டாக்டர் ஜோக்ஸ்

image

டாக்டர்! எனக்கு கொஞ்ச நாளா கண் மங்கலாத் தெரியுது.!

தப்பு! உங்களுக்கு சுத்தமா கண் தெரியலை! இது கண் டாக்டர் கிளினிக் இல்லை. கண்டக்டர் வீடு.

image
டாக்டர்! எனக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றீங்களே! நான் செகண்ட் ஒபினியன் கேட்கலாமா?

ஓ! தாராளமா! நாளைக்கு இதே நேரம் வாங்க! சொல்றேன்!

image

டாக்டர்! எனக்கு ரொம்ப டல்லாயிருக்கு! உற்சாகமே இல்லை!
இந்த மருந்தை ஒருவாரம் குடியுங்க! சரியாப் போயிடும்!
என்ன மருந்து டாக்டர் இது!
டாஸ்மாக் சரக்கு தான்!

image

டாக்டர் பல்லை பிடுங்க எவ்வளவு நேரம் ஆகும்?
ஒரு நிமிஷம் தான்!
அதுக்கா ரெண்டாயிரம் ரூபாய் பீஸ்?
சரி! உங்களுக்காக வேணும்னா ஒரு மணி நேரம் பிடுங்கறேன்!

                        இலை இலை இலை

image

 

மலை போல       குவிஞ்சிருக்கு      இலை இலை இலை !
மனசெல்லாம்      நெறைஞ்சிருக்கு    தழை தழை தழை !!

வாய்  மணக்க     சாப்பிட வாழை இலை
வாய்  சிவக்க போட்டுக்க  வெத்திலை
தோரணமாய் தொங்கி   நிற்கும்   மாவிலை
சிவனுக்கு  ஆகி  வந்த   வில்வ இலை

மந்திரிக்க  தெளிக்க வந்த வேப்பிலை
சாப்பாடு  ருசிக்க வந்த கருவேப்பிலை
ஓலைஓலையாய்  குவித்து  வந்த  பனை இலை
கீத்துக் கீத்தாய்  பின்னி  வந்த  தென்னை இலை

காயம்  பட்டா  கசக்கிப்  போட பச்சிலை
தண்ணி  பட்டா  ஒட்டாத  தாமரை இலை
வேதாளம்  ஏற  வைக்கும்  முருங்கை இலை
கை சிவக்க போட  வந்த மருதாணி இலை

பிள்ளையாருக்குப் பிடித்த அரச இலை எருக்கு இலை
எல்லோருக்கும் தேவையான மரஞ் செடி  கொடி இலை
வெயில் வரும்   காலத்தில்   உதிரும் இலை
மழை வந்தால்   மறுபடியும்  துளிர்க்கும் இலை !!

Only great minds can read this!!

உங்களுக்கு ஒரு சவால்!
உங்களால் இதை வேகமாக படிக்கமுடியுமா? 

image

fi yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too 
Cna yuo raed tihs? Olny 55 plepoe out of 100 can. 
i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno’t mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!

read it in an e-mail

 முடிந்ததா? என்ன ஆச்சரியம்! இவ்வளவு அச்சுப் பிழை இருந்தாலும் நம்மால் வேகமாகப் படிக்க முடிக்கிறதல்லவா? 

அது தான் நமது மூளையின் ஸ்பெஷாலிட்டி!

முதல் எழுத்தும்  கடைசி எழுத்தும் சரியாக இருந்தால் நம்முடைய மூளையால் மற்றப் பிழைகளைப் பொருட்படுத்தாமல் சரியாகப் படிக்க முடியும்!

நமக்கெல்லாம் எதுக்கு spellbee டெஸ்ட் ! சுத்த வேஸ்ட் ! 

(அ) ராமாயணம்

image

(email இல் வந்தது)

ராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும்

 வார்த்தைகளால்வடிவமைக்கப் பட்டுள்ளது. 

அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள 

அயோத்திஅரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு 

அரணாக அரசனின்அம்சமாக அனுமனும் அவதரித்ததாக

அறிகிறோம்அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த 

அன்பளிப்பு அல்லவா அனுமன் ? அவனே அறிவழகன்,

அன்பழகன்,அன்பர்களைஅரவணைத்து அருளும் 

அருட்செல்வன்! அயோத்தி அடலேறு,அம்மிதிலை 

அரசவையில்அரசனின் அரிய வில்லை அடக்கி, 

அன்பும்அடக்கமும் அங்கங்களாகஅமைந்த அழகியை

அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை 

அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !

அக்கைகேயிஅசூயையால் அயோத்தி அரசனுக்கும்

அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு

அனுப்பினாள். அங்கேயும் அபாயம்!

அரக்கர்களின் அரசன்,அன்னையின் அழகால் அறிவிழந்து

 அபலையைஅபகரித்தான் அத்தசமுகனின் 

அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை. 

அயோத்திஅண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால் 

அடைந்த அவதிக்கும்அளவில்லை. அத்தருணத்தில் 

அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து,

அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த

 அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக 

அரியணையில் அமர்த்தினர். 

அடுத்துஅன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில்

 அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.அனுமன், 

அலைகடலை அலட்சியமாகஅடியெடுத்துஅளந்து 

அக்கரையைஅடைந்தான். அசோகமரத்தின் அடியில் ,

அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து

அண்ணலின்அடையாளமாகிய அக்கணையாழியை 

அவளிடம்அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற 

அவதிகள்அநேகமாகஅணைந்தன.அன்னையின் 

அன்பையும்அருளாசியையும் அக்கணமே அடைந்தான் 

அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து ,

அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு 

அக்கினியால்அழித்த அனுமனின் அட்டகாசம் , 

அசாத்தியமானஅதிசாகசம். அனந்தராமன்அலைகடலின் 

அதிபதியைஅடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,

அக்கரையை அடைந்தான். 

அரக்கன் அத்தசமுகனை அமரில்அயனின்

அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் 

அர்ப்பணித்த அன்னைஅவள் அதி அற்புதமாய் அண்ணலை 

அடைந்தாள். அன்னையுடன்அயோத்தியை அடைந்து

அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் . 

அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேய 

அடுக்கடுக்காகஅமைந்ததும் அனுமனின் அருளாலே!

image

       

(நன்றி …நன்றி …நன்றி )

மாங்காட்டுப் பாடல் (ஆறாவது வாரம்)

image

வரம்தனை      தினந்தினம்     தந்திடும் மாங்காட்டுத் தாயே!
வாரங்கள்       ஆறினில்       கேட்கும்வரம்   தாஎன்தாயே!
விறகினில்      வீழும்வரை    நினைக்கும்வரம் தாஎன்தாயே!
வீராப்பும்        வீம்பும்         கரையும்வரம்   தாஎன்தாயே!
உறவுகள்       உணர்வினில்   உறையும்வரம் தாஎன்தாயே!
ஊருக்கு        உலகுக்கு       உருகும்வரம்    தாஎன்தாயே!
வெறுமை       மனதினில்      அகலும்வரம்    தாஎன்தாயே!
வேற்றுமை     விழியில்        விலகும்வரம்    தாஎன்தாயே!
வைரமென      நெஞ்சம்        மாறும்வரம்     தாஎன்தாயே!
ஒற்றுமை      எண்ணத்தில்    சேரும்வரம்     தாஎன்தாயே!
ஓரறிவும்       நின்தாள்        பணியும்வரம்   தாஎன்தாயே!
வௌவால்      போல்தவம்     புரியும்வரம்     தாஎன்தாயே!
வ்ரதங்கள்      புரிந்துவந்தேன் காத்திடுவாய்   எனைநீயே!

