கணக்கு

image

image

image

பத்தாவது படிக்கும் ராமனுக்கும் சீதாவுக்கும் கடும் போட்டி. கணக்கில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. ராமன் ராமானுஜன் என்றால் சீதா சகுந்தலா தேவி.கணித ஒலிம்பியார்ட் வந்தது. வெற்றி பெறுபவர்களுக்கு அமெரிக்காவில் தனிப்  பயிற்சி. ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஆசிரியர்கள் – ஐ ஐ டியிலிருந்து வந்த புரபஸர்கள் திணறி விட்டார்கள். எல்லா டெஸ்டிலும்  இருவரும் சமமாக நூத்துக்கு நூறு வாங்கியிருந்தார்கள்.

 டை பிரேக்கர் மாதிரி மிகக் கடுமையான கணக்கைக் கொடுத்து இருவரையும் பத்தே நிமிடத்தில் போடச் சொன்னார்கள். ராமன் ஐந்து நிமிடத்தில் அதை முடித்து விட்டான். சீதாவுக்கு அது சுத்தமாகத் தெரியவில்லை. கண்களில் கடகடவென்று கண்ணீர். ராமன் தன் பேப்பரை அவளிடம் கொடுத்து விட்டு வெளியேறினான்.

சீதா இப்போது அமெரிக்காவில் கணிதப் பேராசிரியை. ராமன் மளிகைக் கடையில் கணக்கு எழுதுகிறான்.  

                  பனசங்கரி

image

வரம்  யாவும்   தருகின்ற  பரமேஸ்வரி – நல்ல
அருள்  காட்டும்  அவளே நம்  பனசங்கரி !
திரு நடனம்  புரியும் திரி   புரசுந்தரி !
இரு விழியில் ஒளி காட்டும் சிவசங்கரி !
 image
பால்தரும்  அன்னையே  பாகேஸ்வரி! – பொன்
வாளினைப்  பற்றிடும்   ராஜேஸ்வரி !
மாந்தரை  வாழ்த்திடும் மாதேஸ்வரி – நம்
சிந்தையில்  வீற்றிடும்   ஜெகதீஸ்வரி !
 
வீரத்தின்  இருப்பிடமே வீரேஸ்வரி ! – அழகு
மாரனின்  வில்புருவம்  காமேஸ்வரி
மலர்கின்ற பருவத்தில் கமலேஸ்வரி – தினம்
புலர்கின்ற   பொழுதினிலே  யோகேஸ்வரி !!

கோச்சடையான் (திரை விமரிசனம்)

image

கோச்சடையான் ஒரு பொம்மைப் படம்.

அதுக்கு பர்பார்மன்ஸ் கேப்சர் டெக்னாலஜி அப்படின்னு மேக்கப் போடுவதெல்லாம் சும்மா ‘லொளாங்காட்டி’. 

கதை திரைக்கதை வசனம் ஓகே.
பாட்டு .. ம்ம்  ஓகே 
ரஜினிகாந்தின் டயலாக் டெலிவரி வழக்கம் போல நல்லாயிருக்கு !
தீபிகா, சரத்குமார்,( அடையாளம் சத்தியமா தெரியலே) ஆதி,நாசர் நாகேஷ் எல்லாம்  இருக்காங்க.. அவ்வளவு தான். 

ஒருவேளை ராணா ரஜினியை  மட்டும்  பர்பார்மன்ஸ்   கேப்சரில் காட்டிவிட்டு  கோச்சடையான் மற்றும் மற்ற நடிகர் நடிகையரை  லைவா காட்டியிருந்தா சூப்பராயிருந்திருக்கும்.

நாம டெக்னாலஜியில முன்னேற இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். 

எல்லாரும் ஒருமுறை கட்டாயம் பார்த்துவிட்டு  அப்புறம் குறைகளைச்  சொல்லலாம். 

மீனங்காடி (ஏழாவது பகுதி)

image

“ என்ன ஆச்சு உங்களுக்கு? டீ கப் தொலைந்து போச்சா?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே வந்தான்,  நல்ல சுருட்டை முடியுடன் வாட்ட சாட்டமாக அந்த மீனங்காடி இளைஞன், அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டான்.

‘இதோ இருக்கே’ என்று தட்டுத் தடுமாறி பக்கத்துத் தூணில் இருந்த ஒரு காலி கப்பைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் மேரி. பிறகு மெதுவாக அவனிடம் ‘ இங்கு என்ன நடக்கிறது? எனக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை” என்று மெதுவாகக் கேட்டாள்.

