இரவிலே வாங்கினோம் விடிந்தது புது யுகம்
(இது இந்திய அரசியல் நிகழ்வுகளைத் தழுவி, ‘ஏன் நம்நாடு பொன்னாடாக மாறக்கூடாது ?’ என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட கதை. மற்றபடி எந்த மனிதரையும் மதத்தையும் இனத்தையும் நாட்டையும் நம்பிக்கையையும் குறிப்பிடுவதற்கோ குறை கூறுவதற்கோ எழுதப்பட்டதல்ல.)
சுதந்திர இந்தியாவின் வரலாறு தான் என் வரலாறும். ஒரே சமயத்தில் பிறந்த எங்கள் இருவருடைய வாழ்க்கையில் தான் எத்தனை ஒற்றுமைகள்.
பரதனூர். அழகு கொஞ்சும் அருமையான கிராமம்.அதன் சுகமோ சுவையோ மணமோ அலாதி..ஊருக்கு ஓரத்தில் மலை – அதில் விழும் அருவி. அதில் பெருகும் ஓடை. அந்த அருவியின் பெயர் பாலருவி. அது விழும் இடம் பூலோக சொர்க்கம்.- பூமழை என்று அந்த இடத்திற்குப் பெயர். ஓடைக்கு அப்புறம் அக்கரை;இப்புறம் இக்கரை. இரண்டிற்கும் இடையே வட்ட வட்ட பரிசில்கள்.
இயற்கை தரும் சுகங்களை பறிப்பதற்கென்றே மனிதன் பிறந்திருக்கிறான் போலும். இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே ஓடை மட்டுமல்ல வெறுப்பின் வாடையும் வீசும். மல்லிகைப் பூவிலும் காயிலும்,குதிரையிலுமே ஜாதியைப் பார்க்கும் மனிதன். அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அடிப்பது, வெட்டுவது, ஊரைக் கொளுத்துவது எல்லாம் சர்வ சாதாரணம். இக்கரைக்கும் அக்கரைக்கும் இதை மையமாகக் கொண்டு அடிக்கடி சண்டை அடிதடி வெட்டு குத்து கொலை தொடர்ந்து நடக்கும். ஓடையில் தண்ணீருக்குப் பதிலாக ரத்தம் ஓடும்.
நான் பிறந்த விதமே தனி. அக்கரையில் அப்பா. தீவிரவாதி. இக்கரையில் அம்மா காந்தியவாதி. காந்தீயம் தீவிரத்தை வென்றது. இரு கரைகளுக்கும் இது பிடிக்குமா? வெடித்தது முன்னூறாம் கிராமப் போர். நெற்களம் போர்க்களமாயிற்று. கதிர் அறுக்கும் அறுவாள் தலை அறுக்க ஆரம்பித்தது. நெல்மணிகளுக்குப் பதிலாகக் கண் மணிகள் சிதறின. என் தந்தை யாருக்கும் தெரியாமல் அம்மாவை அழைத்துக் கொண்டு டெல்லிக்குப் போய் விட்டார். இரு கரைகளும் இருவரையும் வெட்டிப்போடவேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமை காட்டினர். புதிய பிரச்சனை ஒன்றும் வந்தது.
பரதனூர் கிராமத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தார் வெள்ளைக்கார கலெக்டர். பூமழை சோலை ! இருவருமே சொந்தம் கொண்டாடினர். பிரித்தாள்வது புதிய பிரச்சனையைக் கொண்டுவந்தது. பூமழையை இக்கரைக்கே கொடுப்பது என்று முடிவு செய்தனர். இதனால் கலாட்டா கொள்ளை கொலை கற்பழிப்பு தாண்டவமாடியது பரதனூரில். இந்த சமயம் பார்த்து தன் மகன் தனது கிராமத்திலேயே பிறக்க வேண்டும் என்று முடிவு கட்டினார் என் தந்தை. அதற்காக நிறை மாத கர்ப்பிணியான என் அம்மாவை அழைத்துக் கொண்டு துணைக்கு டெல்லியிலிலிருந்து ஒரு மருத்துவச்சியுடன் பரதனூர் வந்தார். ஊரில் ஊரடங்கு. ஆனால் ஊர் அடங்கவில்லை.
