குட்டீஸ் லூட்டீஸ் (கோவை சங்கர்)

image

நான் என்னுடைய ஆறுவயது மகள் ரமாவுடன் பீட்ஸா  வாங்க பீட்ஸா கார்னருக்குப் போனேன். மெனு கார்டைப் பார்த்துக்கொண்டிருந்த ரமா, “ அப்பா இங்கே வாங்க வேண்டாம். இங்கே சாப்பிட்டா நான் குண்டாயிடுவேன்’ என்று அலறியபடியே மெனு கார்டைக் காட்டினாள்.

 ‘FAT FREE SPECIAL’ என்று அச்சடிக்கப் பட்டிருந்தது.

நானும் கடையில் வேலை செய்பவர்களும் சிரித்த சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.  

‘FAT FREE என்றால் கொழுப்பே சேர்க்காமல் பண்ணிய பீட்ஸா என்று அர்த்தம்’ என்று என் மகளுக்குப்  புரிய வைக்க முயன்றது ஒரு தனிக் கதை. 

https://www.tumblr.com/audio_file/kuvikam/85702175727/tumblr_n5d1zk9oCE1sp6th0?plead=please-dont-download-this-or-our-lawyers-wont-let-us-host-audio

( Click the Play Button to listen to the audio version of the poem)

ஓ நாராய்! ஓ நாராய்!
உன் குஞ்சுக்கென்ன மீன் பிடிக்க
சொல்லித் தர வேண்டுமா? – அது
தத்தித் தத்தித் தாவறதை
பாக்கறப்பத் தாவுதே
அது என் உள்ளம்
என்றென்றும் துள்ளும் – ஓ நாராய்!

காலையிலே மாலையிலே சாலை ஓரச் சோலையிலேகோடையிலே வாடையிலே ஓடிவரும்  ஓடையிலே

ஓடும் சின்ன மீன்கள் என்றும்
தேவையில்லை என்று சொல்லி
பெரிய பெரிய மீன்கள் என்று
கண்ணில் இன்று தோன்றும் என்று
ஒற்றைக் காலில் நின்று கொண்டு
மோனத் தவம் புரிந்து
மீனுக்காகத் தவிக்கும்
ஓ! நாராய்!

மாங்காட்டுப் பாடல் (ஐந்தாம் வாரம்)

image

பல்லுயிர்         காத்திடும்         பகலவனாய்    வாஎன்தாயே!
பாலைப்           புகட்டிடும்          அன்னையாய்   வாஎன்தாயே!
பிள்ளைகள்     சிரித்திடும்         பொம்மையாய் வாஎன்தாயே!
பீடுடைய         பெருமானை       உடன்அழைத்து வாஎன்தாயே!
புல்லாய்ப்        பிறந்தாலும்        பனித்துளியாய் வாஎன்தாயே!
பூவண்டாய்     இருந்தாலும்      தேன்துளியாய் வாஎன்தாயே!
பெண்ணாய்     என்தோளில்      துஞ்சிவிட      வாஎன்தாயே!
பேரனாய்         பேத்தியாய்        கொஞ்சிட     வாஎன்தாயே!
பையனாக`      வந்தென்னை    கரையேற்ற     வாஎன்தாயே!
பொங்கிவரும் மாங்காட்டில்    தங்கிவிட     வாஎன்தாயே!
போகங்கள்      விளைந்திட      மேகமாய்       வாஎன்தாயே!
பௌர்ணமி     இரவினிலே      வெளிச்சமாய்   வாஎன்தாயே!
ப்ரியமுடன்    அழைக்கின்றேன் காத்திடுவாய் எனை நீயே!

புல்லரிப்பு

image

வெயில் உனக்கையாக  இருந்தது ஊட்டி பொடானிகல் தோட்டத்து புல்வெளியில் உட்கார்ந்திருந்த சுகுமாரனுக்கு.

‘இது தான் சுகம்’ என்று புல்வெளியில் படுத்து உருண்டான்.

‘சுகமோ சுகம்’ என்று அந்தக்காலத்துப் பாட்டைப் பாட ஆரம்பித்தான்.

முதுகுக்குக் கீழே ஏதோ அரித்தது போல இருந்தது. சொறிந்தான்.

‘சுகம் எங்கேடா? சொறியிற இடத்தில்’ என்று சினிமா வசனம் பேசினான். ‘புல்லரிப்பு இது தானோ’ என்ற ‘பன் ’ வேற.

திரும்பத் திரும்ப அரித்தது. கழுத்திலிருந்து கால் வரை அரித்தது.

ஓடினான் ஓடினான் டாக்டரிடம் ஓடினான்.

அலர்ஜியாம்! ஆயிரம்  அலர்ஜியில் அவனுக்கு ‘புல்’ அலர்ஜி.

image

ஒன்று முதல் பத்து வரை ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய என்று ஒரு முறை நீ சொல்லுவாய் !
ஓங்கார ஓசை தினம்  கேட்கும் என்பது உண்மையே !

ஓம் நமசிவாய என்று இரு முறை நீ சொல்லுவாய் !
இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் கிட்டும் நிச்சயம் !

ஓம் நமசிவாய என்று மூன்று முறை  சொல்லுவாய் !
முக்கண்ணன் மனமகிழ்ந்து முக்தி தருவார் திண்ணமே !

ஓம் நமசிவாய என்று நான்கு முறை  சொல்லுவாய் !
நான்குவேதம் படித்த பலன் உன்னைச் சேரும் உண்மையே!

ஓம் நமசிவாய என்று ஐந்து முறை  சொல்லுவாய் !
ஐங்கரனும் அருகில் வந்து ஆசி கூறிச் செல்லுவார் !

 ஓம் நமசிவாய என்று ஆறு முறை  சொல்லுவாய் !
அறுமுகனும் திருவருளை தேடி வந்து தந்திடுவார் !

ஓம் நமசிவாய என்று ஏழு முறை  சொல்லுவாய் !
ஏழு சுரமும் உன் நாவில் இழையும் என்பது சத்தியம் !

ஓம் நமசிவாய என்று எட்டு முறை  சொல்லுவாய் !
எட்டுத் திக்குப் பாலகரும் வாழ்த்தி அருளிச் செல்லுவார் !

ஓம் நமசிவாய என்று ஒன்பது முறை  சொல்லுவாய் !
நவகோளும் உன்னைச் சுற்றி நல்லதையே செய்திடும் !

ஓம் நமசிவாய என்று பத்து முறை  சொல்லுவாய் !
பத்துப் பத்தாய் புண்ணியங்கள் பற்றி வரும் சத்தியம் !

ஓம் நமசிவாய என்று அனுதினம் நீ   சொல்லுவாய் !
உனக்கு நன்மை உயிர்க்கு நன்மை உலகுக்கெல்லாம் நன்மையே !!

தி ஜானகிராமனின் “ஐயரும் ஐயாறும்”

image

image

திருவையாற்றுக்கு தியாகையர் பஞ்ச கீர்த்தனை சமயத்தில்   ஆரோகநாதன் அண்ட் மகளிர் சிஷ்யை கம்பெனி ஓர் ஆராய்ச்சிக்காக வந்திருக்கின்றனர். தியாகப் பிரம்மம் இருந்த காலத்தில் திருவையாறு எப்படி இருந்தது என்பது குறித்த ஆராய்ச்சி.

இதுதான்  ஜானகிராமன்  கதையின் கரு. 

 காலையில் சோம்பல் முறித்து எழுந்து காவேரியில் குளித்து விட்டு சோழநாட்டுக்கே உரிய இட்லி,ரவா தோசை,டிகிரி காபி சாப்பிட்டுவிட்டு பேப்பர் பேனா சகிதமாக ஆராய்ச்சிக்குக் கிளம்பினர்.

