ஜெயபரணி

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான சாண்டில்யனின்  கடல் புறாவைப் பலமுறை படித்ததின் தாக்கம் தான் இந்த  "ஜெயபரணி".

படங்களுக்கு  நன்றி  மணியம் செல்வன் .

image

             “ பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ “ என்ற ஜெயங்கொண்டாரின் சொல்லுக்கிணங்க சோழ நாட்டின் பெரும்படை கலிங்க தேசத்தை எரித்துக் கைப்பற்றிப் பரணி பாடும் அளவிற்கு அழியாப் புகழை ஏற்படுத்திய சோழ – கலிங்க யுத்தம் என்றைக்கு வெடிக்குமோ என்றிருந்த காலம் அது.  பின்னால் நடக்கப் போகும் பெரும் விபரீதத்தை உள்ளடக்கி வழக்கமான ஆரவாரங்களுடன் பவனி வந்து கொண்டிருந்தது கலிங்கத்தின் மாபெரும் துறைமுகப் பட்டினம் பாலூர்.

            தலையிலிருந்து கால் வரை பூரண கவசமணிந்து தயாராக நிற்கும் அழகான பெண்ணைப் போல காட்சியளித்தது பாலூர் நகரம்.  என்ன கவசங் கொண்டு மூடினாலும்  சீலையிட்டு மறைத்தாலும் பெண் என்ற இன்பப் பிரதியை – அவளின் அழகுப் பிரதேசங்களை முழுதும் மறைக்க முடியுமா ?  அதைப் போன்றே பாலூர் துறைமுகத்தின் போர்க்கால நடவடிக்கைகள் அதன் இயற்கை எழிலைக் கொஞ்சம் கூடக் குறைக்கவில்லை.

            பச்சை வண்ண சோலை வனத்தருகே நீண்ட கடற்கரை மணல் வெளி.  அந்த மணல் வெளியில் நடுவே முத்தும் பவழமும் பதிக்கப் பட்ட பொன்மீன் மேடை.   பௌர்ணமி முழு நாளில் நிலவின் கிரணங்கள் அந்த பொன்மீன் மேடையைச் சுற்றி ஒளி வெள்ளத்தால் நனைக்கும் பொழுது, தானாகவே தோன்றும் ‘ ‘ நிலவொளி மன்றம் ‘ என்ற திறந்த வெளி அரங்கம்.  பாரத தேசத்தில் அன்றைக்கு நிலவொளி மன்றத்தையும், பொன்மீன் மேடையையும் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. எத்தனை புலவர்கள் அவற்றின் எழிலைப் பற்றியும், அதில் நடைபெறும் கலைப் போர்களைப் பற்றியும் வரி வரியாக எழுதியுள்ளார்கள்.!

            கலைப்போர் ! ஆம். வைகாச வசந்த ருது பௌர்ணமியில் நிலவொளி மண்டபத்தில் வருடா வருடம் நடைபெறும் நடனப் போட்டிகள்தான் அந்த கலைப் போர்.  பாரதத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நடனப் பெண்மணிகள் வருவார்கள்.  ஏன் ! பாரசீகம், சீனம், கிரீஸ், அரபு நாடு போன்ற தேசத்து அழகிகளும் புத்த பௌர்ணமியில் அந்த பொன்மீன் மேடையில் ஆடும் ஒரு கணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.  நடனப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் ‘ நாட்டியப் பேரொளி‘’க்குக் கிடைக்கும் பரிசிலை வைத்து ஒரு சிற்றரசையே விலைக்கு வாங்கலாம்.  அது மட்டுமல்ல.  நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டுப் பெண்களின் அழகையும் திறமையையும் கணித்து ‘ அழகுப் பேரரசி ‘ என்ற பட்டம் அளிக்கப் பெறும் அழகுப் போட்டியும் நடை பெறும்.  அவற்றைக் காண வரும் மக்கள் கூட்டம் சொல்லி மாளாது.

            கலைப் போர் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.  கலை நிகழ்ச்சிகள் என்றாலே தமிழ் நாட்டின் பெண்மணிகளுக்கு எத்தனை விருப்பம் என்பதை எல்லோரும் உணர முடியும்.  அதுவும் சோழ நாட்டு கலா வல்லிகள் கலிங்கத்தின் பாலூரில் நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில் கலந்து கொண்டு பரிசில்கள் பெற்றுச் செல்வது ஒன்றே, கலிங்கத்துக்கும் சோழ நாட்டுக்கும் பகைமையை வளர்க்கக் காரணமாக இருந்தது.  இரு போட்டி நாட்டு கலைஞர்களுக்கிடையே நடை பெறும் போட்டிகளை, நாடுகள் மோதுவது போல எண்ணுவது மனித இயற்கைதானே !  தமிழகத்துத் தாரகைகள் நடனப் போட்டிகளில் வெற்றி பெறுவதைப் போல அழகுப் போட்டிகளில் பெரும்பாலும் கலிங்கத்துக் கட்டழகிகளே வென்று வந்தது கலிங்க மக்களுக்கு ஆறுதலை அளித்து வந்தது.

