ராஸ லீலை

 image

வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !
சத்திய வார்த்தை   இது  நித்தமும் நான் சொல்வேன் !
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !

எத்தனையோ பெண்களின்  மனத்தை மயக்கி விட்டு
அத்தனைக்   கண்களையும் நின்பாற்  ஈர்த்து விட்டு
சித்தினிப்   பெண்களின்  சித்தம் கலக்கி விட்டு
பத்தினிப்    பெண்களின்  பாதம்  பிறழ  விட்டு
மத்தினில் கடைந்த  தயிரென  மாற்றி
கத்தியின்றி  ரத்தமின்றி  மனதைப்  பறித்து விட்ட
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !

பத்தினில்  முத்தான  பரமன்  நீயன்றோ?
வித்தினில்  விளைந்த புத்தளிர்  போல
நெத்தியில் குறுவாய்  முத்தமும் பதித்தாய்
மத்தள  மனத்தினில் சத்தத்தை  எழுப்பி
சத்தினைப்  பிழிந்த  சக்கையாய்  மாற்றி
சத்தமின்றி  அத்துமீறி  என்னுள்  புகுந்து  விட்ட
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !

மெத்தென  யமுனை  மெத்தையில் கவிழ்த்து
வித்தைகள் யாவையும்  சுத்தமாய்ப்     பதித்து
சித்துக்கள்  பலசெய்து  தலைசுத்த   வைத்து
தித்திக்கத்  தித்திக்க  முத்தங்கள்  தந்தாய்
அத்துடன்  முடிந்திடும் கதை இது   இலையே !
பத்திரமாய்  சித்திரமாய்  வித்தினை   விதைத்து  விட்ட
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !