மீனங்காடி ( எட்டாவது வாரம்)

image

“நிச்சயமா ! ஆனால் நீங்கள் ஏன் எங்களுக்காக இதைச் செய்யணும்?” மேரி கேட்டாள்.

டோனி மெதுவாகச் சொல்லத் தொடங்கினான்.

“ மேடம் ! என் வாழ்க்கையில் இந்த ‘மீனங்காடி’ ஒரு திருப்பு முனையா அமைந்தது என்றால் தப்பில்லை. என்னைப் பற்றிச் சொல்லி போரடிக்க விருப்பமில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறிக் குட்டிச் சுவரா போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கைக்குப் புது அர்த்தமே இங்கு வந்த பிறகு தான் கிடைத்தது.  எனக்கு இப்படி புது வாழ்வு கிடைத்ததற்கு நன்றி சொல்கிற மாதிரி ஏதாவது செய்யணும் என்று எனக்கு எப்போதும் ஒரு ஆசை !  நீங்கள் உங்கள் பிரச்சினைகளைச் சொன்னதுமே முடிவு செய்து விட்டேன்.  இந்த மீனங்காடியில் உங்களுக்கு மருந்து கிடைக்கும். அந்த மாதிரி சந்தோஷத்தை உண்டாக்குகிறோம் நாங்கள் !

டோனியும் மேரியும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பெரிய நண்டு பறந்து சென்றது.  யாரோ தூக்கிப் போட்டது தான். கூடவே வந்தது கோரஸ்.

“ போகுது பார் ! போகுது பார் ! அந்த நண்டு நியூ டெல்லிக்குப் போகுது பார் ! – போகுது பார் ! போகுது பார் ! எதிரொலித்தது.

“ ரொம்ப சரி டோனி ! இந்த மீனங்காடியில் எது இருக்கிறதோ இல்லையோ, நிச்கயமாக ஒரு சந்தோஷ அலை அடிக்கிறது ! அதைப் புரிந்து கொள்ள சீக்கிரம் வருவேன் .”

வாட்சைப் பார்த்தாள். சீக்கிரம் நடந்து போனால் தான் இடைவேளை முடிவதற்கு முன் ஆபீஸ் போய்ச் சேரலாம். நாம் வந்து போகும் நேரத்தை எல்லாம் அந்த டைப்பிஸ்டுகள் குறித்து வைத்தாலும் வைப்பார்கள்.

“  ஹேய் ! நீங்க ஏன் நாளைக்கு இதே நேரத்தில் இங்கே வரக் கூடாது? வரும்போது மறக்காம ரெண்டு டீ கப் கொண்டு வாங்க ! எனக்கும் சேர்த்து ! “  சொல்லிக் கொண்டே திரும்பப் போய் பக்கத்தில் இருக்கும் ஒரு பையனுக்கு ஏரி மீனுக்கும், கடல் மீனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லத் தொடங்கினான் !

                              மீண்டும் மீனங்காடி 

image

அடுத்த நாள் சரியாக சாப்பாட்டு நேரத்தில் மேரி அந்த மீனங்காடிக்கு வந்தாள். டோனி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தது போல ஆர்வத்தோடு பேசினான்.

“ இந்த மார்க்கெட் கடைசியில் ஒரு நல்ல ஹோட்டல் இருக்கிறது ! வாருங்கள் போகலாம்” என்று கூறி, அவளை  அழைத்துச் சென்றான்.  அங்கிருந்து பார்த்தால் துறைமுக ஏரியா நன்றாக இருந்தது. இருவரும் ‘ வடா பாவ் ‘ சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினர்.  அவன் சொன்ன மீனங்காடி கதையைக் கேட்டதும் இந்த மீன் மார்க்கெட்டிலும் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றனவே என்று ஆச்சரியப் பட்டாள்.  இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே இவர்கள் இவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என்றால் அந்த மீனங்காடியில் ஏதாவது சிறப்பு இருக்கத்தான் செய்யும் என்று மேரி எண்ணினாள்.