            போர் மேகம் திரண்டு எந்த நேரமும் சோழ – கலிங்கப் போர் துவங்கும் என்று இருக்கும் அந்த வருடம் புத்த பூர்ணிமா திரு நாளைக் கொண்டாடுவதா, வேண்டாமா என்ற பலத்த சர்ச்சை  இருந்து வந்தது.  இருப்பினும் இது நாள் வரை நடைபெற்ற விழாவைப் போர்க் காலத்தை முன்னிட்டு நிறுத்தினான் என்ற அவப் பெயர் தனக்கு வரக் கூடாது என்பதற்காக, விழாவை வழக்கத்தை விட சிறப்புடன் நடத்த உத்தரவிட்டான் கலிங்க மன்னன் அனந்த வர்மன்.  ஆனால் அதே சமயம் நாட்டின் பாதுகாப்பையும் நன்றாக இறுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தான்.  அதனால் மக்கள் கூட்டத்தை விடப் போர் வீரர்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.  சில துஷ்டப் பெண்கள் கூட “ இந்த வருடம் பருவப் பெண்களின் நாட்டியத்தை விட போர் வீரர்களின் நாட்டியந்தான் அதிகமாக இருக்கிறது “ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்கள்.

            அது மட்டுமல்லாமல் எரிகிற தீயில்  எண்ணெய் வார்த்தது போல முதல் ஒன்பது நாட்களில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தயார் நிலையில் இருக்கும் நாடுகளில் சோழ நாடும் கலிங்கமும் இருந்தது.  அதுவும் சோழ நாட்டு கார்குழலியின் நடனத் திறமையைப் பற்றிப் பேசாத மனிதனே இல்லை.  அவள் பெண்தானா, இல்லை தேவலோகத்திலிருந்து குதித்த ரம்பையா என்ற சர்ச்சை நிலவியது.  கார்குழலிக்கும் கலிங்கத்தின் கனவுக் கன்னி காமவல்லிக்கும் கடும் போட்டி இருந்து வந்தது.  காமவல்லியின் புது விதமான சுழல் நடனங்கள் கலிங்கத்துக்கு வெற்றி தேடித் தரும் என்று கலிங்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

            பொன்மீன் மேடையை ஒட்டிக் கட்டப் பட்டிருந்த சிறு சிறு குடில்களில் அன்றைக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் ஒப்பனை புரிந்து கொண்டிருந்தனர். அந்தக் குடில்களிலிருந்து நேரடியாக மேடைக்குச் செல்லத் தனித் தனியாக திரைச் சீலைப் பாதையும் அமைக்கப் பட்டிருந்தது  சேடிப் பெண்கள் சூழ இருக்கும் அழகுத் தாரகைகளும் அருகில் ஆண்மகன் யாரும் இல்லை என்ற தைரியத்தில் தங்கள் அழகுகளைச் சற்று சுதந்திரமாகவே விட்டு வைத்திருந்தார்கள்.

            சோழ நாட்டுக்காக விடப் பட்டிருந்த குடிலில் கார்குழலி தன்னை அலங்கரித்துக் கொள்வதை விட உடன் ஆடும் மற்றப் பெண்களின் அலங்காரத்தைச் சரி செய்வதையே கவனித்துக் கொண்டிருந்தாள்.  “ தேவி ! தாங்கள் இன்னும் தயாராகவில்லையே “ என்று தோழி சந்திரமதி கூறியதும் தான் சுவற்றில் பதித்திருந்த ஆள் உயர எழினியில் தன் கோலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்   கார்குழலி.  ‘ இப்படியா அரை குறை ஆடையுடன் உலவிக் கொண்டிருந்தோம், எந்த ஆடவனாவது தன்னை இந்தக் கோலத்தில் பார்த்து விட்டால் ‘ – அந்த எண்ணம் அவளது சிவந்த முகத்திற்கு அதிக சிவப்பை அளித்தது.  பாதம் வரை படர்ந்த அந்தக் கார்குழலை சீவி நெற்றிச் சுட்டி அணிந்து,  இந்த முகத்திற்கு ஒப்பனை தேவையேயில்லை என்பதைப் போன்ற சிவந்து, கனிந்த முகமும், சாதாரணப் பார்வையிலேயே நயன நாடகம் புரியும் கயல் மீன் கண்களும், கச்சைக் கயிற்றை இறுக்கிக் கட்டாததால் கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கும் மாங்கனிகளும், இறுக்கினால் ஒடிந்து விடுமோ என்று மேகலை கூட மெல்லப் பற்றியிருக்கும் இடையும், முழங்கால் வரை மறைக்கும் பட்டுச் சிற்றாடையும், வழவழப்பில் குழலியிடம் தோல்வி கண்டு நிற்கும். அந்தத் தந்த சிலைக்குக் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பதே வெட்கமாக இருந்தது.  கூட இருக்கும் சேடிப் பெண்களின் கண்களில் கூடக் கார்குழலியின் அழகு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. அதைக்  கண்ட சந்திரமதி, “ .“பெண்களே நீங்கள் மேடை அமைப்பைக் கவனியுங்கள்.  நான் தலைவிக்கு அலங்காரம் செய்கிறேன் “ என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

“கதவை நன்றாகச் சாத்தடி சந்திரமதி ! யாராவது வந்து விடப் போகிறார்கள் “

“ யாரும் வரமாட்டார்கள் அம்மா ! நீங்கள் வீணாய்க் கவலைப் படாதீர்கள்.” என்று கூறி அன்று அவளுக்கு அணிவிப்பதற்கான கருஞ் சிவப்புப் பட்டுப் புடவையை எடுத்து வைத்தாள்.