மாணவிகள் குறிப்பிட்டுள்ள சில  வீடுகளுக்குச் சென்று அங்கிருப்பவர்களை  பேட்டி  காண வேண்டும் – புள்ளி விவரங்கள் சேகரிக்க வேண்டும். 

image

மாலதி ஆனந்தலக்ஷ்மிப் பாட்டியை  (வயது 102) பேட்டி எடுக்கிறாள்! 

“நான் மூணாவது இளையாளா அவருக்கு பத்து வயதிலே வாக்கப் பட்டேன். எனக்கும் அவருக்கும் முப்பத்தாறு வயது வித்தியாசம். அவர் நினைவு தெரிஞ்ச நாளா தியாகராஜ ஸ்வாமியைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் … அவரோட பாட்டையெல்லாம் இவர் பாடுவார்… இன்னிக்கு இவா பாடறதைக் கேட்டா இங்கிலீஷிலே பாடறாப்பலே இருக்கு.  

அது சரி! தியாகைய்யர் எப்படி இருப்பாராம் ?

வெடவெடன்னு ன்னு சேப்பா இருப்பாராம்! நான் பார்க்கக்   கொடுத்து வைக்கலே!

அவருக்கு என்ன பக்ஷணம்  சாப்பாடு எல்லாம் பிடிக்கும்? 

இதெல்லாம் எதுக்குடி கேக்கறது இந்த பொண்ணு?

அவர் திருப்பதிக்கு தஞ்சாவூர் வழியாப்   போனாரா இல்லை கும்பகோணம் வழியாப்   போனாரா? 

திருப்பதிக்கு போயிட்டு வந்தார். கொட்டையூர் வழியாப்   போனா என்ன கண்டியூர் வழியாப்  போனா என்ன? 

image

கிரிஜா ஞானஸ்கந்தனைப் பேட்டி காணுகிறாள்!

"எனது முப்பாட்டனாரின் முப்பாட்டனார் ஐயா தீட்சிதருக்குத் தியாகையரைக்  கண்டாலே  ஆகவில்லை.கலைகளில் இலக்கியம் தான் சிறந்தது-சங்கீதம் கடைசி வகை. தியாகையர் நாவல் எழுதியிருந்தால் நோபல் பரிசு வாங்கியிருப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம் ”

அலமு வைத்திலிங்க ஆசாரியரை பேட்டி  கண்டாள்.

“ எனது முன்னோர்கள் தான் தியாகையருக்கு ஜால்ரா உஞ்சவிருத்திப்  பாத்திரம் செய்து தந்தவர்கள்!”  இதனால் தான் இவரது வம்சத்தின்  உறவினர்கள் தென்னாப்பிரிக்காவிலும் இலங்கையிலும் செல்வத்தில் புரளுகின்றனராம்  "

உமா  ஜப்யேசக் கவிராயரைப் பேட்டி கண்டாள்!

 என் பெரியன்னையின் முப்பாட்டனார் ஐயாரப்ப கவிராயர். அவர் தியாகையரிடம் தனியன்பு கொண்டவர். அதனால் தான் அவரிடம்  " தெலுங்கில் பாடாதீர்! மக்களுக்குப் புரியும் தமிழில் பாடுவீர்!என்று பலமுறை மன்றாடியும் ஐயர் கேட்கவில்லை! “தமிழ் நாட்டு இசைப் புலவர்கள்  நும் பாக்களின் பொருளனைத்தையும் சிதைத்துக் கொல்வார்கள் என்றார்.” அது மெய்யாகிவிட்டது!

அம்புஜம் பிரணதார்த்திஹர சர்மாவைப் பேட்டி கண்டாள்!

தியாகையர் வருடா வருடம் சீதா கல்யாணம் செய்வதை இவருடைய முன்னோர் எதிர்த்தார்களாம். ராமன் ஆஃப்டர் ஆல் மநுஷன். அவனைத்  தெய்வத்துக்குச்  சமானமா வைத்து கல்யாணம் செய்யலாமா? 

 ரமா எக்நாத் ராவை பேட்டி கண்டாள்

சரபோஜி மன்னரிடம் நரஸ்துதி பண்ண மாட்டேன் என்று தியாகையர் கூறினாராம்! ஒவ்வொரு உயிரிலும் கடவுளைக் காணும் ஐக்கிய பாவம் தியாகையருக்கு இல்லை. 

இதே போல அடுத்த மூன்று நாட்களிலும் ஏழு பேரும் மூவேழு மக்களைப் பேட்டி கண்டார்கள். பாடகர்கள் பாடும் பாட்டைக் கூட கேட்காமல் பேட்டி கண்டார்கள் ஆரோகநாதன் அண்ட் கம்பெனி.

அடுத்த பகுள  பஞ்சமியில் ஆரோகநாதன் “ஐயரும் ஐயாறும்’ என்ற ஆங்கில நூலைத்  தன் நண்பரிடம் காட்டினார். 

‘இந்த மாதிரி ரிசர்ச்சை என் ஆயுசிலேயே பார்த்தது கிடையாதுடா! மண்டூகங்கள் நிறைஞ்ச இந்தத் தேசத்திலா இதை வெளியிடறது?’ என்று சொல்லி அமெரிக்காவிற்கு அதை அனுப்பினார். 

சங்கீத மூவரில் மற்ற இருவரைப் பற்றியும் இதே மாதிரி திறனாய்வு எழுதட்டும். 20000 டாலர் ஸாங்ஷன் செய்கிறோம் என்று பதில் வந்ததாம்.அவற்றையும் எழுதி முடித்து மாணவிகளுக்கு நன்றி சொன்னாராம்  ஆரோகநாதன். 

இப்போது கிரிஜா, தியாகையர் பாடியது தமிழ்த் தெலுங்கா தெலுங்குத் தெலுங்கா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறாள்! வெற்றி பெற்றால் கிராண்ட் கென்யான் பல்கலைக் கழக ‘டாக்டர்’ பட்டம் அவளுக்குக் கிடைக்கும்! 

சூப்பர் டக்கர் வசனங்கள்!

ஜானகிராமன் ஜானகிராமன் தான்!

அந்தக் காலத்து நேடிவிடியை அப்படியே  படம் பிடித்துப் போடும்  கலை அவருக்குக் கை வந்தது. 

மீனங்காடி – ஆறாம் பகுதி (தொடர் பகுதி)

image

“ அந்த பெரிய மீன் என்ன ஆகாயத்தில் பறக்கிறதா?” மேரி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  மறுபடியும் இன்னொரு மீன் உயரே பறந்தது.  அந்த ‘மீனங்காடி’ ஆள் தான் மீன்களை ஒவ்வொன்றாக எடுத்துத் தூக்கி ‘ஸ்டைலாக’ எறிய அவை இருபது அடிக்கு மேலே பறந்து போய் விழுகிறது

“இதோ பாருங்கள் ! ஒரு பெரிய இறால் மீன் பம்பாய்க்குப் போகுது’ என்று கத்த மற்ற மீன் கடைத் தொழிலாளிகள் அனைவரும் கோரஸாக ‘போகுது பார், போகுது பார்’ என்று திரும்பிக் கத்தினர்.  தடுப்புக்கு அந்தப் புறம் இருந்த கடைக்காரன் ஒருத்தன் அந்த மீன்களை லாவகமாக ஒற்றைக் கையால் பிடித்து தலை வணங்கி ‘சல்யூட்’ அடித்து நிற்க, மற்ற மக்கள் எல்லோரும் கை தட்டி சந்தோஷத்தில் சிரித்தனர். அவர்களது அந்த ‘சந்தோஷ அலை மேரிக்கு ஆச்சரியமாக இருந்தது.

image

அவளுக்குப் பக்கத்தில் இன்னொரு மீன்காரன் ஒரு சிறிய மீனைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் வாயை இப்படி அப்படி  அசைத்து அருகில் இருந்த ஒரு சிறுவன் கிட்டே மீன் பேசுவது போல பேசிக் கொண்டு இருந்தான்.

இன்னொரு வயதான மீன்காரன் ‘கேளுங்க, கேளுங்க ! மீனைப் பத்திக் கேளுங்க’ என்று ‘தேவுடா தேவுடா’ ஸ்டைலில் பாடிக் கொண்டிருந்தான்.

கேஷ் கவுண்டருக்கு மேலே இரண்டு பெரிய கடல் நண்டுகள் நடனமாடிக் கொண்டிருந்தன. டை கட்டிக் கொண்டு நின்ற அந்தக் கும்பல் அவர்கள் வாங்க வந்த மீன்களோடு கடைக்காரர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘பக பக’ என்று சிரிக்கத் தொடங்கினர்.  மொத்தத்தில் அந்த இடம் ‘ஒரு விளையாட்டு மைதானம்’ போலத் தான் தோன்றியது. மேரி தன் கவலையெல்லாம் மறந்து வாய் விட்டுச் சிரித்து அவற்றை ரசிக்க ஆரம்பித்தாள். !

டீ கப்பைக் கையில் வைத்திருக்கும் அனைவரும் ஆபீசர்கள்.-நல்ல பதவியில் இருப்பவர்கள் போலத் தோன்றுகிறது. இந்த மட்ட மத்தியானத்தில் மீன் வாங்க வந்தார்களா? இல்லை வேடிக்கை பார்க்க வந்தார்களா? ஒன்றும் புரியவில்லை.

அந்தக் கூட்டத்தில் ஒரு மீன் கடைக்காரன் தன்னையே குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை மேரி வெகு நேரம் உணரவில்லை. அவளுடைய சீரியஸான முகமும் அதில் தெரியும் ஆர்வமும் அந்த மீனங்காடிக்காரனை அவள் பக்கம் வரவழைத்தது.

image

“ என்ன ஆச்சு உங்களுக்கு? டீ கப் தொலைந்து போச்சா?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே வந்தான்.  நல்ல சுருட்டை முடியுடன் வாட்ட சாட்டமாக அந்த மீனங்காடி இளைஞன்,

(தொடரும்) 

பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)

(சென்ற இதழின் தொடர்ச்சி )

image

அன்புடையா  ளருகினிலே யிருக்கின்ற கிளுகிளுப்போ 
  கயல்விழியாள் கண்பார்வை பட்டதன் சிலுசிலுப்போ 
இன்பத்தி  னுச்சத்தில் முறுவலோடு விழிமூடி 
  தூங்குகின்ற பாவனையில் பள்ளிகொண்ட பெருமாளை 
அன்போடு காதலும் கருணையு  மொருசேர 
  மையலோடு தையலால் பார்க்குமவ் வருட்பார்வை 
இனியவளின் கண்ணசைய வருடுகின்ற தென்றலாய் 
  அடியேனைத் தழுவட்டும் செல்வங்கள் கொடுக்கட்டும்!

மாலனவன் மார்பினிலே ஒளிர்கின்ற கௌஸ்துபமே 
  தேவியவ ளருளோடு மின்னுகின்ற கண்கள்முன் 
பொலிவில்லா மாலைபோல் மங்கியே தெரிகிறது  
  இணையில்லை ஒளிர்கின்ற கண்களுக்குப் புரிகிறது
உலகினையே களிப்பூட்டும் நாயகனாம் முகுந்தனையே 
  கண்வெட்டால் களிப்பூட்டும் திருமகளின் கண்பார்வை 
நிலவொத்த தண்மையோடு தென்றலாய் மெதுவாக 
  அடியார்மேல் பரவட்டும் மங்களம் பொங்கட்டும் !