“ நீங்க சொன்னதைக் கேட்டதும் எனக்கு எங்கள் ஆபீஸ் தான் நினைவுக்கு வருகிறது ! இரண்டு இடத்திலும் ஒரே மாதிரி பிரச்சனைகள் .”

“ நிஜமாகவா? “

“ ஆமாம் ! எங்கள் டிபார்ட்மெண்ட் மக்கள் ஒரே மாதிரி வேலையைத் திரும்பத் திரும்பச் செய்து அலுத்துப் போய் விட்டார்கள்.  அவர்கள் பிரச்சினை என்னவென்றால், “ நாம செய்யற சின்னத் தப்பை எல்லாம் பெரிசு படுத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  ஆனால் நாம செய்யற ஆயிரம் நல்லதை எல்லாம் யாரும் கண்டுக்கவே மாட்டேன் என்கிறார்கள்” என்பதுதான். ‘ சரியான பேஜார் வேலை’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். நீங்களோ இந்த மீனங்காடியில் பேஜாரான வேலையை ஜோரான வேலையா மாற்றி இருக்கீங்க ! கேட்கவே ஆச்சரியமா இருக்கு  ! ”

“ எந்த வேலையானாலும் அதை செய்துதான் ஆகணும் என்றால் அது வெறுப்பாகத் தான் இருக்கும். இந்த கம்ப்யூட்டர் மக்களை எடுத்துக் கொள்ளுங்களேன். உலகம் பூரா சுற்றி வருகிறார்கள். ரொம்ப ஜாலியா இருக்குமே என்று கேட்டால்  ‘ சரியான போரப்பா ‘ என்று தான் சொல்கிறார்கள்.  எந்த வேலையும் கொஞ்ச நாட்களில் போரடிக்க ஆரம்பிச்சிடும். “

“ ரொம்ப சரி டோனி !  நான் ஸ்கூலில் படிக்கும்போது மாடலிங் செய்தேன். மற்ற டீனேஜ் பெண்ணுகளுக்கெல்லாம் ஒரே பொறாமை.  இப்படி ஜாலியான வேலை கிடைச்சுதே என்று.  ஆனால் எனக்கு கொஞ்ச நாளிலேயே அது போரடிக்க ஆரம்பித்து விட்டது.  அதே மாதிரி பின்னால்  பத்திரிகையில் செய்தி தயாரிக்கும் வேலையும் கிடைத்தது.  நாளாக நாளாக அதுவும் அலுப்பாகத் தோன்ற ஆரம்பித்தது.”

“ நீ சொல்லுவது உண்மை தான் மேரி ! இப்படி யோசிச்சுப் பாரு ! எந்த வேலையும் போராக இருக்கும் என்று சொல்வது போல எந்த வேலையையும் ஜாலியா சந்தோஷமா செய்ய முடியும் என்பதும் உண்மையாகத்தானே இருக்கணும்? ”

“ எனக்குப் புரியலை ! சரியாகச் சொல்லேன் டோனி !

“ ரொம்ப சுலபம் ! இந்த மீன் மார்க்கெட்டில் இருக்கிற மற்ற எல்லா கடைகளையும் கவனி ! அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி செய்த வேலையையே திரும்பத் திரும்ப செக்கு மாடு மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் ‘ மீனங்காடி ‘ வித்தியாசமாகச் செய்கிறதாலே எங்களுக்கு நல்ல வியாபாரம்.  நான் முன்பே சொன்ன மாதிரி நாங்களும் இப்படித் தான் இருந்தோம். பிறகு நாங்கள் எல்லோரும் ஒரு மனதா இந்தப் புதிய எண்ணத்தைத் தேர்ந்தெடுத்தோம். ‘ எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை.  ஆனால் எந்த வேலையை எப்படிச் செய்வது என்ற முடிவு நிச்சயமாக நம் கையில் தான் இருக்கு ! இதுதான் நாங்கள் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம் ! அதனால் தான் இந்த மீனங்காடி இப்போது உலகப் புகழ் பெறும் அளவுக்கு உயர்ந்து விட்டது.  நாம் செய்கிற வேலையில் நமது எண்ணத்தைக் கொண்டு வருவது தான் மிக மிக முக்கியம் ! ”

image

(தொடரும்)