எருமைக் காவல் தண்டனை

image

“அடேய் சீவாச்சு! ” யாரோ கூப்பிட்டமாதிரி இருக்கே! ரொம்பத் தெளிவா தெரிஞ்ச குரல் மாதிரி இருக்கு. தொறந்த ஜன்னல்லே எட்டிப்பார்த்தா  வழக்கம் போல மாட்டுக் கொட்டகை தான் தெரியுது. அங்கேயும் ஆள் யாரையும் காணோம். ‘சரி! நம்ம மனச்சாட்சி தான் சத்தம்போட்டுக் கூப்பிட்டிருக்கும்’ னு நினைச்சுக்கிட்டு குப்புறப் படுத்து தூக்கம் பிடிக்க ஆரம்பிச்சேன்! மறுபடியும் “அடேய் சீவாச்சு! ” என்ற குரல் தெளிவாக மாட்டுக் கொட்டகையிலிருந்து வந்தது.

என் ரூமைத் தொட்டாப்போல மாட்டுக் கொட்டகை – அதில் ஒரு டஜன் எருமை மாடு. ரூரல் போஸ்டிங்கில குக்கிராமத்துக்கு வந்த எனக்கு இந்த மாட்டுக்கொட்டகை அட்டாச்சுடு வீடு தான் சவுகரியமான வீடு. முக்கியமா வீட்டுக்காரம்மா மூணு வேளைக்கும் சோறு வேற போடறாங்க! மாட்டுக் கொட்டகை தான் பெரிய மைனஸ் பாயிண்ட்! இந்தக் கிராமத்திலே இதைவிட நல்ல வீடு கிடைக்க சான்ஸே இல்லை. என் ரூம் மேட் சேது – அவன் போஸ்ட் ஆபீஸில் கிளார்க்கா இருக்கான். அவன் இதே வீட்டிலே நாலு வருஷமா இருக்கான். பெரிய மனசு பண்ணி என்னை ரூம் மேட்டாக சேர்த்துக்கிட்டான்.

ரெண்டு பெரும் பேச்சலர்ஸ். ராத்திரியெல்லாம் என்னென்னவோ பேசுவோம். அவனுக்கு ஜாதகத்தில சனி. இன்னும் ஏழரை வருஷம் கழிச்சுத்தான் அவன் மொறப் பொண்ணு கோமளாவைக் கட்டுவானாம். எனக்கு வாயில சனி. ‘என் கல்யாணத்துக்கு இப்போ என்னப்பா அவசரம் –  ரேவுக்குக் கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாமே ’ ன்னு  ஒரு பந்தாவுக்குச் சொன்னதை அப்பா அம்மா சரியாப் பிடிச்சுக்கிட்டாங்க! அவளுக்கு இப்போ தான் பதினாறு வயசாகுது.அவளுக்குக் கல்யாணம் ஆகிறதுக்குள்ளே நான் ரிடையரே ஆயிடுவேன் போலயிருக்கு!   

இப்போ தான் நாங்க ரெண்டு பேரும் பக்கத்து ஊருக்குப் போய் ஒரு பலான படம் பாத்துட்டு ஒரு பிரண்ட் ரூமிலே கொஞ்சம் பீர் அடித்துவிட்டு வந்தோம். சேது குப்புறப் படுத்து பொணம் மாதிரி தூங்கிட்டான். எனக்குத் தான் தூக்கம் வரவேயில்லை. பார்த்த படத்தில வந்த ஹீரோவுக்கு பதிலா  நான் -ஹீரோயினோட குஜால் .. அந்த மூடிலிருந்தேன். காத்துக்காகத் திறந்து வைச்சிருந்த ஜன்னலாண்ட ஒரு அசிங்கமான கறுப்பு எருமை என்னையே முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தது. ‘சூ’ ன்னு விரட்டப் போனேன். அப்பத் தான் எனக்கு வாழ்க்கையிலே முதல் முறையாத் தூக்கி வாரிப்போட்டது. அந்த எருமை தன் வாயைத் திறந்து  "அடேய் சீவாச்சு! “ ன்னு கூப்பிட்டது.