“ உங்களை இப்படிப் பார்க்கும்போது நான் ஆண்பிள்ளையாய் இல்லையே என்ற ஏக்கம் வருகிறதம்மா !’ 

‘ என்ன வெட்கம் கெட்ட பேச்சுப் பேசுகிறாய் சந்திரமதி ?

“ சத்தியமாய் அம்மா ! நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன் !  இன்றைக்கு நிலவொளி மன்றத்தில் நீங்கள் ஜொலிக்கும்போது, எத்தனை ராஜ குமாரர்கள் உங்களைக் கண்டு உருகப் போகிறார்களோ ?  எல்லாப் பெண்களும் உங்களைப்  பார்த்து பொறாமைத் தீயில் வாடப் போகிறார்கள்! .”

“ பரிகாசப் பேச்செல்லாம் வேண்டாம் சந்திரமதி !”

“ எப்படியோ அம்மா! இதுவரை அம்பலத்தில் ஆடிய நீங்கள் இனி அறையில் ஆட வேண்டிய காலம் வரத்தான் போகிறது.”

“ என்னடி புதிர் போடுகிறாய்?”

“ ஆம்! அம்மா! தங்கள் தாயார் கூறியதைத்தான் கூறுகிறேன்.  இன்னும் இரண்டு திங்களில் இந்தத் தந்த தேகத்திற்குப் புது சொந்தக்காரர் வரப் போகிறார். “

“ எனக்கே தெரியாமல் எவன் வரப் போகிறான்?”

“ வரப் போகிறவரை அவன் இவன் என்று சொல்லாதீர்கள் அம்மணி !  தங்கள் தந்தையாருக்கும், சிறிய தந்தையாருக்கும் இதில் சம்மதம் தானாம்.”

“ சந்திரமதி ! வாயை மூடு ! எதையும் இரைந்து பேசாதே !  நாம் இருக்கும் நாடு எது என்று புரிகிறதா ? “

“ ஏன்! கலிங்க நாடு ! அதற்கென்ன ? பயப்படுகிறீர்களா தேவி ?”

“ யாரைப் பார்த்தடி ‘ பயப்படுகிறீர்களா ‘ என்று கேட்டாய் ?  பல்லவராயரைத் தந்தையாகவும்,கருணாகரரைச் சிறிய தந்தையாகவும் அடைந்த நானா பயப்படுவேன்?” கோபத்தில் வார்த்தைகள் சற்று அதிர்ந்தே பிறந்தன .. அதன் விளைவுதான் பயங்கரமாக இருந்தது.  தீப்பொறி போல சம்பவங்கள் தொடர்ந்தன.

            கார்குழலி பார்த்துக் கொண்டிருந்த ஆளுயரக் கண்ணாடி நகர்ந்தது.  அதற்குப் பின்னாலிருந்து குறுவாளில் குருதி சொட்ட அறைக்குள் நுழைந்தான் ஓர் ஆறடி உயர வாலிபன்.  திடுதிப்பென்று நிகழ்ந்த அந்த செயலைக் கண்ட அதிர்ச்சியில் மயங்கியே விழுந்து விட்டாள் சந்திரமதி.  ஆனால் சோழ நாட்டின் பிரதான படைத் தலைவரும், பல்லவ வழித் தோன்றலும், பிற்காலத்தில் ‘ தொண்டைமான் ‘ என்ற பட்டம் பெற்று வண்டை  நாட்டு மன்னனாக முடி சூட்டப் பட்டவருமான கருணாகரத் தேவரின் அண்ணனும், பல போர்க்களங்களைக் கண்டு போர் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதையே தன் தொழிலாகக் கொண்ட பல்லவராயரின் புதல்வியாகக் கார்குழலி இருந்ததால், வந்தவனைத் துணிவுடன் ஏறெடுத்துப் பார்த்தாள்.  நல்ல உயரமும், மென்மையான உடல் வாகும், வீரக் களையும் சொட்ட நிற்கும் அந்த வாலிபன் பெருங் குடியைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும் என்பதை ,அவன் கண்கள் அவளைப் பார்த்து விட்டுத் தரையைப் பார்த்ததிலிருந்து புரிந்து கொண்டாள்.  தான் இருந்த அரைகுறை நிலை அவளுக்கு நினைவு வர, பட்டாடையை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு, “ யார் நீ “ என்று சீறினாள்.  அவனது மௌனம் அவளது கோபத்தைக் கிளறவே, “ அத்து மீறி இங்கு வருபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா “ என்று கனல் தெறிக்கக்  கேட்டாள்.

 image

      “ தெரியும் ! மரண தண்டனை !  அதைத் தான் இவனுக்கு அளித்தேன் “ என்று கூறி சரேலென விலகினான்.  அவனுக்குப் பின்னால் இருந்த  சுரங்கப் பாதையில் நெஞ்சில் குருதி கொப்பளிக்கப் பிணமாய்க் கிடந்தான் கலிங்கத்தின் காவலன் ஒருவன்.  கலிங்க வீரனைக் கொன்ற அந்த வாலிபன் அனந்தவர்மனின் பார்வையிலிருந்து தப்ப முடியாதே என்ற உணர்ச்சியால் கேட்டாள்.  “ யார் நீங்கள் ?”

