ராஜராஜன் சோழன் உலா

image

சென்ற வார  முடிவில் …….

சிவாச்சாரியார் நடுநடுங்கி விட்டார். தனக்கு ஏன் இந்த விபரீத ஆசை வந்தது? இனி நம் கதி என்னாகுமோ என்று  தயங்கித்  தயங்கி அவர்கள் முன்வந்து கண்மூடி  கைகூப்பிநின்றார்.    

   ( தொடரும்)

இனி இந்த வாரம்   … .

image

அதற்குள் பெண்கள் வரிசையிலிருந்து செம்பியன்  மாதேவியார் முன்னால் வந்து, “ கவலைப்படாதீர்கள் சிவாச்சாரியரே! எம்பெருமானுக்கு தினமும் பூஜை செய்யும் உங்களை யாரும் ஒன்றும் செய்துவிட மாட்டார்கள் “ என்றார்.

சிவாச்சாரியாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

அப்போது வந்தியத்தேவன் குந்தவையின் காதில் ஏதோ ரகசியம் கூறுவது ராஜராஜன் கண்ணில் பட்டது.

“என்ன அக்கா! வந்தியத்தேவர் என்ன சொல்லுகிறார்? சத்தமாகத் தான் சொல்லட்டுமே! அனைவரும் கேட்போமே!”

வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “மன்னர் மன்னா! நீங்கள் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை. இத்தனை பேர் இருக்க என்னைப் போய் நந்தியை நகர்த்தி சிவாச்சாரியாரை அழைத்து வரச் சொன்னீர்களே! இது நியாயமா? நந்திக்குப் பக்கத்தில் வந்தாலே என் கால் வெடவெடவென்று ஆடுவது உங்களுக்குத் தெரியுமா? – என்று கேட்டான்.

“ஏன் அப்படி?  நந்தியிடம் இவர் என்ன வாலை ஆட்டினார்?” – சிரித்துக்கொண்டே கேட்டாள் வானதி.

“குந்தவி நீயே சொல்லிவிடு! ஆயிரம் வருஷங்களாக நாம் கட்டிக் காத்த ரகசியம் இன்று சிவாச்சாரியாரால் உடையப் போகிறது – வந்தியத்தேவன் சொன்னான்.

அருண்மொழியும் அதற்கு மேலாக, “அப்படி என்ன ரகசியம் அக்கா எனக்குத் தெரியாமல்? சிதம்பர ரகசியத்தைவிட பெரியதாக இருக்கும் போல இருக்கே?” – சிரித்துக் கொண்டே கேட்டார்.

“சொல்லுங்கள் அத்தை!” ராஜேந்திரனும் சின்னக் குந்தவையும் கெஞ்சினார்கள்!

“பெரியதாக ஒன்றும் இல்லை தம்பி! எனக்கும் இவருக்கும் திருமணம் ஆன புதிதில் இலங்கைக்கு ஒரு மாதம் போய் விட்டு வரலாம் என்று கோடிக்கரைக்கு வந்தோம். அங்கே குழகர் ஆலயத்துக்குச் சென்று வந்தோம். அப்போது இவர் என்னை பயமுறுத்துவதற்காக அங்கிருந்த நந்திக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்! நான் பதறிப்போய் எல்லா இடத்திலும் தேடிக் காணாமல் கடைசியில் நந்தி தேவரை வேண்டிக் கொண்டு அவர் தலையில் கை வைத்தேன். நந்தி பகவான் என் வேண்டுகோளைக் கேட்டுப் பொத்தென்று கீழே விழுந்தார் – இவரது கால் கட்டை விரல் மேலே. அப்போது இவர் அலறிய ஆந்தை அலறல் இன்றும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து இவர் நந்தி கிட்டேயே போக மாட்டார். அப்படி ஒரு பயம். அந்த பயத்தைப் போக்கத்தான் தஞ்சைக் கோவிலில் ஒரு பெரிய நந்தியை வைக்கச் சொன்னேன்!”

image

"அதுதான் திருமணம்  ஆன புதிதில் வந்தியத்தேவர் கால் கட்டுப் போட்டுக்கொண்டுத்  திரிந்தாரா? ” – வானதியின் கேலி தொடர்ந்தது.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிவாச்சாரியாருக்கும் இவர்களின் உரையாடலைக் கேட்டு ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் உணர்ந்தார்.

“மன்னர் மன்னா! தங்கள் சதயத் திருநாள் உலா பற்றிக் கர்ண பரம்பரையாகக் கதை ஒன்று இருந்து வந்தது. ஆனால் யாருக்கும் அது உண்மையா என்று பார்க்கத் துணிவு இல்லை. இன்று மாலையிலிருந்து ஓர் அமானுஷ்யக் குரல் ‘‘நடுநிசியில் கோவிலுக்குப் போ’  என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இங்கு வந்து உங்கள் அனைவரையும் பார்த்த பிறகு தான் நான் பெற்ற பாக்கியம் புரிந்தது.”

image

“சிவபெருமானைத் தொட்டுத் தடவி அபிஷேகம் செய்து, அர்ச்சனை கூறி அலங்கரிக்கும் திருக்கரங்கள் அல்லவா தங்களுடையது! தங்களைக் காண்பதில் நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம். நீங்களும் எங்கள் உலாவில் கலந்து கொள்ளுங்கள்” என்றார் ராஜராஜன் .