(நான் ரீல் விடறேன்னு நீங்க நினைக்கலாம். இருந்தாலும் முனி – காஞ்சனா – பீட்ஃசா படம் பார்த்து ரசித்த நீங்கள்  இதை படத்தில சொன்னா ஒத்துக்கிவீங்க!  ஆனா நான் சொன்னா  மட்டும் ஏத்துக்க யோசிப்பீங்க இல்லையா? சத்தியமா சார்! நான் பாத்தது கேட்டது எதுவும் விஞ்ஞானத்துக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். ஆனா முழுக்க முழுக்க உண்மை.)

image

image

அப்புறம் அந்த எருமை கடகடவென்று பேச ஆரம்பித்தது. "அடேய் சீவாச்சு! நான் யாரு தெரியுதாடா?”

அந்தக் குரல் வைக்கோலைத்   தின்னுட்டு  ம்மேய்ய்ன்னு கத்துகிற  எருமைக் குரல்  மாதிரி இல்லை. கொஞ்சம் பழகின வயசான குரல் மாதிரி இருந்தது. பேசும் போது அந்த எருமையின் மூக்கு அசிங்கமா அசையறதைப் பாக்கறப்போ  கொஞ்சம் பயமா இருந்தது. இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ‘நீ.. நீங்க யாரு’ ன்னு கேட்டேன்.

பக பகவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டது அந்தக் கருப்பு எருமை. “என்னைத் தெரியலையாடா? நான் தாண்டா..–  உன் URS  தாத்தா! சாட்சாத் உடுமலைப் பேட்டை ராமசாமி சர்மா! . குரல் மாறிப் போச்சாடா?”

மறுபடியும் தூக்கிவாரிப் போட்டது. ஆனா அதுக்குள்ளே தூக்கி வாரிப் போடறது பழக்கமாப் போயிடுச்சு. பின்னே என்ன சார்! ஐந்து நிமிஷத்திலே பத்து தடவைத்  தூக்கி வாரிப் போட்டா என்ன பண்ணறது?

“அட அர்ஸ் தாத்தாவா?”

“ஆமாண்டா உங்க அப்பனோட அப்பன் தான்! இப்போவாவது புரிஞ்சுதா? சரியான ட்யூப் லைட்ரா நீ ! அது சரி ! நீ எப்படி இருக்கே? பாங்க் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டியா? உங்கப்பன் எப்படி இருக்கான்? உங்கம்மா – மாமனாரை  அடிச்சு விரட்டிய புண்ணியவதி எப்படி இருக்கா? ரேவுக்குட்டி எத்தனாங்கிளாஸ் படிக்கிறா?”

நிஜமாகவே என் தாத்தா தான். அஞ்சாறு வருஷம் முன்னாடி சைக்கிள்ளே பராக் பார்த்துக்கிட்டு போகும் போது ஒரு லாரி மேல மோதப் போயிட்டாரு. அவரைக்  காப்பாத்த லாரிக்காரன்  வண்டியை ஒடிச்சுப் பக்கத்தில  பள்ளத்துக்குத்  திருப்பினான்.  பள்ளத்தில இருந்த எருமைமாடு ஸ்தலத்திலே மரணம். லாரிக்காரன் தாத்தாவைக்  கன்னா பின்னான்னு திட்டினான். எருமைக்காரன் வேற தாத்தாகிட்டேர்ந்து பணத்தை வைன்னு கத்தினான். நான் தான் தாத்தாவைக்  காப்பாத்தி பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன்.