“ விஜயேந்திரன் “ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டுத் திடுக்கிட்டாள் கார்குழலி.

“ யார் ! சாவகத் தீவின் இளவரசரா ?”

“  ஆம் ! தேவி ! தங்கள் சிறிய தந்தையின் உப தளபதி. சந்தேகமாயிருந்தால் இதோ பாருங்கள் “ என்று கூறி தனது இடது புஜத்தைக் காட்டினான்.  சுறாமீனின் பற்கள் பட்ட வடு அவனது புஜத்தை விகாரப் படுத்துவதற்குப் பதிலாகத் தனி அழகைக் கொடுத்திருந்தது.  அவனுடைய வீரக் கதையையும் அது பறை சாற்றியது. சோழ நாட்டுப் பெண்ணொருத்தியை சுறா மீனிடமிருந்து காப்பாற்றுகையில், சுறா மீன் அவனது இடது புஜத்தைக் கவ்வி இழுக்க, வலது கரத்தால் அதைக் கொன்ற மாவீரன் விஜயேந்திரன் என்பது அன்று தமிழகம் முழுவதும் பிரசித்தம்.  நடனப் போட்டிக்குக் கட்டாயம் போவேன் என்று தீர்மானித்துக் கூறியதும், தனது சிறிய தந்தை கூறியதும் நினைவிற்கு வந்தது. 

“ குழலி ! நிலவொளி மன்றத்திற்கு எப்படியும் போவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாய் ! அனந்தவர்மனைப் பற்றி நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை !  பரவாயில்லை ! உனக்காக உன்னைக் காப்பாற்ற எனது வலது கரம் அங்கிருக்கிறது “

            அதுவுமில்லாமல் அவளது தந்தையும், தாயும் அடிக்கடி அவளிடம் விஜயேந்திரனைப் பற்றிப் பிரஸ்தாபித்து வந்தது, சற்று முன் சந்திரமதி கூறியது, இரண்டையும் சேர்த்துப் பார்த்த அந்த புத்திசாலிப் பெண் தனக்கு முன்னே நிற்பவன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளன் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறவில்லை.  வெட்கத்தில் அவள் நெளியும்போது தானா அந்த விபரீதமும் நடக்க வேண்டும் ?  அவள் மார்பில் போர்த்தியிருந்த பட்டாடை வழுக்கித் தரையில் விழ, அவளது அழகுகள் விஜயேந்திரனை மின்னல் போலத் தாக்க, அந்த சில வினாடிகள் யுகங்களாகத் தேங்கின.  மயக்கம் தெளிந்து எழப் புறப்பட்ட சந்திரமதி இருவரது மயக்கத்தையும் தெளிய வைத்தாள். விஜயேந்திரனே மௌனத்தைக் கலைத்தான்.

            “ தேவி ! தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்து அதிகமாகிறது.  நீங்கள் யார் என்ற உண்மை இருவருக்குத் தெரிந்து விட்டது.  ஒருவனைத்தான் கொல்ல  முடிந்தது.  மற்றவன் ஓடிவிட்டான், காலில் என் குறுவாள் பதிந்தும் கூட.  அதனால் நீங்கள் இப்போதே என்னுடன் வாருங்கள். உங்களைப் பத்திரமாக சோழ நாடு சேர்ப்பிப்பது என் கடமை.”

தன்னைக் காப்பாற்ற ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் குழலிக்கு அதிக தைரியத்தைக் கொடுத்தது.

“ மன்னிக்க வேண்டும் சாவக இளவரசரே ! இத்தனை  தடைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் ஓடுவது நமது சோழ நாட்டுக்கு அவமானமல்லவா? “

“ தேவி! நான் சொல்வதை…..” என்று மேலே சொல்லப் போனவனை பேச முடியாமல் செய்தது அருகிலிருந்த கடல் தேவி ஆலயத்தின் மணி ஓசை.  அந்த ஆலயமணி ஓசை அவர்கள் தப்பிக்கும் பாதையை அடைத்து விட்டதே என்று வருந்தினான்.  அந்த பூஜை முடிந்த பிறகுதான் போட்டிகள் துவங்கும்.  பூஜை ஆரம்பித்த பிறகு நிலவொளி மன்றத்திற்கு யாரும் வர இயலாது.  அது போல திரும்பிப் போகவும் முடியாது.  அப்படிப் பாலூர் நகரின் காவலை அமைத்திருந்தான் அனந்தவர்மன். 