அம்மா அப்பா ஆயிஷா -மருத்துவச்சி மூவரும் பூமழை சோலையில் தஞ்சம் அடைந்தனர். எப்படியாவது அம்மா வீட்டுக்குப் போய்விடவேண்டும் என்று இரவில் அப்பாவே படகை ஓட்டிக்கொண்டு மூவரும் சென்றனர். நடுநிசி. நடு ஆற்றில் அம்மாவுக்கு பிரசவ வலி. அம்மா வலியில் துடிக்க அப்பா என்ன செய்வது என்று அறியாமல் துடிக்க ஆயிஷாவின் பழகிய கரங்கள் என்னை இந்தப் பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்தன. நான் உலகில் பிறந்தமைக்காக அழுத புனிதமான பொன்னாள். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14க்கும் 15க்கும் இடைப்பட்ட நள்ளிரவு. ஆம். இந்தியாவின் சுதந்திரம் பிறந்த அந்தப் புனிதத் தருணத்தில் தான் நானும் பிறந்தேன். என் பொல்லாத வேளை நான் பிறந்த உடனே பாரதி என்ற எனது மாதாவும் மறைந்தாள்.
என் தந்தை என்னை அழைத்துக் கொண்டு இக்கரையில் இருக்கும் என் மாமன்மார்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓடக்கரையிலே இருந்தார். பரதனூர் என்ற பெயரே மறைந்துவிட்டது. இக்கரை அக்கரை என்றே அழைக்கப்பட்டன. இரண்டு ஊரும் பிரிபட்டன. பூமழை சோலையோ இக்கரையுடன். இதனாலேயே அடிக்கடி இக்கரைக்கும் அக்கரைக்கும் கலவரம் வெடிக்கும். அப்பா யாருடனும் பேசுவதில்லை. தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியான அவரிடம் அனைவருக்கும் மதிப்பும் கோபமும் இருந்தன. இரண்டு ஊர்களும் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று எல்லையம்மன் கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அவரது நெருங்கிய பங்காளியே அவரைக் கோவிலில் வைத்துக் குத்திக் கொன்றான். அந்த சமயம் ஐந்து மாதக் குழந்தை நான். இறக்கும் முன் அவர் ‘ஏ ராம்’ என்று என்னைத் தான் அழைத்தாராம். .என் பெயர் ராம்.
நான் வளரத் தொடங்கினேன். என் பெரிய மாமா தான் என்னை வளர்த்தார். மிகவும் நேருமையானவர் அக்கரையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் அவருக்கு மதிப்பு. இக்கரைக்கு அவர் தான் தலைவர். ஊரைச் சிறப்பாக்க அவரை மாதிரி திட்டம் போட்டவர்கள் யாருமில்லை. என் வளர்ச்சியில் அவருக்கு தனி ஈடுபாடு. மற்ற மாமாக்களும் அவருக்குத் துணையாக இருந்து ஊரை விவசாயத்தில் சிறு தொழிலில் நெசவில் முன்னேற்றம் அடையச் செய்தனர். பூமாலைத் தண்ணீரைத் தேக்கி அணையும் கட்டினார். “நீங்கள் நாட்டுக்காக உழையுங்கள் நான் உங்களுக்காக உழைக்கிறேன்” என்று அடிக்கடி சொல்வார். என்னை டெல்லிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். பள்ளி கல்லூரி படிப்பெல்லாம் டெல்லியில் தான் படித்தேன்.
எனக்கு பதினைந்து வயது இருக்கும். அச் சமயத்தில் பெரியமாமாவின் துணை தேவை என்று மலைக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஆட்கள் வந்தார்கள். மாமாவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தார். ஊரின் செழுமையைப் பார்த்த அந்தக் கயவர்கள் ஊரையே கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல. மாமா கட்டிய அணையையும் உடைத்து விட்டார்கள். உடைந்தது அணை மட்டுமல்ல. மாமாவின் மனதும் கூட. இரண்டே வருடத்தில் மாமா துவண்டுவிட்டார்.சொந்த வாழ்க்கையிலும் மாமாவுக்கு ஆயிரம் பிரச்சினை. அவரது மனைவி காலமாகி விட்டாள். அவரது ஒரே மகள் இந்துவும் கணவனை இழந்து அவர் வீட்டுக்கே வந்துவிட்டாள்.