“இதற்கு முன்பு இங்கு வந்திருக்கிறீர்களா?”

“ஊகூம். பெரும்பாலும் லஞ்சுக்கு அந்த ஏரிக்கரைக் கடைக்குத் தான் போவேன்”

image

“ புரியுது ! அங்கே அமைதியாக இருக்கும் ! ஆனால் இங்கே அப்படி இருக்காது ! எது உங்களை இங்கே வரவழைத்தது?” தெளிவாகவே கேட்டான்.

பக்கத்தில் இன்னொரு மீன்காரன் “ யாருக்கு வேணும் மீனு மீனு” என்று வேண்டுமென்றே கட்டைக் குரலில் கத்தத் தொடங்கினான்.  இன்னொரு மீன்காரன் மீனைக் காட்டி ஒரு பெண்ணை வேடிக்கையாகப் பயமுறுத்திக் கொண்டு இருந்தான்.  மேரியின் தலைக்கு மேலே ஒரு பெரிய கடல் நண்டை  ஒருத்தன் தூக்கிப் போட்டான். “அந்த நண்டு பொண்ணு பார்க்கப் பக்கத்து ஊருக்குப் போகுது பார்” என்று சொல்ல உடனே ஆரம்பித்து விட்டது கோரஸ்-  ‘போகுது பார் போகுது பார்’. ஒரு ஜாலியான பைத்தியக்காரக் கும்பல் போல் இருந்தது மேரிக்கு. ‘கேஷ் கவுண்டர்’ அருகே ஒருத்தன் வினோதமான ‘கேப்’ போட்டுக் கொண்டு ‘தையா…. தையா’ என்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு பொருட்காட்சி மைதானம் மாதிரி இருந்தது அந்த இடம்.

மேரி பராக்குப் பார்த்து விட்டுத் திரும்பினால் அந்த இளைஞன் கூச்சலைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் அவள் முகத்தையே பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “கடவுளே ! அவன் என் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று மேரி நினைத்தாள்.  ஆனால் அவனிடம் என்ன சொல்வது? ஆபீஸில் ஏகப்பட்ட பிரச்சினைகள் அன்று சொன்னால் அவனுக்குப் புரியுமா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்வோம் என்ற கணக்கில் அவள் ஆபீஸ் பிரச்சினைகள் பற்றி சுருக்கமாகச் சொன்னாள்.

அவன் பெயர் டோனி. மேரி தன் மூணாம் மாடி அலுவலகத்தைப் பற்றிச் சொல்லும்போது பொறுமையாகக் கேட்டான். யாரோ தூக்கி எறிந்த மீன் அவன் மேலே பட்டு கீழே விழுந்ததைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. மேரி சொன்ன தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிக் கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான்.

சுருக்கமாகச் சொல்லி விட்டுத் தலையை மெல்லத் தூக்கிக் கேட்டாள்.’என்ன நினைக்கிறீர்கள் எங்கள் குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்டைப்பற்றி?´ டோனி உடனே பதில் எதுவும் சொல்லி விடவில்லை. சற்று யோசித்து விட்டு “ மோசமான ஆபீஸ் தான். நானும் அதுமாதிரி இடங்களில் எல்லாம் வேலை பார்த்திருக்கிறேன் ! ஏன் இந்த ‘மீனங்காடி’ கூட முதலில் அபப்டித்தான் இருந்தது. இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டான்.

“ ஜாலியான சத்தம் ! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் “ தயங்காமல் சொன்னாள் மேரி.

“இந்தக் கும்மாளம், வேடிக்கை, விளையாட்டு எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

“ ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு”

“ எனக்கும் இது பிடிச்சிருக்கு ! இங்கே வேலை பார்த்து விட்டு வேறு எங்கேயும் வேலை பார்க்க முடியும்னு தோணலை.  முன்னாடி இந்த இடம் நீங்க சொன்னீங்களே அந்தக் ‘குப்பைத் தொட்டி’மாதிரி தான் இருந்தது.  நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதை மாத்தணும்னு முடிவு பண்ணினோம்.  அதன் முடிவு தான் இந்த ஜாலி ! வேடிக்கை !. இந்த சந்தோஷம் உங்கள் டிபார்ட்மெண்டுக்கு வரணுமா? “