“ இனி பேச நேரமில்லை தேவி! இன்னும் சில வினாடிகளில் உங்களுக்கு அழைப்பு வந்து விடும் – மேடைக்கு வரச் சொல்லி.  மேடையில் ஆபத்தை எதிர் பார்க்கிறேன்.  ஆனால் எனது கரங்கள் உங்கள் பாதுகாப்புக்குத் தயாராய் இருக்கும்.” என்று கூறி வந்த வழியே மறைந்து விட்டான் விஜயேந்திரன்.

            ஆதவன் நிலத்தில் மறைய நீரிலிருந்து எழும்பிய முழுமதி – புத்த பூர்ணிமா மெல்ல உச்சிக்கு வரத் தொடங்கியது.  அதன் வெள்ளிக் கிரணங்கள் அந்த நிலவொளி மன்றத்தை அதன் பெயருக்கேற்ப மாற்றிக் கொண்டிருந்தது.  அதற்கு வெகு நேரம் முன்னரே மக்கள் வெள்ளம் மன்றத்தில் நிரம்ப ஆரம்பித்து விட்டது.  காவலர்கள் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை வைப்பது போல பந்தங்களைக் கொளுத்தி அதற்காக அமைக்கப்பட்ட கம்பங்களில் சொருகிக் கொண்டிருந்தனர்.  பொன்மீன் கடல் மணலில் படுத்திருப்பதைப் போலிருக்கும் அந்த பொன்மீன் மேடை  வண்ணத் தோரணங்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு தேவேந்திரனது நாட்டிய  சபையைப் போலக் காட்சியளித்தது.  பொன்மீன் மேடைக்குச் சற்றுத் தூரத்திலிருந்த கடல் தேவியின் ஆலயத்தின் மணியோசை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.  மக்கள் அனைவரும் பூஜைக்குப் பிறகு தொடரப் போகும் நாட்டிய நிகழ்ச்சிகளைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். 

            கடல் தேவியின் ஆலய மணியின் ஓசை நின்று ஒரு நிசப்தத்தைத் தோற்றுவித்தது. அங்கிருந்து வெளியே வந்த நான்கு பூசாரிகளில் ஒருவர் உச்சாடன நீர் எடுத்து வர, மற்றொருவர் குங்குமப் பிரசாதம் எடுத்து வர, மூன்றாமவர் உடுக்கு அடித்து வர,  நான்காமவர் வெண்கலத் தாம்பாளம் போன்ற மணியில் ‘ ணங் ணங் ‘என அடித்து வர – அந்நால்வரும் பொன்மீன் முகப்பில் இருக்கும் மேடையில் பொன்னாலான துர்க்கை அம்மனுக்குப் பூஜை செய்து முடிக்கவும் ‘ ஜெயவிஜயீபவ ‘ ‘ கலிங்காதி மன்னர் அனந்தவர்மர் வாழ்க ‘ என்ற வாழ்த்தொலி எழும்ப, அனந்தவர்மன் மன்றத்தில் நுழைந்தான்.  எப்பொழுதும் போர்க் கோலத்தில் இருக்கும் அனந்தவர்மன் அன்று பட்டாடை உடுத்தி, இடுப்பில் பட்டையான வாளும் கட்டியிருந்தது அவனை வித்தியாசமான கலாரசிகனாகக் காட்டியது.  குங்குமப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட அனந்தவர்மன் வலக் கரத்தை உயர்த்தி சமிக்ஞை செய்ய நாட்டியப் போட்டிகள் முறையாகத் துவக்கப் பட்டன. 

            வேங்கி நாட்டு நடனக் குழுவும், அதைத் தொடர்ந்து வந்த வங்க தேசம், ஸ்ரீவிஜயம் ஆகிய நாட்டு நடன அரசிகளும் சேர்ந்து மக்களுக்குப் புதிது புதிதான நாட்டிய முத்திரைகளைக் காட்டி மகிழ்ச்சிப் படுத்தினர்.  நான்காவதாகக் கலிங்கத்தின் நட்சத்திரமான காமவல்லி மேடையில் வந்து அழகுகள் தெறிக்க மயக்கும் புன்னகையுடன் நின்ற போது, கலிங்க மக்களின் உற்சாகம் கரை புரண்டது.  ‘ காமவல்லி’ ‘ காமவல்லி ‘ என்று கூறிக் கொண்டே மக்கள் வண்ண மலர்களை வாரித் தூவினர்.  அதுவும் காமவல்லி ரதி தேவியாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு மன்மதன் மீது காதல்  பாணம் தொடுக்கும்போது பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவனையும் அது மன்மதனாகவே மாற்றியது.  கரகோஷம் வானைப் பிளந்தது.  மக்களின் ரசனையை நன்கு புரிந்து கொண்ட காமவல்லியும், உடல் குலுக்கி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தாள்.  இம்முறை ‘ நாட்டியப் பேரொளி ‘ இவள்தான் என்பதை ஒவ்வொரு கரகோஷமும் கட்டியம் கூறியது.