 

திரைப்பட விமர்சனம் :

சாப்பிடுவதற்காக உயிர் வாழும் பிரகாஷ்ராஜ் சாப்பாட்டின் ருசியை ருசித்து நம்மைச் சப்புக் கொட்ட வைக்கிறார்!

பொண்ணு பார்க்கப் போன இடத்தில் நன்றாக வடைசெய்தது பொண்ணு இல்லை.என்று தெரிந்ததும் பொண்ணை அம்போ என்று விட்டுவிட்டு சமையல்காரனைத்  தன் வீட்டில் சமைக்க அழைத்துப் போவது அருமையான காட்சி!

அழகான பேரிளம்பெண் ஸ்னேகா! கல்யாணமாகாமல்  தவிக்கும் முதிர் கன்னி.! டப்பிங் ஆர்டிஸ்ட்! அவருக்கும் ஆர்க்கியாலாஜிஸ்ட் பிரகாஷ்ராஜுக்கும் பார்க்காமலே எப்படி சாப்பாடு மூலம்  காதல் மலருகிறது என்பது சுவையான கவிதை!

ஒருவரை ஒருவர் பார்க்கத் திட்டமிடும்போது  தாழ்வு மனப்பான்மையால் அக்கா மகனையும் சகோதரியையும் இருவரும் அனுப்புவதும் அவர்கள் இருவரும் காதலித்து பெரியவர்களை சண்டையில் மாட்டுவதும் சினிமாவில் தான் நடக்கும்!

இளஞ்ஜோடிகள் சிக்கென்று காதலிக்க பெரியவர்கள் தடுமாறுவது இயற்கையாக இருக்கிறது! முடிவில் ரெண்டு ஜோடிகளும்  ஒன்று  சேர்வதில் பெரிய த்ரில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் இயல்பான நடிப்பாலும் இளையராஜாவின் இனிமையான பின்னணி இசையாலும் தம்பி ராமையா குமாரவேல் இருவருடன் கூட்டணி அமைத்து பிரகாஷ் ராஜ் வெடிக்கும் நகைச்சுவை வெடிகளினாலும் படம் ஜாலியாக ஓடுகிறது!

நடுவில் தேவையில்லாமல் ஆதிவாசியைப் புகுத்தி பிரகாஷ் ராஜை ஹீரோவாக்க முயலுவதுற்குப் பதிலாக நகைச்சுவையை இன்னும் சேர்த்திருந்தால் ஏ ஒன் காமெடிப்படமாக இருந்திருக்கும்! 

டாக்டர் ஜோக்ஸ் -தொடர்ச்சி

image

டாக்டரும் கடவுளும் ஒன்றாமே! எப்படி?
ரெண்டும் நின்று கொல்லும்!

டாக்டரும் திருடனும் ஒன்றா? எப்படி?
ரெண்டு பேரும் கத்தியைக் காட்டி காசைப்   பிடுங்குறாங்க!

டாக்டருக்கும் வக்கீலுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்!
எப்படி?
அவர் குத்திக் குத்தி பீஸ் வாங்குவார்!.
இவர் கத்திக் கத்தி  பீஸ் வாங்குவார்!

image

டாக்டர்! என் கணவர் குறட்டை விடறார் !

சத்தம் அதிகமா இருந்தாத்தான் பிரச்சினை.

பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ராத்திரி பத்து மணிக்கு மேல் ஏன் மிக்ஸியை ஓட விடறேன்னு கேட்கிறாங்க!

image

உங்களுக்கு என்ன வியாதின்னு இப்போ சொல்லமுடியாது!போதை தெளிஞ்சப்புறம் தான் டெஸ்ட் பண்ண முடியும்.