“ வேணும் ! நிச்சயமா வேணும் ! அது தான் சரியான மருந்து “  மேரி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ நான் வேணும்னா இந்த ‘மீனங்காடி’ எப்படி மாறியது என்று சொல்றேன்.  யாருக்குத் தெரியும்? அதிலிருந்து உங்களுக்கு ஏதாவது யோசனை பிறந்தாலும் பிறக்கலாம்.”

image

“ ஆனா  எங்ககிட்டே தூக்கிப் போட்டுப் பிடிக்க எதுவுமே இல்லை.  நாங்க செய்யறதெல்லாம் ரொம்ப அறுவையான வேலை அதையே திரும்பத் திரும்ப……

“ நிறுத்துங்க மேடம் ! தூக்கிப் போட்டுப் பிடிக்கிறதில் இல்லை இந்த சந்தோஷம் ! உங்க வேலை நிச்சயமா இதை விட வித்தியாசமானதுதான்.  உங்களுக்குப் பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.  நான் ஏன் உங்களுக்கு உதவி செய்யக் கூடாது? நாங்க எப்படி இந்த இடத்தை இப்படி ஜாலியான வேலையாக மாற்றினோம் என்பதைச் சொல்லுகிறேன். இந்த ‘மீனங்காடி’ எப்படி ஒரு ஜாலியான வியாபாரத் தலமாக மாறிய கதையைச் சொல்லுகிறேன். நீங்க அதைப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னா அது உங்களுக்கு உதவியா இருக்காது? “ டோனி கேட்டான்.

“நிச்சயமா ! ஆனால் நீங்கள் ஏன் எங்களுக்காக இதைச் செய்யணும்?” மேரி கேட்டாள்.

(தொடரும்) 

மாக்களாய்ப் போனோமே! (கோவை சங்கர்)

image

மக்களையும் மாக்களையும் பிரிப்பது  ஓர்காலே!
பாகையையும் பகையையும் பிரிப்பது அதேகாலே!

இந்தியராம் நாமெல்லாம் ஒர்குலம் ஒர்ஜாதி
எம்மதமும் சம்மதமென சொல்லிவிடுவோம் ஓர் செய்தி 
எல்லோரும் மன்னராய்ப் பாகைசூடி வாழ்வதுவே  
காந்திகண்ட ராஜ்ஜியத்தில் பலமான அஸ்திவாரம் 

ராமரும் அல்லாவும் ஏசுவும் பகையில்லை 
ஓரினமாய் இருப்பதுவே அவர்காட்டிய வாழ்வுநிலை 
மதங்களின் போதனை அன்பும் அரவணைப்பும் 
மதப்பெயரில் நம்சாதனை கொலைகளும் கொள்ளைகளும் 

பாகையின் காலெடுத்து பகையாகிப் போனோமே
மக்களுக்குக் கால்கொடுத்து மாக்களாக  ஆனோமே!

திரு எழு கூற்றிருக்கை  என்பது தமிழ் கவிதையில் பிரபந்த வகையில் ஒன்று. இவற்றில் அஷ்ட நாக பந்தம், ரத பந்தம்,முரச பந்தம், பதும பந்தம் என்று பல வகை உண்டு.  

ரத பந்தம் என்றால் கவிதை ஒரு ரத (தேர்)  அமைப்பில் இருக்க வேண்டும்.மேலே குறுகியும் படிப்படியாக விரிந்தும் கீழே குறுகியும்  இருப்பது ரதத்தின் தன்மை. கவிதையும் அதே போன்று இருக்க வேண்டும். 

திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலும் கீழேயும் செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.

                                            1
                                         1 2 1
                                      1 2 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 


இடையில் தேர் தட்டு … … … … … … .

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                      1 2 3 2 1
                                         1 2 1
                                            1 

  பாடலின் வரிகளில் 1,2,3,4,5,6,7 எண்களைக் குறிக்கும் சொற்களை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி எழுதி மொத்தத்தில் அது ஒரு கருத்தைக் குறிக்கும் என்றால் அது தான் எழு கூற்றிருக்கை என்பதாகும். 

அருணகிரிநாதர் இத்தகைய பாடல்களைப் பாடியுள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு 

http://www.kaumaram.com/thiru_uni/tpun1326.html என்ற சைட்டைப் பார்க்கவும்.