image

            கடைசியாக வந்தது சோழ நாட்டின் முறை. திரைச் சீலைக்குப் பின்னால் நடனம் ஆரம்பிப்பதற்கு முன் செய்யப்படும் பூஜை மணி ஓசை கடைசியில் நிற்கும் காவலர் கூட்டத்திற்குக் கூடத் துல்லியமாகக் கேட்கும் அளவிற்கு அமைதி விளங்கியது.  திரைச் சீலை அகன்றதும், நடராசப் பெருமானைப் போல ஒற்றைக் காலில் நின்று பதம் பிடித்துக் கொண்டிருக்கும் கார்குழலியைக் கண்டு கூட்டம் அப்படியே ஸ்தம்பித்து விட்டது.  இவள் பெண்ணா, அல்லது பொன்னாலான சிலையா என அனைவரும் வியந்து நிற்கும் பொழுது கார்குழலியின் நயனங்கள் மெதுவாக அசையத் தொடங்கின.  அதைத் தொடர்ந்து அவளது விரல்களும், பாதங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அசையத் துவங்கியது.  ஒரு நாட்டியப் பிரளயம்.  இப்படி ஒரு தெய்வீக அழகு இருக்க முடியுமோ என அனைவரும் அதிசயிற்கும் அளவிற்கு அவளது நாட்டியம் தொடர்ந்து நடை பெற்றது.  பாதங்கள் பூமிக்கும், வானத்திற்கும் பறக்க, கண்கள் பாவங்கள் ஆயிரம் காட்ட, சுழன்றாடும்போது பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் பகையை மறந்து அவளுக்கு அடிமையாயினர்.  கடல் தேவியின் பூசாரிகளில் ஒருவனாக வந்து பொன்மீன் மேடைக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் விஜயேந்திரன் கூட இப்படி ஒரு நடனத்தை ஆயுளில் கண்டதில்லை என்று வியந்து கொண்டிருந்தான்.  அதே சமயம் கலாரசிகர்கள் எண்ணற்றவர் இருப்பினும் பொறாமைத் தீயில் வேகும் சில வெறியர்களின் செய்கை பின்னால் கலிங்கத்தை எரிக்கக் காரணமாயின என்ற சொல்லுக்கிணங்க சம்பவங்கள் தொடர்ந்தன.

            வண்ண விளக்குகளைக் கையில் வைத்துக் கொண்டு தங்கத் தாம்பாளத்தில் நின்று தீப தேவதையாகக் கார்குழலி காட்சி அளித்து சிலை போல மாறி நிகழ்ச்சியை முடித்த உடனேயே மேடைக்கு வந்த நடுவர்கள் கார்குழலியை ‘ அழகுப் பேரரசியாக ‘ அறிவித்ததோடு மட்டுமல்லாமல், நாட்டியப் போட்டியிலும் சோழ நாடு வெற்றி பெற்றதாக அறிவித்ததும் மக்களின் கரகோஷம் வானைப் பிளந்தது.  அதே சமயம், கலிங்க நாட்டு வெறியர்கள் குழப்பம் விளைவிக்கவும் தலைப்பட்டனர். சம்பிரதாயமாக வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில் வழங்கும் கலிங்க மன்னன் அனந்தவர்மனாலும் சோழ நாட்டின் வெற்றியை ஜீரணிக்க இயலவில்லை.  தயக்கத்துடன் மேடைக்குச் செல்ல எழுந்த அனந்தவர்மன் காதில் கலிங்கத்தின் காவலன் ஒருவன் ஏதோ கூற, அவன் ஆத்திரத்துடன் மேடை மீது ஏறினான். 

image

“ எனதருமை மக்களே ! நாட்டியப் போட்டியிலும், அழகுப் போட்டியிலும் வெற்றி பெறும் மகளிருக்கு செங்கதிர் மாலையும், தங்கப் பதக்கமும் மற்றும் நவரத்தினங்களையும் பரிசில்களாக அளிப்பது நம் பழக்கம்.  இம்முறை இரண்டிலும் வெற்றி பெற்ற கார்குழலி நங்கையாருக்கு எமது பாராட்டுதல்கள்.  நடனம், அழகு மட்டுமல்லாமல் நாம் வைக்காத மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தப் பெண்ணை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.  அதுதான் உளவு வேலை.  ஆம்! இந்தப் பெண் நடனப் போட்டியில் கலந்து கொள்ள வந்ததின் முக்கிய நோக்கம் நமது கலிங்கத்தின் படை பலத்தையும், போர் ரகசியங்களையும் தெரிந்து கொள்ளத்தான்.  அதுமட்டுமல்ல, இவள் யார் தெரியுமா? சோழ நாட்டின் சேனாபதியின் அண்ணன் மகள். இவளது ரகசியத்தைத் தெரிந்து கொண்ட நமது கலிங்க வீரனைக் கத்தியால் குத்தி ‘ கொலையரசி ‘ என்ற பட்டமும் பெறப் போகும் பெண்ணரசி இவள்.  அழகாக இருக்கிறாள்; அற்புதமாக ஆடுகிறாள்: ஆனால் முடிவில் விஷத்தைக் கக்கப் போகிறாள்.  ஆம்! இவள் ஒரு படமெடுத்தாடும் பாம்பு.  இந்த நாக கன்னிகைக்கு என்ன பரிசு தருவது? நீங்களே தீர்ப்புச் சொல்லுங்கள் “  மக்களின் உணர்ச்சிகளுக்கு நெருப்பு வைத்தான் கலிங்க மன்னன்.

