பொன்னியின் செல்வன் நாடக விமர்சனம்

60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்கியின் மகோன்னதப் படைப்பான பொன்னியின் செல்வனை மூன்றரை மணி நேர நாடகமாக்கி  நம்மை  மெஸ்மரிசத்தில் ஆழ்த்திய மேஜிக் லேண்டர்ன்  குழுவினரை  எப்படிப்  பாராட்டுவது?

பொதுவாக பிரபலமான கதையைக் கையாளும்போது நமது கற்பனை முகங்கள் நிஜத்தைப் பின்னோக்கித் தள்ளிவிடும். ஆனால் இதில் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட வந்தியத் தேவன், அருள்மொழி,ஆதித்த கரிகாலன், குந்தவை, பூங்குழலி, மதுராந்தகன்,சேந்தன் அமுதன், சுந்தர சோழன், ஆழ்வார்க்கடியான் அனைவரையும் சந்திக்கும் போது நேராகப் பார்ப்பது போலவே இருக்கிறது. இது நாடகத்தின் முதல் வெற்றி.

ஐந்து பாகங்கள் கொண்ட படிக்கவே குழப்பமான புதினத்தை எந்த விதக்  குழப்பமும் இல்லாமல் நாடகக் கதையை அமைத்திருப்பது  இரண்டாவது வெற்றி.

வந்தியத்தேவனின் இயல்பான நகைச்சுவை, நந்தினியின் கோபம், ஆழ்வார்க்கடியானின் புத்திசாலித்தனம், மதுராந்தகனின் நாடாளும் ஆசை, செம்பியன் மாதேவியின் உறுதிப்பாடு, குந்தவியின் புத்திசாலித்தனம் – காதல், பொன்னியின் செல்வனின் கம்பீரம், ஆதித்த கரிகாலனின் வெறி-துயரம், பழுவேற்றரையர்களின் ஆசை எல்லாம் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது நாடகத்தின் மூன்றாவது வெற்றி. 

கல்கி அவர்கள் எழுதிய வசனங்களை 90 சதவீதம் பயன்படுத்தி, தற்காலத்திற்கேற்ப வேக நடையில் பேச வைத்திருப்பது நான்காவது வெற்றி. 

கதாபாத்திரங்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பேசாமல் அரங்க மேடை முழுவதும் ஓடிக் கொண்டே -ஏன் மதில்  மேலிருந்து குதித்தும் நடிக்கச் செய்திருப்பது – ஐந்தாவது வெற்றி!

அழகான கோட்டை மதில் – மேலே செல்லப் பாதை,ஒரு புறம் ஒளிந்து அமர்ந்து பார்க்க மறைவிடம், மறுபுறம் உயரமான மலை உச்சியில் கதா பாத்திரங்கள் நின்று பேச அமைப்பு, மேடையின் நீளத்தையும் அகலத்தையும் மட்டுமல்ல உயரத்தையும் உபயோகித்துத் தளம் அமைத்துள்ளார் தோட்டா தரணி ! தஞ்சை, கடம்பூர்,இலங்கை மூன்றையும் வண்ண அமைப்பில் வித்தியாசப் படுத்தியிருப்பதும்,காட்சி மாற்றத்தைத் திரை போடாமல் மாற்றுவதும்  ஆறாவது வெற்றி!

மூடுபல்லக்கில் பயணம் செய்வது , கடலில் வந்தியத்தேவன் படகை பூங்குழலி செலுத்துவது, பெரிய பொம்மை யானையை மேடையில் அமைத்து அதன்  அம்பாரியில் வானதியும் பூங்குழலியும் சவாரி செய்வது, புதை குழியில் வந்தியத்தேவன் விழுவது, கத்திச் சண்டை போடுவது மேடைப் பொருட்களை சிறப்பாகக் கையாண்டது ஏழாவது வெற்றி!

கந்தமாறன்,சம்புவரையர்,கொடும்பாளூரார், பார்த்திபேந்த்ரன் ,சுந்தர சோழன்,அநிருத்தர்,போன்ற பாத்திரங்களையும் சிறப்பாகச் செதுக்கியிருப்பது -அதிலும் அந்தப் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ரவிதாசன் இடும்பன் காரி,சோமன் சாம்பவான்  ஆகியோரின் மின்னல் வேகத் துடிப்பு நாடகத்தின் எட்டாவது வெற்றி!

இடைவேளையின் போது கடலில் குதித்த பொன்னியின் செல்வனைக் காணோம் என்று காவலாளிகள் முரசறைந்து கொண்டே ம்யூசிக் அகாடெமியின் கேண்டீன் வரை வந்தது புதுமையாகவும் ஜாலியாகவும் இருந்தது. இது போன்ற புத்திசாலித்தனம் நாடகத்தின் ஒன்பதாவது வெற்றி.

நாட்டின் அரசரையும் இரு இளவரசர்களையும் ஒரே நேரத்தில் கொலை செய்ய மும்முனைத்  திட்டம். அதில் இரண்டு திட்டம் தோல்வி அடைய, மூன்றாவது திட்டம் குரூரமாக வெற்றி அடைவது தான் கதையின் முக்கிய முடிச்சு. ஒரு த்ரில்லருக்குத் தேவையான டெம்போ கதையில் இருந்தது. அந்த மையக் கருத்தை நாடகத்திலும் கொண்டு வந்தது பத்தாம் வெற்றி!

புதுவெள்ளம் போன்ற நுப்பும் நுரையுமான குதூகலக் காட்சி அமைப்பு.

சுழற்காற்று போன்ற விறுவிறுப்பான மேடை அமைப்பு.

கொலை வாளைப் போன்ற கூரிய வசனங்கள்.

நாடகத்துறைக்கு மணி மகுடம் வைத்தது போன்ற பொருத்தமான நடிப்பு-உச்சரிப்பு !

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல நாடகம் பார்த்ததும் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி-நிறைவு -திருப்தி.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நாடகம்!