ஸ்வாமிஜி

ஸ்வாமிஜி

image image

“….  ஆகவே மனித வாழ்க்கை நிலையற்றது. நமது கர்மங்களும் கிரியைகளும் தொடர்ந்து வரும். பகவானோட பாதார விந்தத்தைப் பணிந்தால் தான் மனசில் அமைதி உண்டாகும். அதுக்கு முதலில் ஆசையை  அடக்கணும். ஆசை தான் மனிதனின் மூலச் சத்துரு. ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் கேளுங்கோ! நான் சின்னப் பையனா இருக்கறச்சே கடலை உருண்டைன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அதைச் சாப்பிட்டால்  வயத்திலே வலியும் வரும். இருந்தாலும் அந்த ஆசையை விட  முடியலே. அதைத் தர மாட்டேன்னு சொன்னதுக்காகப்  பெத்த அம்மாவையே அருவாமணையால வெட்டப் போயிட்டேன். ஒரு சின்ன ஆசை எவ்வளவு பெரிய பாவச் செயலுக்கு…  “

“சாமிநாதன்.. என் சாமிநாதன்! “

கூட்டம் அவளைத் திரும்பிப் பார்த்தது. ‘ஏ  பாட்டியம்மா  சும்மா உட்காரு. “ அவள் உட்காரவில்லை. தட்டுத் தடுமாறி ஸ்வாமிஜி பிரசங்கம் செய்துகொண்டிருந்த மேடைக்கு அருகே சென்றாள்.

“சாமிநாதா! என்னைத் தெரியலையாடா?”  கிழவியின் குரலில் இருந்த வேகம் ஸ்வாமியைத் திரும்ப வைத்தது. “ யார் அந்த பைத்தியம் ஸ்வாமிஜி கிட்டே  தகராறு பண்ணறது? கிழவியை விரட்டு’ கூச்சல் எழுந்தது.

‘சற்று அமைதியாக இருங்கள்’ – ஸ்வாமிஜியின் கணீரென்ற குரல் அனைவரையும் அமைதிப்படுத்தியது. அம்மா! மேடைக்கு வா! நான் உன் சாமிநாதன் தான்’ என்றார். கண் தெரியாமல் கை கால் வெட வெடவென்று நடுங்கிக் கொண்டிருக்கும் அவளை  ஸ்வாமிகளே கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவளோ சுற்றுப்புறத்தை மறந்தாள்.

“சாமிநாதா! நீ செஞ்சது உனக்கே நல்லா இருக்காடா ? செல்லத்தையும் குழந்தையையும் அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டியேடா பாவி! “ அவளுக்கு மூச்சு இரைத்தது.ஆனால் அவள் வீசிய சொல்லம்பு மைக் வழியாக அனைவர்  காதிலும்  விழுந்தது. மறுபடியும் குழப்பம் ஏற்படும் போல இருந்தது. ஸ்வாமிஜி தன் ஒற்றைக் கரத்தாலே அனைவரையும் அடக்கினார்.

‘அம்மா! நீ சொன்னது சரி தான். என் மனைவியையும் குழந்தையையும் உன்னையும் விட்டுவிட்டு நான் போனது உண்மை தான். ஆனால் அது தான் விதி – கர்ம பலன். அதை நீயோ நானோ யாருமோ மாற்ற முடியாது. எல்லாம் அவன் செயல்! – ஸ்வாமி பெற்றவளுக்கு உபதேசம் செய்தார்.

“எதுடா அவன் செயல்? சோத்துக்கு வழி இல்லாம செல்லமும் குழந்தையும் துடிதுடிச்சுச்  செத்தாளே !அதுவா  அவன் செயல்? கை ஓடிஞ்சு போற அளவுக்கு ஹோட்டல்லே பாத்திரம் தேச்சு வயத்தைக்  கழுவிக்கிட்டு வர்ரேனே இதுவா அவன் செயல்? இல்லேடா! இதெல்லாம் உன் செயல். நீ ஒழுங்கா எங்களோட இருந்திருந்தா இந்த கதி எங்களுக்கு வருமா? நீ பொறந்த அன்னிக்கு கையையும் காலையும் உதைத்துக் கொண்டு  அழுத போது அவன் பாத்துப்பான்னு விட்டுட்டுப் போயிருந்தேன்னா தெரிஞ்சுருக்கும்!. உனக்கு மாந்தம் வந்தப்போ சுடற வெயில்லே உன்னைத் தூக்கிட்டு ஓடினேன் பாரு! உன்னை வளர்த்துப் பெரிய மனுஷனா ஆக்கினேன் பாரு! அதுக்குப் பலன் என்னை அனாதையா விட்டுட்டு ஓடினே! இது நியாயமா? இங்கே இருக்கிற அத்தனை பக்தர்களும் சொல்லுங்கோ! சொல்லுடா? சொல்லு! “

ஊழித்தீ வெடித்தது.

‘அம்மா! அம்மா!’ ஸ்வாமிகளின் கண்களில் கண்ணீர் பெருகியது. "நான் செய்தது தவறு தான். என் கடமையை விட்டுட்டுப் போனது மாபெரும் தவறு . அதுக்கு மன்னிப்பே கிடையாது. இப்பொழுதே அதற்குப் பரிகாரம்  தேடறேன்! இந்த நிமிடம் முதல் நான் ஸ்வாமிஜி இல்லை. வெறும் சாமிநாதன் தான். வா! அம்மா போகலாம்! “

நடந்தார்கள்!