மீனங்காடி – ஆறாம் பகுதி (தொடர் பகுதி)

image

“ அந்த பெரிய மீன் என்ன ஆகாயத்தில் பறக்கிறதா?” மேரி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  மறுபடியும் இன்னொரு மீன் உயரே பறந்தது.  அந்த ‘மீனங்காடி’ ஆள் தான் மீன்களை ஒவ்வொன்றாக எடுத்துத் தூக்கி ‘ஸ்டைலாக’ எறிய அவை இருபது அடிக்கு மேலே பறந்து போய் விழுகிறது

“இதோ பாருங்கள் ! ஒரு பெரிய இறால் மீன் பம்பாய்க்குப் போகுது’ என்று கத்த மற்ற மீன் கடைத் தொழிலாளிகள் அனைவரும் கோரஸாக ‘போகுது பார், போகுது பார்’ என்று திரும்பிக் கத்தினர்.  தடுப்புக்கு அந்தப் புறம் இருந்த கடைக்காரன் ஒருத்தன் அந்த மீன்களை லாவகமாக ஒற்றைக் கையால் பிடித்து தலை வணங்கி ‘சல்யூட்’ அடித்து நிற்க, மற்ற மக்கள் எல்லோரும் கை தட்டி சந்தோஷத்தில் சிரித்தனர். அவர்களது அந்த ‘சந்தோஷ அலை மேரிக்கு ஆச்சரியமாக இருந்தது.

image

அவளுக்குப் பக்கத்தில் இன்னொரு மீன்காரன் ஒரு சிறிய மீனைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் வாயை இப்படி அப்படி  அசைத்து அருகில் இருந்த ஒரு சிறுவன் கிட்டே மீன் பேசுவது போல பேசிக் கொண்டு இருந்தான்.

இன்னொரு வயதான மீன்காரன் ‘கேளுங்க, கேளுங்க ! மீனைப் பத்திக் கேளுங்க’ என்று ‘தேவுடா தேவுடா’ ஸ்டைலில் பாடிக் கொண்டிருந்தான்.

கேஷ் கவுண்டருக்கு மேலே இரண்டு பெரிய கடல் நண்டுகள் நடனமாடிக் கொண்டிருந்தன. டை கட்டிக் கொண்டு நின்ற அந்தக் கும்பல் அவர்கள் வாங்க வந்த மீன்களோடு கடைக்காரர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘பக பக’ என்று சிரிக்கத் தொடங்கினர்.  மொத்தத்தில் அந்த இடம் ‘ஒரு விளையாட்டு மைதானம்’ போலத் தான் தோன்றியது. மேரி தன் கவலையெல்லாம் மறந்து வாய் விட்டுச் சிரித்து அவற்றை ரசிக்க ஆரம்பித்தாள். !

டீ கப்பைக் கையில் வைத்திருக்கும் அனைவரும் ஆபீசர்கள்.-நல்ல பதவியில் இருப்பவர்கள் போலத் தோன்றுகிறது. இந்த மட்ட மத்தியானத்தில் மீன் வாங்க வந்தார்களா? இல்லை வேடிக்கை பார்க்க வந்தார்களா? ஒன்றும் புரியவில்லை.

அந்தக் கூட்டத்தில் ஒரு மீன் கடைக்காரன் தன்னையே குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை மேரி வெகு நேரம் உணரவில்லை. அவளுடைய சீரியஸான முகமும் அதில் தெரியும் ஆர்வமும் அந்த மீனங்காடிக்காரனை அவள் பக்கம் வரவழைத்தது.

image

“ என்ன ஆச்சு உங்களுக்கு? டீ கப் தொலைந்து போச்சா?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே வந்தான்.  நல்ல சுருட்டை முடியுடன் வாட்ட சாட்டமாக அந்த மீனங்காடி இளைஞன்,

(தொடரும்)