எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்
மேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினாள்.
‘எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை. ஆனால் எந்த வேலையை எப்படிச் செய்வது என்ற முடிவு நிச்சயமாக நமது கையில் தான் இருக்கிறது. ‘
மேரி யோசித்தாள். ‘ ஏன் எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை?
‘சரியான கேள்வி மேரி ‘
நாம் வேலையை எப்போது வேண்டுமானாலும் விட்டு விடலாமே ! அந்த வகையில் பார்த்தால் முதல் கருத்துக்கான முடிவு நம் கையில் தானே இருக்கு . ஆனால் அது புத்திசாலித்தனமாகுமா ? நமக்குக் கிடைத்த வாய்ப்பையும், திறமையையும் நழுவ விடுவது போல அல்லவா அமையும் ! அதனால் தான் மறுபடி சொல்கிறேன். வேலையைத் தேர்ந்தெடுக்கிற முடிவு நம் கையில் இல்லை. ஆனால் கிடைத்த வேலையில் நாம் கொண்டு வருகிற ஆர்வம், முயற்சி , கவனம் எல்லாம் நம்ம கையில் தான் இருக்கு. ‘
டோனி தொடர்ந்தான். “ நான் ஒரு பாட்டி கதை சொல்றேன் ! என் பாட்டி எப்போதும் சந்தோஷத்தோடு தான் எல்லா வேலையையும் செய்வாள். நாங்களும் வீட்டிலே அவளுக்கு ஒத்தாசையா தட்டு கழுவறது, பாத்திரம் எடுத்து வைக்கிறது இந்த வேலையெல்லாம் ஜாலியா செய்வோம். அதுக்குக் காரணம் பாட்டியோட ஈடுபாடு. ஒரு குஷி ! ஒரு விளையாட்டு போல இருக்கும். எங்கள் வீட்டு அடுப்படி தான் எங்கள் விளயாட்டு மேடை. இப்ப புரியுது. பாட்டிக்குப் பாத்திரம் தேய்க்கிற வேலையெல்லாம் பிடிக்காமல் இருந்தாலும் அதை ஜாலியா செய்யும்படி தன்னை மாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஜாலியா செய்ய வைத்தாள் .
அந்த மாதிரி தான் நானும் என் நண்பர்களும் இந்த மீனங்காடியில் ஒவ்வொரு நாளும் ஒரு புது உற்சாகத்தைக் கொண்டு வருகிறோம். சோகமா வந்து ஏனோ தானோ என்று வேலை செய்வதில் யாருக்கு லாபம்? அதுக்குப் பதிலா சந்தோஷமா – குஷியா – ஜாலியா வேலை செஞ்சா ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய நாளாக இருக்கும். இந்த எண்ணத்தைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம். ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாய் அமைய இந்த ‘ எண்ணம் ‘ ஒன்று இருந்தால் போதும். நான் சொல்வது சரி என்று உனக்குப் படுகிறதா? “
“ நிச்சயமா “
எங்களுடைய எண்ணங்களைப் பற்றி நினைக்கும்போது எங்களுக்கே ரொம்பப் பெருமையாக இருக்கு. உலகமே எங்கள் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப் பட வேண்டும் என்று முடிவெடுத்தோம். இப்படி முடிவு எடுத்த பிறகு ஒவ்வொரு நாளும் குஷி நாள் தான். சாதாரண நாள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் சொல்வது உனக்குப் புரியுதா? மீன் கடை வேலை என்பது ஈரம், குளிர், நனைந்த உடை, நாற்றம், வழுக்கல் எல்லாம் கலந்த கஷ்டமான வேலை. ஆனால் அந்த வேலையில் எப்படி எங்கள் எண்ணத்தைக் கொண்டு வந்தோம் என்பதுதான் எங்கள் வெற்றி.”
“ புரியுது டோனி! ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு வேலை செய்கிறீர்கள். அந்த எண்ணம் தான் உங்க வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது. நாம் செய்யற வேலையை ஏன் சாதாரணமாகச் செய்யணும்? உலகமே பாராட்டுற அளவிற்குப் பெரிசா செஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? ரொம்ப சரியாய்ப் படுது டோனி!”
“ புரிந்து கொள்வது சுலபம் மேரி! ஆனால் செய்யறது அவ்வளவு ஈஸி கிடையாது. ஒரே நாளிலே இந்த மாதிரி மாத்திக்க முடியாது. எங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு. நான் சொன்னேன் இல்லே? முன்னாடி நானும் சொந்த வாழ்க்கையை வேலையோடு போட்டுக் குழப்பி நானும் குழம்பிக்கிட்டிருந்தேன். உலகமே என் கிட்டே மோசமா நடந்துக்கிற மாதிரி ஒரு எண்ணம். அதைப் பழி வாங்க நானும் மத்தவங்க கிட்டே படு மோசமா நடந்து கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் என்னைத் தனியா கூப்பிட்டு அறிவுரை சொன்னார். “ ஏன் இப்படி வெறுப்போடு வேலை செய்யறே? விருப்பத்தோடு , அதுக்கு மேலே ஆர்வத்தோடு அதுக்கும் மேலே எண்ணத்தோடு செய்! சொர்க்கமே உன் காலடியில் கிடக்கும்” என்று. நானும் தீவிரமா யோசித்துப் பார்த்தேன். ‘நாம் ஏன் அவர் சொன்னபடி மாறக் கூடாது? ‘ என்று. அவர் சொன்ன விதத்திலே, வார்த்தைகளிலே எனக்கு முழு நம்பிக்கை பிறந்தது. மனிதன் தன் எண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்ற தத்துவத்தைக் கண்டு கொண்டேன்.”
மேரிக்கு டோனியின் பேச்சு மட்டுமல்ல, அவனையும் ரொம்பப் பிடித்து விட்டது. பகல் கனவில் ஆழ்ந்து கொண்டிருந்த அவள் சட்டென்று விழித்துக் கொண்டாள் . டோனி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “ சரி டோனி! நானும் நிச்சயமாய் முயற்சிப்பேன் ! இந்த வெற்றிக்கு ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்ற ஒரு மருந்து தானா? இல்லை, இன்னும் வேறு மருந்து இருக்கா? – ஆர்வத்தோடு கேட்டாள் மேரி.
“ இந்த வெற்றிக்கு மொத்தம் நாலு காரணம் கண்டு பிடிச்சோம். இந்த ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்’ தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இது இல்லாமல் மற்றது எல்லாம் இருந்தும் பிரயோஜனமில்லை. இன்னிக்கு இத்தோட நிறுத்திக்குவோம். மற்ற மூன்றையும் அப்புறம் பார்த்துக்கலாம். உனக்கு எப்போ நேரமிருக்கிறதோ அப்போ கூப்பிடேன். நாம் பேசலாம். என் போன் நம்பர் தெரியுமில்லையா? “
“ உங்க மீனங்காடியில தான் ஒவ்வொரு மூலையிலும் பெரிது பெரிதாக எழுதி வைத்திருக்கிறீர்களே !
ஆமாமில்லே! நாங்க ஏன் வெட்கப்படணும்? உன்னை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம் மேரி ! மீண்டும் பார்க்கலாம்.”
(தொடரும்)