“ கொல்லுங்கள் ! நாகப் பாம்பை அடியுங்கள் “ என்ற குரல் முதலில் குழப்பம் விளைவித்த வெறியர்களிடமிருந்து எழுந்தது.  அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு “ மக்கள் தீர்ப்பே இந்த மன்னன் தீர்ப்பு . சவுக்கால் அடிபட்டு இவள் இந்த நிலவொளி மன்றத்தில் பொன்மீன் மேடையிலேயே மரணமடைய வேண்டும்.  அதுதான் அவளுக்கும் அவளை அனுப்பிய சோழ நாட்டுக்கும் சரியான தண்டனை.  அதையும் நானே நிறைவேற்றுகிறேன்” என்று கூறி இடுப்பில் சொருகியிருந்த சவுக்கை எடுத்து அவள் முன் நின்றான்.

“ கலிங்க மன்னனே ! கலிங்க கலா ரசிகர்களே ! நாட்டியத்தின் மீதுள்ள காதலால் தான் இந்த நிலவொளி மன்றத்திற்கு வந்தேனே தவிர வேறு உளவுத் தொழில் புரிய அல்ல.  அதுவும் பெண்களை இதற்கு அனுப்பும் வழக்கமும் சோழ நாட்டில் இல்லை.  இன்னொன்றையும் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள். பல்லவராயரின் மகள் சாவைக் கண்டு பயப்படும் கோழை அல்ல.  உங்கள் தண்டனை என்னை ஒன்றும் செய்யாது.  ஆனால் நான் சிந்தப் போகும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் இந்த கலிங்க நாடு பதில் சொல்லும் காலம் வரும்.  இது சத்தியம் “ என்று கூறினாள் கார்குழலி.

image

“ அதையும் பார்ப்போமே “ என்று கூறி சாட்டையால் அவளை மூன்று முறை ‘ பளீர் பளீர் ‘ என்று அடித்து விட்டு அவள் எப்படி துடிக்கிறாள் என்று பார்த்தான் அனந்தவர்மன்.  சாட்டை அடிபட்ட அந்தத் தந்தத் தேகத்திலிருந்து ரத்தம் பீரிட்டது.  இவ்வளவு நேரம் எல்லாவிதமான பாவங்களையும் முகத்தில் காட்டிய கார்குழலி அப்போது எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக நின்றாள்.  அவளது அமைதி அனந்தவர்மனின் ஆத்திரத்தைக் கிளப்பியது. மறுபடியும் அவளை அடிக்கக் கையைத் தூக்கிய போது தான் கழுத்தில் கூர்மையாக ஏதோ குத்துவதை உணர்ந்து பின்னால் திரும்ப எத்தனித்தான்.  “ இன்னும் ஒருமுறை உன் கை அசைந்தால் உனது உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும் “ என்று சொல்லி கடல் தேவியின் சூலாயுதத்தை அனந்தவர்மன் கழுத்தில் வைத்து அழுத்தி ராட்ஷச னைப் போல் நின்று கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

            காவலர் ஆயிரக் கணக்கானோர் அருகில் இருந்தும் தனியே மேடைக்கு வந்த தன் விதியை நொந்து கொண்டான்.   “ டேய் ! உயிர் மீது ஆசையிருந்தால் உடனே ஓடிவிடு ! இல்லையென்றால்…..”

“ உன்னால் எதுவும் செய்ய முடியாது அனந்தவர்மா ! அக்கிரமக்காரனுக்கு சொந்த நாடே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொள்.  கார்குழலிக்கு நீ கொடுத்த சாட்டையடியே போதும், உன்னையும் உன் ஊரையும் எரிக்க.  ஆனால் நீ எனக்குச் செய்த துரோகத்திற்கு என்ன பரிசளிப்பது? ‘

“ யார் நீ?”

“ விஜயேந்திரன் ! தெரியவில்லையா ! சாவகத் தீவின் இளவரசன்.  உன்னால் மறக்க முடியுமா “  இருபது ஆண்டுகளுக்கு முன் எங்கள் தீவிற்கு விருந்தினனாக வந்து தங்கி என் தந்தையையும் தாயையும் பதில் விருந்துக்கு என உன் கப்பலுக்கு அழைத்து எரியும் நெருப்பில் அவர்களைத் தூக்கி எறிந்து என் நாட்டையும் கைப்பற்றிக் கொண்ட துரோகியே ! உன்னையும் உன் நாட்டையும் சுட்டு எரிக்கப் போகிறேன் பார் !  உன்னைக் காப்பாற்ற வரும் காவலர் கூட்டத்தை எப்படித் தடுக்கிறேன் பார் !” என்று கூறி சூலாயுதத்தின் பின்புறத்தால் அருகிலிருந்த வெண்கல மணியை அடிக்கத் தான் காண்பது கனவா, இந்திர ஜாலமா என்று புரியாமல் அனந்தவர்மன் திகைத்தான்.