கார்மேக வண்ணனாம் கமலக் கண்ணனவன் 
  ஈரமிகு நெஞ்சினிலே எழிலோடு கொலுகொண்ட 
பார்க்கவ மகரிஷியின் திருமகளாம்  நங்கையவள் 
  மின்னல்போல் ஒளிர்கின்ற முழுமுதல் ஜோதியவள் 
ஈரெழு வுலகங்கள் வளமோ டியங்கிடவே 
   இராப்பகலா யருள்கின்ற கருணையின் வடிவுமவள் 
தரணிவாழ் மாந்தர்கள் வழிபடும்  தாயுமவள் 
  அருட்பார்வை வீசட்டும் மங்களம் பொங்கட்டும்!

மாலனவன் மதுபோன்ற அரக்கற்குக் காலனவன் 
  மங்கள இசையோங்கு மில்லத்து வாஸனவன் 
நல்லோர்க்கு நேசனவன் துஷ்டருக்கு துஷ்டனவன் 
  அடியார்க்கு அடிமையவன் அன்பிற்கு தாஸனவன் 
புலங்களையே ஆட்கொண்ட யோகியவ  னிதயத்தை 
  சலனமுறச் செய்வித்த  ஜில்லென்ற அருட்பார்வை 
அலைமகளாம் திருமகளின் ஈர்க்கின்ற வருட்பார்வை 
  எம்மீது படட்டும் மங்களம் பொங்கட்டும் 

(இன்னும் பொன்மகள் வருவாள்.. பொருள்கோடி தருவாள்!)

மே   2014 

                         பூ : ஒன்று ———————- இதழ் : ஆறு   

image

இந்தியாவில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கும் நாள் மே 16.

ஆம் அன்று தான் நமது  தலைவிதி நிர்ணயிக்கப்  படப் போகிறது. 

மோடி,ராகுல்,சோனியா,மம்தா,ஜெயலலிதா,கருணாநிதி, மாயாவதி, முலாயம் , நிதிஷ் ,லாலு ,கேஜ்ரிவால் ,சரத் பவார்,மற்றும் பலர்  இந்தியாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

யார் யாரை எப்படி எவ்வாறு செக் மேட் செய்யப்போகிறார்கள் என்பது தான் நாம் ஆவலோடு காண இருக்கும் விளையாட்டின் முடிவு.  அது வரும் வரை நாம் விரல்களில் சிலுவையிட்டுக் காத்திருப்போம்.

—————————————————————-

சென்னையிலும் தமிழகத்தின் மற்ற இடங்களிலும்  கத்திரி வெயில் தொடங்கியதும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நான்கைந்து நாட்களாக மழை பெய்கிறது. இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். 

—————————————————————–

ஜூன் 8 முதல் 14  வரை  பொன்னியின் செல்வன் நாடகத்தை மியூஸிக்  அகாடமியில் 15 வருடங்களுக்குப் பிறகு அரங்கேற்றப் போகிறார்கள். நாடகத்தில் சிறப்பு அம்சங்களை அடுத்த குவிகம் இதழில் எதிர் பார்க்கலாம். 

சூரியாய நமஹ! சுந்தராய நமஹ!
வீரியாய நமஹ! விந்தராய நமஹ!
காரியாய நமஹ! ஸ்கந்தராய நமஹ!
மோரியாய நமஹ! மம மந்த்தராய நமஹ!

சுட்டும் சுடர்  வெயில் அது அக்னியோ?
வெட்டும் கதிர் வெயில் அது கத்திரியோ?

( 25 பக்கங்கள் கொண்ட மே மாத இதழ் இத்துடன் முடிவடைகிறது.

இதற்கு முன்னாள் வெளியான  இதழ்களையும் – தொடர்களின் முந்தைய அத்தியாயங்களையும் கீழே படித்து ரசிக்கலாம்)