பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)

image

அழகின் இலக்கணமாய் நிற்கின்ற திருமகளின் 
  கருணையே பொங்குகின்ற கண்களாம் மேகங்கள் 
ஏழ்மையில் உழலுகின்ற அடியார்கள் வாழ்வதுவும் 
  பசுமையோடு வளம்பெறவே பொன்மாரி பொழியட்டும் 
ஊழ்வினையால் செய்துவிட்ட தீவினையின் வெப்பத்தை 
  வருணவன் உதவியோடு மெதுவாகத் தணியட்டும்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே ஆசிகளும் வழங்கட்டும் 
  வாழ்க்கையே சோலைகளாய்ப் பூத்துக் குலுங்கட்டும்.

மெய்வருத்தி மனதினிலே உன் நாமம் நிலைநிறுத்தி
  வேள்விகள் யாகங்கள் தவங்களென செயவியலா 
மெய்யுருக்கி உனைப்பாடி அனுதினமும் சேவித்து 
  அடைந்தேன் தஞ்சமென நாடிவந்த அடியார்க்கும் 
மையுண்ட கருணையே பொங்குகின்ற கண்களின் 
   விழியசைவால் சொர்க்கபுரி கொண்டுபோய் காட்டிடுவாய் 
கயல்விழியால் மென்மையொடு அன்புநிறை அருள் நோக்கால் 
  அடியார்க்கு எண்ணிய எண்ணியாங்கு அருளிடுவாய் 

ஈரேழு  உலகங்கள் இனிதாக உருவாக்கி
  இயக்குகின்ற போதுநீ அலைமகளாய்த் தெரிகின்றாய் 
தரணியிலே தஞ்சமென்று  அடிபணிந்த அடியாரைக் 
  காக்கின்ற   போதுநீ  திருமகளாய்த்  திகழ்கின்றாய்  
உறுமுகின்ற ஒன்னலர்கள் தலைதெறிக்க ஓடிடவே 
  வீறுகொண்டு எழுந்தநீ மலைமகளாய்த்  தெரிகின்றாய் 
திருமகளாம்  கலைமகளாம்  மலைமகளாம்  தேவியரே
 களிப்போடு மனதார தண்டனிட்டு வணங்குகிறேன்! 

(பொன்மகள் தொடர்ந்து வருவாள்)