சமயத்தில்   ஆரோகநாதன் அண்ட் மகளிர் சிஷ்யை கம்பெனி ஓர் ஆராய்ச்சிக்காக வந்திருக்கின்றனர். தியாகப் பிரம்மம் இருந்த காலத்தில் திருவையாறு எப்படி இருந்தது என்பது குறித்த ஆராய்ச்சி.

இதுதான்  ஜானகிராமன்  கதையின் கரு. 

 காலையில் சோம்பல் முறித்து எழுந்து காவேரியில் குளித்து விட்டு சோழநாட்டுக்கே உரிய இட்லி,ரவா தோசை,டிகிரி காபி சாப்பிட்டுவிட்டு பேப்பர் பேனா சகிதமாக ஆராய்ச்சிக்குக் கிளம்பினர்.

மாணவிகள் குறிப்பிட்டுள்ள சில  வீடுகளுக்குச் சென்று அங்கிருப்பவர்களை  பேட்டி  காண வேண்டும் – புள்ளி விவரங்கள் சேகரிக்க வேண்டும். 

image

மாலதி ஆனந்தலக்ஷ்மிப் பாட்டியை  (வயது 102) பேட்டி எடுக்கிறாள்! 

“நான் மூணாவது இளையாளா அவருக்கு பத்து வயதிலே வாக்கப் பட்டேன். எனக்கும் அவருக்கும் முப்பத்தாறு வயது வித்தியாசம். அவர் நினைவு தெரிஞ்ச நாளா தியாகராஜ ஸ்வாமியைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் … அவரோட பாட்டையெல்லாம் இவர் பாடுவார்… இன்னிக்கு இவா பாடறதைக் கேட்டா இங்கிலீஷிலே பாடறாப்பலே இருக்கு.  

அது சரி! தியாகைய்யர் எப்படி இருப்பாராம் ?

வெடவெடன்னு ன்னு சேப்பா இருப்பாராம்! நான் பார்க்கக்   கொடுத்து வைக்கலே!

அவருக்கு என்ன பக்ஷணம்  சாப்பாடு எல்லாம் பிடிக்கும்? 

இதெல்லாம் எதுக்குடி கேக்கறது இந்த பொண்ணு?

அவர் திருப்பதிக்கு தஞ்சாவூர் வழியாப்   போனாரா இல்லை கும்பகோணம் வழியாப்   போனாரா? 

திருப்பதிக்கு போயிட்டு வந்தார். கொட்டையூர் வழியாப்   போனா என்ன கண்டியூர் வழியாப்  போனா என்ன? 

image

கிரிஜா ஞானஸ்கந்தனைப் பேட்டி காணுகிறாள்!

"எனது முப்பாட்டனாரின் முப்பாட்டனார் ஐயா தீட்சிதருக்குத் தியாகையரைக்  கண்டாலே  ஆகவில்லை.கலைகளில் இலக்கியம் தான் சிறந்தது-சங்கீதம் கடைசி வகை. தியாகையர் நாவல் எழுதியிருந்தால் நோபல் பரிசு வாங்கியிருப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம் ”

அலமு வைத்திலிங்க ஆசாரியரை பேட்டி  கண்டாள்.

“ எனது முன்னோர்கள் தான் தியாகையருக்கு ஜால்ரா உஞ்சவிருத்திப்  பாத்திரம் செய்து தந்தவர்கள்!”  இதனால் தான் இவரது வம்சத்தின்  உறவினர்கள் தென்னாப்பிரிக்காவிலும் இலங்கையிலும் செல்வத்தில் புரளுகின்றனராம்  "

உமா  ஜப்யேசக் கவிராயரைப் பேட்டி கண்டாள்!

 என் பெரியன்னையின் முப்பாட்டனார் ஐயாரப்ப கவிராயர். அவர் தியாகையரிடம் தனியன்பு கொண்டவர். அதனால் தான் அவரிடம்  " தெலுங்கில் பாடாதீர்! மக்களுக்குப் புரியும் தமிழில் பாடுவீர்!என்று பலமுறை மன்றாடியும் ஐயர் கேட்கவில்லை! “தமிழ் நாட்டு இசைப் புலவர்கள்  நும் பாக்களின் பொருளனைத்தையும் சிதைத்துக் கொல்வார்கள் என்றார்.” அது மெய்யாகிவிட்டது!

அம்புஜம் பிரணதார்த்திஹர சர்மாவைப் பேட்டி கண்டாள்!

தியாகையர் வருடா வருடம் சீதா கல்யாணம் செய்வதை இவருடைய முன்னோர் எதிர்த்தார்களாம். ராமன் ஆஃப்டர் ஆல் மநுஷன். அவனைத்  தெய்வத்துக்குச்  சமானமா வைத்து கல்யாணம் செய்யலாமா? 

 ரமா எக்நாத் ராவை பேட்டி கண்டாள்

சரபோஜி மன்னரிடம் நரஸ்துதி பண்ண மாட்டேன் என்று தியாகையர் கூறினாராம்! ஒவ்வொரு உயிரிலும் கடவுளைக் காணும் ஐக்கிய பாவம் தியாகையருக்கு இல்லை. 

இதே போல அடுத்த மூன்று நாட்களிலும் ஏழு பேரும் மூவேழு மக்களைப் பேட்டி கண்டார்கள். பாடகர்கள் பாடும் பாட்டைக் கூட கேட்காமல் பேட்டி கண்டார்கள் ஆரோகநாதன் அண்ட் கம்பெனி.

அடுத்த பகுள  பஞ்சமியில் ஆரோகநாதன் “ஐயரும் ஐயாறும்’ என்ற ஆங்கில நூலைத்  தன் நண்பரிடம் காட்டினார். 

‘இந்த மாதிரி ரிசர்ச்சை என் ஆயுசிலேயே பார்த்தது கிடையாதுடா! மண்டூகங்கள் நிறைஞ்ச இந்தத் தேசத்திலா இதை வெளியிடறது?’ என்று சொல்லி அமெரிக்காவிற்கு அதை அனுப்பினார். 

சங்கீத மூவரில் மற்ற இருவரைப் பற்றியும் இதே மாதிரி திறனாய்வு எழுதட்டும். 20000 டாலர் ஸாங்ஷன் செய்கிறோம் என்று பதில் வந்ததாம்.அவற்றையும் எழுதி முடித்து மாணவிகளுக்கு நன்றி சொன்னாராம்  ஆரோகநாதன். 

இப்போது கிரிஜா, தியாகையர் பாடியது தமிழ்த் தெலுங்கா தெலுங்குத் தெலுங்கா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறாள்! வெற்றி பெற்றால் கிராண்ட் கென்யான் பல்கலைக் கழக ‘டாக்டர்’ பட்டம் அவளுக்குக் கிடைக்கும்! 

சூப்பர் டக்கர் வசனங்கள்!

ஜானகிராமன் ஜானகிராமன் தான்!

அந்தக் காலத்து நேடிவிடியை அப்படியே  படம் பிடித்துப் போடும்  கலை அவருக்குக் கை வந்தது.