ஷீலாவுக்கு மூக்குக்கும் உதட்டுக்கும் நடுவில் ஸ்டிக்கர் பொட்டு வைத்தாற்போல மொழு மொழுன்னு மரு-மச்சம் – கருப்புக் கலரிலே!அது பர்த் மார்க்காம். அதைக் கண்டாலே அவளுக்குப் பயங்கர வெறுப்பு. அதுக்காகவே கண்ணாடி பார்ப்பதைக் கூட முடிஞ்ச வரை தவிர்ப்பாள். எமரி பேப்பர் போட்டுத் தேச்சுக் கூடப் பார்த்தாள். ரத்தம் தான் வந்ததே தவிர மரு போகவில்லை. உதட்டுக் கிட்டே மச்சம் இருந்தா அதிலே ஆர்வம் ஜாஸ்தியாம் என்று பிரண்ட்ஸ்களின் கலாட்டா வேற. மற்றபடி பாக்க அசின் மாதிரி டக்கரா இருப்பா. .
அதுக்காகவே டாக்டர் சுரேஷ் கருப்பாக இருந்தாலும் சரி என்று கல்யாணம் செய்து கொண்டாள் . முதலிரவில் கேட்டாள் இதை எப்படி எடுப்பது என்று. சுரேஷ் சொன்னான். “ரொம்ப சுலபம். நானே ஒரு சின்ன ஆபரேஷன் செய்து எடுத்துவிடுவேன். ஆனால் அதற்கு முன்னால் ஒரு ரகசியம் சொல்றேன். கிட்ட வா” என்று காதில் சொன்னான். அப்படியா! அப்போ இதை ஆயுசுக்கும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி அவனை ஆசையோடு இறுக்கிக் கட்டிக் கொண்டாள் ..