            விஜயேந்திரனின் ஆட்கள் வரிசையாக வைக்கப் பட்டிருந்த விளக்குக் கம்பங்களிலிருந்து தீப்பந்தங்களை எடுத்து காவலர்கள் மீது வீச, காவலர்களின் முன்னேற்றம் தடைபட்டது.  பூசாரி வேடத்திலிருந்த விஜயேந்திரனின் மற்றுமொரு சேவகன் கையில் வைத்திருந்த நெருப்புச் சட்டியில் ஏதோ தூவ பெரும் புகை அந்தப் பொன்மீன் மேடையை சூழ்ந்து கொண்டது.  மேடையையே மக்கள் காண இயலாத அளவிற்குப் புகை மறைத்ததோடு மட்டுமல்லாமல் புகையின் எரிச்சல் கண்களைத் தாக்க மேடைக்கு எதிர்த் திசையில் மக்கள் வெள்ளம் ஓடவும் ஆரம்பித்தது.  யாரோ எறிந்த தீப்பந்தம் மேடையில் விழ, திரைச் சீலையிலெல்லாம் நெருப்புப் பிடித்துக் கொண்டு பரவத் தொடங்கியது.  அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு சூலாயுதத்தைத் தட்டி விட்டுத் தன் இடுப்பில் இருக்கும் பட்டை வாளை எடுக்க முயற்சித்தான் அனந்தவர்மன்.  ஆனால் அதற்குள் விஜயேந்திரனின் சூலாயுதம் தன் தோளில் பாயும் என்பதை அனந்தவர்மன் உணருவதற்குள் அது நிகழ்ந்தது.  மேடையில் உள்ள திரைச் சீலை எரியத் தொடங்கியதும், தப்பிச் செல்லும் வழி அடைபட்டு விடக் கூடாதே என்று விஜயேந்திரனும் மயங்கி விழப் போன கார்குழலியைத் தூக்கிக் கொண்டு நெருப்பின் ஊடே கடல் தேவி ஆலயத்தை நோக்கி ஓடினான்.

 “ அப்படியே படுத்துக் கொள் குழலி !” என்று கூறி, முதுகிலும், இடையிலும் பட்ட சாட்டைக் காயங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பை மெதுவாக ஒத்தினான் விஜயேந்திரன்.  உடலில் பட்ட வேதனையை விட முதுகை அவன் முகத்திற்குக் காட்டிக் கொண்டு அழகுகள் அழுந்த அவன் மடியில் படுத்திருக்கும் குழலிக்கு இன்ப வேதனைதான் அதிகமாக இருந்தது.  காயம் பட்டிருக்கிறது என்ற சாக்கில் தன் ஆடைகளைத் தேவைக்கு அதிகமாகத் தளர்த்தியும், ஒத்தடம் தருகிறேன் என்று கூறி முரட்டு இதழால் முத்தமிடும் அந்த வாலிபனின் சிகிச்சை இன்னும் தேவையாக இருந்த போதிலும் வெட்கம் வேட்கையைத் தடுக்க “ விடுங்கள் “ என்று கூறி எழ முற்பட்டவளை, அப்படியே அழுத்தி முதுகை மெல்ல வருடிக் கொடுத்தான்.

“ நாம் எங்கிருக்கிறோம்?”  மெதுவாக ஒலித்த கார்குழலியின் காதருகே ஒலித்தது விஜயேந்திரனின் மறுமொழி. “ சொர்க்கத்திற்கு அருகில் “

“ அதைக் கேட்கவில்லை “

“ நானும் அதைச் சொல்லவில்லை குழலி ! இந்த நதியைக் கடந்து விட்டால் தெரிவது தான் சோழ நாட்டின் பாசறை “

image

அப்பொழுதுதான் கவனித்தாள் குழலி, தானும் விஜயேந்திரனும் படகில் சென்று கொண்டிருப்பதை.  தன்னந்தனியாக நிலவு பொழியும் நள்ளிரவில் மனதுக்குப் பிடித்த மணாளன் மடியில் படகின் தாலாட்டில் மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணை மெல்லப் புரட்டினான். ‘ ம் ம் ‘ என்ற இன்ப வேதனை அவள் குரலில் தெரிந்தது.  நிலவின் வெள்ளிக் கீற்றில் அந்தப் பொன் முகத்தைப் பவழம் தவழும் இதழை ,விருந்துக்கு அழைக்கும் கன்னக் கதுப்பைக் கண்ட விஜயேந்திரன் தேனைக் கண்ட நரி போலானான்.  தன்னைக் காப்பாற்ற இவ்வளவு முன்னேற்பாட்டுடன் வந்திருக்கும் வீர புருஷனைக் கண்டதும் அவள் நாணம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொள்ளத் துவங்கியது.  தனது மலர்க் கரங்களைக் கொண்டு அவன் முகத்தைச் சிறைப் படுத்தினாள்.  மெல்லத் திறந்து மூடும் அவளது கண்கள் அவனை “ வா! வா! “ என அழைத்துப் பொன்னுலகத்தின் வாசலைக் காட்டியது.

            நதியின் பிரவாகத்திலிருந்து எட்டிப் பார்த்த மீன் கூட்டங்கள் கூட அந்தக் காதலர்களின் நிலையைக் கண்டு வெட்கி நதிக்குள் அமிழ்ந்து கொண்டன.

                      *******************************************************