மாமாவுக்கு உடம்பு ரொம்ப முடியவில்லை என்று ஓடி வந்தேன். ‘இந்து இவனை நல்லா கவனிச்சுக்கோ’ என்று சொல்லி கண்ணை மூடினார். இந்தும்மா தான் எனக்கு அம்மா அப்பா எல்லாம்.
பெரியமாமாவுக்குப் பிறகு சின்ன மாமா கொஞ்ச நாள் நிலபுலன்கள் , ஊர் விவகாரம் எல்லாம் பார்த்தார். அக்கரையில் இருந்து ஆட்கள் தகராறு செய்ய வந்தார்கள். சின்ன மாமா பார்க்கத் தான் சின்னவர். ஆனால் கீர்த்தி பெரிது. அக்கரைக் கும்பலுக்குச் சரியான பாடம் கொடுத்தார். அதற்குப் பிறகு சமாதானம் பேச வந்த இடத்தில் அப்படியே நெஞ்சு வலியில் மறைந்து விட்டார். எல்லோரும் அதற்குப் பிறகு இந்தும்மாவைத் தான் எதிர்பார்த்தார்கள்- ஊரைப் பராமரிக்க.
இந்தும்மாவுக்குத் துணிச்சல் ஜாஸ்தி. என் மேல் ரொம்ப அக்கறை. ‘ராம் ! நீ இந்த உலகத்திலே பெரிய ஆளாய் வரணும்னு’ அடிக்கடி சொல்லுவாங்க. ஆனா இந்தும்மாவுக்கு பங்காளி பகையாளி எக்கச்சக்கம். கிராமத்திலே லேவாதேவி பார்த்துக்கொண்டிருந்து கொள்ளை அடித்த மக்களை விரட்டிவிட்டு கோவாப்ரேட்டிவ் பாங்க் ஆரம்பிச்சார். அக்கரையில் ஒரு சிறு காலனி இருந்தது. அக்கரைப் பெரிய மனிதர்கள் எல்லாம் அந்த காலனி மக்களை கொடுமைப் படுத்துவது தெரிந்ததும் அந்தக் காலனியை அக்கரையிலிருந்து பிரித்து தனி ஊராக மாற்றிவிட்டார். அக்கரை ஆட்கள் மறுபடியும் சண்டைக்கு வந்த போது அவர்களுக்கு சரியான பாடம் வரும் படிச் செய்தார்.
ஒரு பொம்பளைக்கு இவ்வளவு துணிச்சலா ? என்று பங்காளிக் காய்ச்சல் வேற! ஊர்ப் பெருசுகளெல்லாம் இந்தும்மாவை பதவியிலிருந்து இறக்கத் திட்டம் தீட்டினர்.’ஊருக்கு நல்லது செய்யறப்போ தடுக்கிறாங்களேன்னு இந்தும்மா ஊர்ப் பெரியவர்களை ஜெயிலில் போட ஏற்பாடு செய்தார். ஜனங்க கொதித்து இந்தும்மாவைப் பதவியை விட்டுத் தூக்கினார்கள். கொஞ்ச நாள் தான். இந்தும்மாவின் பெருமையை உணர்ந்து அவங்களையே திரும்ப வரவழைத்தார்கள். இந்தும்மாவுக்கு இமாலய வெற்றி. கூடவே ஒரு சொந்த சோகம். வளர்ந்த பிள்ளை சின்னப் பிள்ளையை ஒரு விபத்தில பறி கொடுத்தாங்க. பெரிய பிள்ளை ராஜா அண்ணா தான் அம்மாவுக்கு உதவியா இருந்தார். ராஜா அண்ணா வெளிநாட்டிலே சோனாவை கல்யாணம் செய்தபோது வாழ்த்துச் சொன்ன முதல் ஆள் நான் தான்.
நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பம்பாயில் அணு ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தேன். ‘அணு ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் அதில் நம் நாடு ரொம்ப முன்னேறணும்’ என்று இந்தும்மா அடிக்கடி சொல்வார்கள். அவங்க சொன்னபடி 74இல் எங்கள் டீம் ராஜஸ்தானத்திலே அணுகுண்டு சோதனை நடத்தி உலகத்தையே அதிர வைத்தது. இந்தும்மாவுக்கு அதில் ரொம்பப் பெருமை. எனக்கு அணு ஆராய்ச்சியை விட மின்னணுத் துறை ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தியாவில் கலர் டிவி கொண்டு வந்தபோது நானும் அதில் பங்கேற்றேன். இந்தியாவே கலர் டீவியில் மின்னியது.
இந்த டீவி சமாசாரத்திற்கு கொழும்பு போன போது தான் சாந்தினியை சந்தித்தேன். அவளது யாழ் தமிழ் எனக்கு மிகவும் பிடித்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன் அவள் தான் என் வாழ்க்கைத் துணைவி என்று. என் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்ல? சிங்களத்தவருக்கும் யாழ் தமிழருக்கும் போர் வெடித்துக் கொண்டிருந்த நேரம். (அப்போது நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. பின்னாளில் என் மனைவியின் சொந்தக் காரர்கள் தான் என் ராஜா அண்ணாவின் மரணத்துக்குக் காரணமாவார்கள் என்று) இந்தும்மாவின் ஆசியுடன் என் திருமணம் நடந்தேறியது.
இதற்கு நடுவே கோவில் பேரைச் சொல்லி மக்களை பயமுறுத்தும் தீவிரவாதிக் கும்பலை இந்தும்மா அடக்கி வைத்தார். அதனால் இந்தும்மாவை கோவிலுக்கு எதிரி என்று சொல்லி அவர் வீட்டிலேயே வேலை செய்துகொண்டிருந்த காவல்காரனை வைத்தே கொலை செய்து ஊரையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். துடிதுடித்துப் போய் விட்டேன். எங்கள் இந்தும்மாவுக்கா இந்தக் கதி! ராஜா அண்ணாவின் கண்ணீரைத் துடைத்து விட்ட முதற்கரம் என்னுடையது தான்.
இந்தும்மாவிற்குப் பிறகு ராஜா அண்ணா எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டார். கம்ப்யூட்டர் தான் இந்தியாவை முன்னுக்குக் கொண்டு வரப்போகிறது என்பதை அறிந்த முதல் தீர்க்கதரிசி ராஜா அண்ணா தான். ‘”ராம் நீ அன்னிக்கு டீவியைக் கொண்டு வந்தாய். அதைவிட இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னுக்குக் கொண்டு வர நீ எல்லாம் செய்ய வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் பொருளாதாரம் எல்லாம் ஐடி துறையில் தான் இருக்கிறது “ என்று உறுதியாக நம்பி அதற்காகக் கோடு போட்டார்.
ராஜா அண்ணாவிற்கும் நிறைய எதிர்ப்புக்கள் இருந்தன. என் மனைவி சாந்தினிக்கு உதவப் போய் இன்னும் சிக்கலில் மாட்டிக் கொண்டார் . சாந்தினியின் உறவினர்களைக் காப்பாற்ற தன் ஊரிலிருந்து ஆட்களை அனுப்பினார். அதில் பிரச்சினை பெரிதாகி இரண்டு கூட்டமும் அவரை எதிர்த்தன. என் வீட்டுக்கு அவரை ஒருமுறை விருந்துக்கு அழைத்து விட்டு ராஜா அண்ணாவின் வருகைக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம். நானும், சாந்தினியும், என் மகன் பிரேமும்,நாராயணனும்,மகள் லக்ஷ்மியும் காத்துக் கொண்டிருக்கும் போது எங்கள் கண் முன்னாலேயே எங்கள் வீட்டு வாசலில் ராஜா அண்ணாவை சாந்தினியின் ஊர்க்காரக் கும்பல் குத்திக் கொன்றனர். கொடூரக் காட்சி அது. துடிதுடித்துப் போனோம்
(இன்றைக்கு எனக்கு நூறு வயது ஆகப் போகிறது. அப்படியும் உடம்பில் தளர்ச்சி இல்லை. நடுக்கம் இல்லை. ஆனால் அந்த ராஜா அண்ணா கொலைக் காட்சியை நினைத்தால் தலை முதல் கால் வரை தன்னாலே ஒரு நடுக்கம் வரும்)
ராஜா அண்ணாவின் ஆசைகள் வீண் போக வில்லை. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்தியா உலகமயமாக்க முதல் படி கட்டப் பட்டது. பிரேம், நாராயண்,லக்ஷ்மி மூவரும் என்னுடன் கடுமையாக உழைத்தனர் கம்ப்யூட்டர் துறையில் ஒரு கலக்குக் கலக்கினோம். உலகமே அதிசயத்தது. போட்டி போட்டுக் கொண்டு உலகத்தின் அத்தனை நாடுகளும் நம்முடைய சாஃப்ட்வேருக்காக மன்றாடும் நிலை வந்தது. நாட்டின் பொருளாதாரமும் அதற்கேற்ப முன்னேறிக் கொண்டே வந்தது.