‘நீர் தான் எனக்குச் சரியான தோழன்! என்று சிவாச்சாரியார் அருகில் வந்தார் மதுராந்தக உத்தம சோழன்! “ என்ன திகைக்கிறீர்? நானும் உம்மை மாதிரி சிவ கைங்கர்யம் செய்து நிம்மதியாக இருந்தேன்! அருண்மொழி என் கையில் செங்கோலைக் கொடுத்துவிட்டு ஓடி விட்டான். அதை அவனுக்குத் திருப்பிக் கொடுக்க எத்தனை வருடம் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?

வராகி அம்மன் சிலை அருகே உலா வந்ததும் அனைவரிடத்தும் கூச்சல் கும்மாளம். ‘இன்றைக்கு வந்தியத்தேவன் தான் முதலில்’ என்ற ராஜராஜனின் ஆலோசனையை வந்தியத்தேவன் மறுத்தான். “முடியவே முடியாது! நான் சுவற்றில் முட்டிக்  கொள்வதை நீங்கள் வேடிக்கைப் பார்த்துச் சிரிக்க வேண்டுமா?” என்று ஆவேசமாக மறுத்தான்.  

“சரி சரி பெண்கள் முதலில்” என்று குந்தவை சொன்னதும் அனைவரும் ஒப்புக் கொண்டனர். ‘அப்பாடா’ என்று வந்தியத்தேவன் பின்னால் ஓடிப் போனான்.

கருவூர் ஸ்வாமிகளே! நீங்கள் சொன்னபடிப்  போட்டி ஒன்று இங்கு வைப்போம்! கண்ணைக்  கட்டிக் கொண்டு கையில் பதும மலரை எடுத்துக் கொண்டு வராகி அம்மன் எதிரிலிருந்து பிராகாரத்தில் உள்ள ஐந்து முழப் பாதையில் அடி பிசகாமல் கோடியில் உள்ள துர்க்கை சிலை வரைக்கும் செல்ல வேண்டும். பாதை தவறி வந்தவர்கள் தோற்றவர்கள். வெற்றி பெற்றவருக்குப்  பதும மலர்! சரியா? என்று ராஜராஜன் வினவினார்.

“எல்லோரும் வெற்றி பெற்றுவிட்டால்?” – இது சின்னக் குந்தவையின் கேள்வி.

“யாருமே வெற்றிபெறாவிட்டால்?” – இது ராஜேந்திரனின் சந்தேகக் கேள்வி.

“எல்லாவற்றிற்கும் ஒரே பதில்! பதும மலர் சிவபெருமானின் திருவடியைச் சேரும்! அதற்கு சிவாச்சாரியார் உதவுவார்.” –என்றார் ராஜராஜன் .

image

அதற்குப் பின் நடந்த கண்கட்டு வித்தையைக் காணக் கண் கோடி வேண்டும். எவ்வளவு பெரிய மனிதர்கள் சிறு குழந்தை போல நடந்து பாதை விலகி அனைவரின் சிரிப்புக்கும் ஆளாகும் போது – சிவாச்சாரியார் தான் பெற்ற இப் பேற்றை  எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார்.

போட்டியில் யாரும் வெற்றி பெறவில்லை. ராஜராஜன் கடைசி வரையில் சரியாக வந்து கொண்டிருந்தபோது வந்தியத்தேவன் ‘களுக்’ கென்று சிரித்ததால் தடுமாறித் தோல்வியுற்றார்.

“நான் போட்டியில் கலந்து கொள்ளலாமா?” என்று கேட்டுக் கொண்டு வந்தான் அப்பொழுது தான் உலாவில் கலந்துகொண்ட ஆதித்த கரிகாலன்.

“ஆஹா! வாருங்கள் அண்ணா! வாருங்கள்! பல ஆண்டுகள் வராமல் இருந்த தாங்கள் இந்த ஆண்டும் வரவில்லையோ என்று சற்று முன் தான் பேசிக் கொண்டிருந்தோம். தாங்கள் வந்து இந்த உலாவைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள்!” மனதார வரவேற்றார் ராஜராஜன்.

“இல்லை தம்பி! ஒவ்வொரு வருடமும் வரவேண்டும் என்று தான் நினைப்பேன்! ஆனால் ஏதோ ஓரு நினைவு தடுத்து விடுகிறது. இன்று தாமதமானாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓடோடி வந்தேன்!” என்றான் கரிகாலன்.

பதும மலரை வாங்கிக் கொண்டுக் கண்ணைக் கட்டிக் கொண்டு சிங்க நடை போட்டு நடந்தான் ஆதித்த கரிகாலன். பதங்கள்  இம்மி பிசகவில்லை. நேராக வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல சரியாக இலக்கை அடைந்தான். அனைவரும் ஆஹாகாரம் செய்தார்கள்!

“எப்படி அண்ணா! உங்களால் வெற்றி பெற முடிந்தது? – ராஜராஜன் வினவினார்.

“எல்லாம் என் தோழன் வந்தியத்தேவன் கொடுத்த உபாயம் தான்.”

“ஆனால் அவர் தோற்று விட்டாரே!

“அவனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தான் தெரியும்! எனக்கு ஜெயிக்கத் தெரியும்”!

“சரி சரி! நானே சொல்லி விடுகிறேன்! கரிகாலரிடம் துர்க்கை அம்மன் சிலைக்குப் பின்னால் வீரபாண்டியன் ஒளிந்து இருக்கிறான் என்று சொன்னேன். அவ்வளவு தான். நேரே சென்று கொன்று விட்டார்.. இல்லை வென்று விட்டார். “

‘அருமை! அருமை! என்று அனைவரும் சிரித்தனர். அந்த சிரிப்பு அலை அறுந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது சிவாச்சாரியார் கேட்ட அடுத்த கேள்வி!

 (அடுத்த இதழில் முடியும்)

.