பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)

(சென்ற இதழின் தொடர்ச்சி )

image

அன்புடையா  ளருகினிலே யிருக்கின்ற கிளுகிளுப்போ 
  கயல்விழியாள் கண்பார்வை பட்டதன் சிலுசிலுப்போ 
இன்பத்தி  னுச்சத்தில் முறுவலோடு விழிமூடி 
  தூங்குகின்ற பாவனையில் பள்ளிகொண்ட பெருமாளை 
அன்போடு காதலும் கருணையு  மொருசேர 
  மையலோடு தையலால் பார்க்குமவ் வருட்பார்வை 
இனியவளின் கண்ணசைய வருடுகின்ற தென்றலாய் 
  அடியேனைத் தழுவட்டும் செல்வங்கள் கொடுக்கட்டும்!

மாலனவன் மார்பினிலே ஒளிர்கின்ற கௌஸ்துபமே 
  தேவியவ ளருளோடு மின்னுகின்ற கண்கள்முன் 
பொலிவில்லா மாலைபோல் மங்கியே தெரிகிறது  
  இணையில்லை ஒளிர்கின்ற கண்களுக்குப் புரிகிறது
உலகினையே களிப்பூட்டும் நாயகனாம் முகுந்தனையே 
  கண்வெட்டால் களிப்பூட்டும் திருமகளின் கண்பார்வை 
நிலவொத்த தண்மையோடு தென்றலாய் மெதுவாக 
  அடியார்மேல் பரவட்டும் மங்களம் பொங்கட்டும் !

கார்மேக வண்ணனாம் கமலக் கண்ணனவன் 
  ஈரமிகு நெஞ்சினிலே எழிலோடு கொலுகொண்ட 
பார்க்கவ மகரிஷியின் திருமகளாம்  நங்கையவள் 
  மின்னல்போல் ஒளிர்கின்ற முழுமுதல் ஜோதியவள் 
ஈரெழு வுலகங்கள் வளமோ டியங்கிடவே 
   இராப்பகலா யருள்கின்ற கருணையின் வடிவுமவள் 
தரணிவாழ் மாந்தர்கள் வழிபடும்  தாயுமவள் 
  அருட்பார்வை வீசட்டும் மங்களம் பொங்கட்டும்!

மாலனவன் மதுபோன்ற அரக்கற்குக் காலனவன் 
  மங்கள இசையோங்கு மில்லத்து வாஸனவன் 
நல்லோர்க்கு நேசனவன் துஷ்டருக்கு துஷ்டனவன் 
  அடியார்க்கு அடிமையவன் அன்பிற்கு தாஸனவன் 
புலங்களையே ஆட்கொண்ட யோகியவ  னிதயத்தை 
  சலனமுறச் செய்வித்த  ஜில்லென்ற அருட்பார்வை 
அலைமகளாம் திருமகளின் ஈர்க்கின்ற வருட்பார்வை 
  எம்மீது படட்டும் மங்களம் பொங்கட்டும் 

(இன்னும் பொன்மகள் வருவாள்.. பொருள்கோடி தருவாள்!)