BPO அவுட்சோர்சிங்க் என்ற மாபெரும் திட்டத்தைக் கண்டுபிடித்தேன். என் மகள் மகன் மூலம் அதை செயல்படுத்தவும் செய்தேன். உலகப் பொருளாதாரமே நடுங்க ஆரம்பித்தது. நாம் இந்தியாவின் காலனிகளாக மாறிவிடுவோமோ என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் கவலைப் படத் தொடங்கின. அமெரிக்காவே இந்தியாவைத் தனக்குச் சமமான தேசமாகக் கருதத் தொடங்கியது. இதிலும் போட்டி இல்லாமல் இல்லை. சீனாவும் இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னணியில் வர ஆரம்பித்தது. அமெரிக்கா செல்ல விசா கேட்டு நின்றது போக இன்று இந்தியாவிற்கு வரத் துடிக்கும் அமெரிக்கர் ஏராளம். நமது மேனேஜ்மெண்ட் பள்ளிகளிலும் தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் படிக்க உலகமெங்கும் போட்டி.
அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் எனக்கு உதவத் தயாராய் இருந்தார்கள். எனக்கு எழுபது வயதாகும் போது தான் நான் புதியதாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதுவே என் பிறந்த நாள் விழா தலைப்பாயிற்று. அந்த நல்ல நாளிலே புதுமை ஒன்றும் நடைபெற்றது. பக்கத்து நாடான நேபாளம் நம்முடன் இணைந்து சிக்கிம் போல மாநில அந்தஸ்து பெற்றது. சொல்லுவதற்கு வெட்கமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் பணக்காரன் ஆனேன்.
அதற்குப்பின் நடைபெற்ற முப்பது ஆண்டுகளும் பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய நாட்கள். இந்தியாவின் அசுர முன்னேற்றம் அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. ப்ரேம் இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் தேவையான ரோடுகள், அணைகள், நதி இணைப்பு, கடல் வழி, போன்ற இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் பணியில் ஈடுபட்டு உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்தான். நாராயண் ஒவ்வொரு கிராமத்தையும் பரதனூர் ஆக மாற்றினான். நகரத்து நெரிசலைக் குறைக்க மக்களைக் கிராமத்துக்கு அனுப்பினான். ஒவ்வொரு கிராமமும் ஒரு சாட்டிலைட் நகரம் போல செயல் பட்டதால் கிராமத்திலிருந்தே வேலை செய்வதை மக்களும் வரவேற்றனர். கிராமம் சொர்க்கமாயிற்று. லக்ஷ்மி இரும்புத் துறையிலும் மற்ற நிலக்கரித் துறையிலும் பெரிய சாதனை புரிந்தாள். பீகார் நிலக்கரிச் சுரங்கத்துக்குக் கீழே இருந்த வைரச் சுரங்கமும், கோலாரில் கிடைத்த புது தங்கக் கனிமன் பாறைகளும், அஸ்ஸாமில் புதிதாகக் கிடைத்த பெட்ரோலியம் எண்ணையும் இந்தியாவின் பொருளாதாரத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது.
ப்ரேம், நாராயண், லக்ஷ்மி இவர்களுடன் ஓட முடியாததால் நான் வயற்காட்டைக் கவனிக்க ஆரம்பித்தேன். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இவற்றுடன் உணவுப் புரட்சியும், மருத்துவ புரட்சியும் ஆரம்பித்தேன். இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் அதிபர்களும் என்னுடன் இணைந்தனர்.