சரி டாக்டர்! இன்னும் நாலு மணி நேரம் கழிச்சு வர்றேன்! அதுக்குள்ளே உங்களுக்கு போதை தெளிஞ்சுடும்னு நினைக்கிறேன்!

image

டாக்டர்! நேத்திலிருந்து எனக்குக் கடுமையான வயத்துவலி!
ஏன்! என்ன சாப்பிட்டீங்க?
நீங்க கொடுத்த சோத்துப் புண் மருந்து தான்!
அடப்பாவி! அது சேத்துப்புண் மருந்தாச்சே!

டாக்டர் சார்! எனக்கு வயத்திலே கட்டியாம்!
புரோகிதர்வாள்! பதினாயிரம் கட்டி வராகன்னு சொல்லும்!

                  எது கவிதை

image

கற்கள்  குவிந்தால்  கட்டடம்  ஆகுமா?
கற்குவியல்  தான்  ஆகும் !
சொற்கள்  குவிந்தால்  கவிதை ஆகுமா?
சொற்குவியல் தான் ஆகும் !

 கற்களை    வரிசையில்  அடுக்கி      வைத்து 
இடைஇடை  சாந்தினைப்  பூசி         வைத்து
சுண்ணம்    அடித்து      வண்ணம்    பூசினால்
கற்குவியல்  கோவிலாகும் !

சொற்களை  வரிசையில்  அடுக்கி      வைத்து
இடை இடை சந்தத்தைப்  பூசி         வைத்து
தாள மென்னும்   சுண்ணம்    தடவி
நய மென்னும்  வண்ணம்    தீட்டி
அணி  என்னும் அணிகலன்  பூட்டி
எதுகை மோனை  மினுமினுப்பு ஊட்டி
கட்டி  வைத்தால் பிறப்பது கவிதை ஆகும் !

எழுத்தும் சொல்லும் யாப்பசையும் அணியும்
அழுத்தி வந்து அழகு காட்டினாலும்
கருத்து  இன்றி  கவிதை     இருந்தால்
கழுத்து  இல்லா உடல் அது ! பயனிலை ! பயனிலை !
 

தேவன்  உள்ள பெட்டகம் கோவில்  என்ற  கட்டடம்    
ஜீவன்  உள்ள  சொற்றொடர்  கவிதை  என்ற  சித்திரம்
விதை  இல்லா  கவிதை சிதைப்  பட்டு போகும்
கருத்து  உள்ள  கவிதை  உறுத்து  வந்து   ஊட்டும் !!

image

ராஜராஜசோழன் உலா (நிறைவுப் பகுதி)

image

நந்தினி வரவில்லையா?‘  என்று சிவாச்சாரியார் கேட்டதும் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அவர்கள் முகத்தில் இருந்த இனிமை மறைந்திருந்தது. சிவாச்சாரியார் தன் தவற்றை உணர்ந்து நடுநடுங்கி நின்றார்.

ஆதித்த கரிகாலன் கோபத்தோடு கேட்டான் – “சிவாச்சாரியாரே! யார் அந்த நந்தினி? அவளுக்கும் சோழ குலத்துக்கும் என்ன சம்பந்தம்?”

அரசே! என்னை மன்னித்துவிடுங்கள்! நான் உங்கள் வரலாற்றைப் பேராசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புத்தகத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.. அதில் ..”

“பொன்னியின் செல்வனா? யார் அவன்?”

“மன்னர் மன்னா! ராஜராஜ தேவருக்குத்தான் அப்படி ஒரு பெயரைச் சூட்டியிருந்தார் கல்கி அவர்கள்!

“ஆஹா! தம்பி! இதுவரை எனக்குத் தெரியாமல் போயிற்றே! நானும் இனி உன்னை ஆசை தீர பொன்னியின் செல்வன் என்றே கூப்பிடப் போகிறேன்!” – குந்தவி  கூறினாள்.

“அது சரி! நந்தினி யார்?” – ஆதித்த கரிகாலன் மீண்டும் வினவினான்.

“அதில் தான் எங்களுக்குப் பெரிய குழப்பம்! அவள் வீரபாண்டியன் மகளா காதலியா … இல்லை ஆதித்த கரிகாலர் காதலியா….”

“என்ன சொன்னீர் சிவாச்சாரியாரே” – ஆதித்த கரிகாலனைக் கட்டுப்படுத்த வந்தியத்தேவன் வரவேண்டியதாயிற்று.

“எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்! இனி நான் உங்கள் வரலாற்றுக்குச்  சம்பந்தம் இல்லாதவர் பற்றிப்பேசமாட்டேன்!” – சிவாச்சாரியார் கதறினார்.

கருவூர்த்தேவர் பேச்சை மாற்றினார். “ அது சரி..பதும மலர் ஆதித்தன் கையில் சேர்ந்திருக்கிறதே! அவர் என்ன செய்யப் போகிறார்?”

“அது சேரவேண்டிய இடம் சிவபெருமானின் திருவடிகள் தான் ஸ்வாமிகளே!”

ஆதித்தன் உறுதியாகக் கூறினான்.

உலா மேலும் தொடர்ந்து அடுத்த மண்டபத்தை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. கரிகாலன் மெல்ல மெல்ல பின்னால் வந்து சிவாச்சாரியார் அருகே வந்தான். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் கவனிக்கவில்லை.

ஆதித்த கரிகாலன் சிவாச்சாரியாரிடம் “ என் கோபத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! நந்தினி என்ற பெயரைக் கேட்டது மாதிரியும் இருக்கிறது. கேட்காதது மாதிரியும் இருக்கிறது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ரகசியம் தெரிந்திருக்கிறது. அதை என்னிடம் மறைக்கிறார்கள். அதுவும் என் நன்மைக்காகத் தான் இருக்கும். நான் அடிக்கடி அலறுகிறேன்! கோபப்படுகிறேன்! துடிக்கிறேன்! அதற்குக் காரணம் ஒரு பெண் என்பது புரிகிறது! அவள் யார்? அவள் தான் நந்தினியா?

“அரசே! எங்கள் யாருக்கும் புரியாத புதிர் தங்களின் திடீர் மறைவு தான்! வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள்  சூழ்ந்தது என்று தான் புரிந்ததே தவிர அது எப்படி யாரால் எங்கு எவ்வாறு நடந்தது என்பது எங்கள் யாருக்கும் விளங்கவில்லை“ என்று தழுதழுத்த குரலில் சிவாச்சாரியார் கூறினார்.

“சிவாச்சாரியாரே! இது வரை யாருக்கும் தெரியாத- யாரிடமும் கூறாத எனது மரண முடிச்சைப் பற்றி உங்களிடம் மட்டும் சொல்கிறேன்! யாருக்காவது இது தெரிந்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும்”.

சிவாச்சாரியாரிடம் ஆதித்த கரிகாலன் தன் மரணத்தின்  காரணத்தைக் கூறினான். அவ்வளவு தான்! சிவாச்சாரியார் ஸ்தம்பித்துப் போய்விட்டார் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை! அப்படியே பிராகாரத்தில் சாய்ந்து விட்டார். ஆகித்தனும் மற்றவரும் உலாவில் தொடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தான் இரு கூறாய்ப் பிரிந்தது போலிருந்தது. தானும் வானத்தில் பறப்பது போல் ஓர் உணர்வு. அப்படியே பறந்து தன் வீட்டுக்குப் போனது போலவும் ஒரு நினைவு. அதே சமயம் அவர்கள் உலாவையும் அவரால் பார்க்க முடிந்தது. அந்த அரை மயக்க நிலையில் அவர் சற்றுக் கண்ணசைந்து விழித்த போது அனைவரும் அவரைச் சுற்றி நிற்பதை உணர்ந்தார்.   ராஜராஜன் அவர் அருகில் வந்தான்.

“சிவாச்சாரியாரரே! இதுவரை இந்த கோவிலில் எல்லா இடங்களிலும் எங்கள் ஆசைதீர உலா வந்தோம். ஆயிரம் ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறோம்! ஆனால் நாங்கள் மறைந்த பிறகு பார்க்க முடியாத இடம் என்றும் ஒன்று இங்கே உள்ளது. அதைப் பார்க்கத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ  வேண்டும்” என்று மும்முடிச் சோழன்-ராஜகேசரிவர்மன் –அருண்மொழிவர்மன் என்றெல்லாம் பெயர் பெற்ற ராஜராஜ சோழன் பணிவோடு வேண்டி நின்றான்.

“ ஆம் . சிவாச்சாரியாரே! கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் சிவபெருமானைத் தரிசிக்க விரும்புகிறோம்! ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் பதும மலரை அவர் காலடியில் வைத்தால் தான் எங்கள் கண்களுக்கு நாங்கள் பிரதிஷ்டை செய்த சிவபெருமானின் காட்சி கிடைக்கும்.! அதைத் தாங்கள் தான் நிறைவேற்றவேண்டும். மற்ற இடங்களுக்குச் செல்லும் உரிமை எங்களுக்கு உண்டு. ஆனால் கருவறையைத் திறந்து பதும மலரை வைக்கும் உரிமை உங்களுக்குத்தான் உண்டு.”

 

“மன்னர் மன்னா! வாருங்கள்! நீங்கள் கட்டிக் காத்த சிவபெருமானை உங்களுக்குத் தரிசனப் படுத்துகிறேன்!” – சிவாச்சாரியார் நெகிழ்ச்சியுடன் அனைவரையும்  கருவறைக்கு அழைத்துச் சென்றார்! அவரது இடுப்பில் கருவறையைத் திறக்கும் சாவி இருந்தது.

“ஆயிரம் ஆண்டுகளாக எங்களது தணியாத ஆசை இன்று நிறைவேறப் போகிறது!”- ராஜராஜன் கூறினான்!

 image

சிவாச்சாரியார் இடுப்பிலிருந்து சாவியை எடுத்து கருவறைப் பூட்டைத் திறக்க முயன்றார். அவர் கை நடுங்கியது. அவரால் முடியவில்லை! மனம் துடித்தது. தினம் கருவறையை சாதாரணமாகத் திறக்கும் அவரால் அன்று திறக்க முடியவில்லை!

 

“மன்னா! …நான் … ஏன் ..” வார்த்தை வராமல் தடுமாறினார் சிவாச்சாரியார்.

 நான் கூறுகிறேன்! என்று சொல்லிக் கொண்டே வந்தார் கருவூர்த்தேவர்.

“ மன்னா! சிவாச்சாரியாரின் கரங்களால் இனி கருவறைக் கதவை என்றுமே திறக்க முடியாது. அவர் வரும்போது மனிதராகத் தான் வந்தார். அவரிடம் கருவறைச் சாவியும் இருந்தது. இறைவனை அணுகும் உரிமையும் இருந்தது. ஆனால் அவர் எப்போது ஆதித்த கரிகாலன் வாயிலாக அந்த தேவ ரகசியத்தைக் கேட்டாரோ அப்போதே அவருடைய ஆத்மா அவருடைய உடலை விட்டுப் பிரிந்து விட்டது. இப்போது நம் முன் நிற்பது  அவருடைய ஆத்மா தான். இவரது உடலை ஏற்கனவே இவரது இல்லத்தில் சேர்த்து விட்டேன். இனி அவரும் உங்களுடன் செல்ல வேண்டியது தான். நாம் இன்று சிவபெருமானைத் தரிசிக்க இயலாது. சிவபெருமான் பாதம் பணிய நமக்குப் பதும மலர் வேண்டும். மானுடர் துணை வேண்டும். அதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதுவரை உங்கள் உலா.. ராஜராஜ சோழன் உலா தொடரட்டும்…. “ 

image

(முற்றும்)