எனது 80 வது பிறந்த நாளை கொண்டாட என் குடும்பத்துடன் யாழ்ப் பாணம் சென்றிருந்தோம். அப்போது தான் எனக்குத் தகவல் கிடைத்தது எனக்கு பாரத ரத்னா கிடைத்திருக்கிறதென்று. அதைவிட மகிழ்ச்சியான செய்தியும் கொழும்பில் கிடைத்தது. இலங்கை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் உருவெடுத்தது. இலங்கையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்த இலங்கை இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தது.
அடுத்த ஐந்து வருடங்களில் பங்களாதேஷும் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவை மாபெரும் நாடாக மாற்றியது. சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இருந்ததைப் போல் இந்தியாவும் சீனாவும் உலக வல்லரசுகளாகத் திகழ்ந்தன.
நான் பிறந்த நேரத்தின் சந்தோஷத்தை வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.பாரத ஜனாதிபதியாக நான் இருக்கவேண்டும் என்று இந்தியாவின் எல்லா கட்சிகளும் ஏக மனதாக என்னைக் கேட்டுக் கொண்டன. நான் மறுத்துவிட்டேன்.
இந்தியாவில் மேலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்தன. வானத்தில் மிதக்கும் வீடுகள். கடலுக்கடியில் தொழிற்சாலைகள், இமயப் பனிமலையிலிருந்து மின்சாரம், கேரளாவில் கிடைத்த யுரேனியம் கொண்டு அணுவின் ஆக்கபூர்வ சேவை. நமது இந்தியா சிகரம் தொட்டது.
இன்னும் ஓரே வருடம் செஞ்சுரி அடிக்க முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் பிறந்த நாளுக்காக இல்லை. இந்தியாவின் நூறாவது சுதந்திர நாளுக்காக. அப்போது தான் என் வாழ்க்கையில் இதுவரை அறியாத புது ரகசியம் ஒன்று வெளிப்பட்டது. திரைப் படங்களில் தான் இந்த மாதிரி க்ளைமாக்ஸ் கடைசியில் வரும். அதுபோல எனக்கு 99 வருடம் கழித்து வந்த செய்தி என்னை திக்குமுக்காடச் செய்தது. அதுவும் என் மகன் நாராயண் மூலமாக அது தெரிய வந்தது.
பாகிஸ்தான் பிரதமரின் தந்தை ரஹீம் எனது இரட்டைச் சகோதரராம்.பரதனூர் ஓடையில் என்னுடன் படகில் பிறந்தவராம். என் தந்தை மருத்துவச்சி ஆயிஷா பேகத்திடம் ஒரு குழந்தையையும் என் அம்மாவின் நகைகளையும் கொடுத்து அனுப்பினாராம். ஆயிஷா பாகிஸ்தான் சென்று ரஹீமை வளர்த்து பிறகு இறக்கும் போது உண்மையை சொல்லிவிட்டு சென்றாளாம்.ரஹீம் பாகிஸ்தானில் கடவுள் போல கருதப்படுபவர். இஸ்லாமை ஆக்கப் பணியில் உயர்த்தி உலகமே வணங்கும் அளவிற்கு உயர்ந்தவர். அவருக்கு இந்த உண்மை பல வருடங்களாகத் தெரிந்திருந்தும் யாருக்கும் சொல்லாமல் இருந்தார். என் மகன் நாராயண் கராச்சி சென்றபோது அவர் அவனை அழைத்து என்னை சந்திக்க விரும்பவதாகவும் கூறினார். இரு சகோதரர்களும் காஷ்மீரில் சந்திதோம். பரதனூர் கதைகளைக் கூறினேன். ‘அல்லாவின் கருணை’ என்று புன்னகை பூத்தார். இரு பெரும் கிழவர்களும் ஒரு மாபெரும் சதித்திட்டம் தீட்டினோம். அதற்காக ரகசியமாக உழைத்தோம். அந்த உழைப்பிற்கான பலன் கிடைத்தது. 2047 ஆகஸ்ட் 15 அன்று நூறு வருடங்களாகப் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்ந்தனர்.
விடிந்தது புதுயுகம்.
இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், இணைந்த ‘இந்திய ஐக்கியக் குடியரசு’ என்ற மாபெரும் வல்லரசு.