 image

ஆனால் அந்த எருமை ஆக்ஸிடெண்டுக்குப்  பிறகு தாத்தா சுத்தமா மாறிட்டார்.அதுக்கு முன்னாடி ‘ பாகீரதீ ! இதென்ன காப்பியா கழுநீரா’ ன்னு கத்தினார்னா  வீடே அதிரும். ‘பாருடா! உங்க தாத்தா கொடுமைப் படுத்தராறு’ ன்னு சொல்லி அம்மா தினமும் அழுவாள். ஆனால்   அந்த ஆக்ஸிடெண்டுக்குப்  பிறகு தாத்தா பெட்டிப் பாம்பாய் மாறிட்டார். அம்மா அதுதான் சாக்குன்னு கீரியாய் மாறிட்டா. அடிக்கடி செத்த எருமை ஞாபகம் தாத்தாவிற்கு வந்துடும். அவர் தூக்கம் வராம அவதிப் படுவார். அந்த எருமை செத்த திதி அன்னிக்கு தாத்தா ராத்திரியெல்லாம் ம்மேய்ய்ன்னு கத்திக்கிட்டே இருப்பார். கேட்க ரொம்பப் பாவமா இருக்கும். மாசா மாசம் அந்த திதி அன்னைக்கு அவரை ரூமிலே வைத்துப் பூட்டிவிடுவோம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அம்மா ஒரு நாளைக்கு நேராவே சொல்லிட்டா- ‘பகவதி கோவிலுக்கோ எரவாடிக்கோ  போயிங்கோ’ ன்னு. அடுத்த நாள் தாத்தா திடீர்ன்னு காணாமப் போயிட்டார். நாலு வருஷத்துக்கு அப்புறம் இங்கே இப்போ என்கூட எருமை மாடா பேசறார். நம்பவே முடியலை!

image

“என்னடா சீவாச்சு யோசிச்சுக்கிட்டிருக்கே?”

“நிஜமாவே நீங்க நீங்க தானா தாத்தா? எப்படி நீங்க இப்படி?”

“அதெல்லாம் பெரிய கதை. சொன்னா போரடிக்கும். சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோ ! உங்க அம்மாகிட்டே கோவிச்சிக்கிட்டு  உடுமலைப் பேட்டையை விட்டுட்டு நேரே காசிக்குப் போனேன். அங்கே ஒரு பெரிய மகான் இருந்தார். அவர் கிட்டே அந்த எருமையைக் கொன்ன பாவத்தைப் போக்க என்ன வழின்னு கேட்டேன்! அல்பாயுசா செத்த அந்த எருமையின் பாக்கி நாலு வருஷம் சொச்சத்தையும் எருமையா இருந்து தீர்க்கணும். இல்லாட்டி   இந்த எருமைக் கத்தல்  ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு பரம்பரையா வரும்னு சொன்னார். நான் செஞ்ச பாவம் உங்களுக்குத் தொடரக் கூடாதேன்னு நானும் அந்த எருமைக் காவல் தண்டனைக்கு ஒத்துக்கிட்டேன். அந்த குருஜியும் என்னைக் கூடு விட்டுக் கூடு பாய வைச்சார். நான் டெல்லி எருமையாயிட்டேன்.”

“என்ன தாத்தா இது? பருப்புத் தேங்கா கூடு மாதிரி ஏதோ சொல்றீங்க? ராம நாராயண் படம் பார்க்கற  மாதிரி இருக்கு!”

“குறுக்கே பேசாதேடா ! நான் கூடு விட்டு கூடு பாஞ்சதும் குருஜி என் பாடியை வாரணாசியிலே ஒரு கோல்ட் ஸ்டோரேஜில வைச்சிருக்கார். மாசாமாசம் அந்த எருமை செத்த திதி அன்னிக்கு மட்டும் தான் எனக்கு கொஞ்சம் சுய நினைவு வரும். இன்னிக்கு அந்த நாள். இத்தனை நாள் நான் டெல்லியில இருந்தேன். போன மாசந்தான் தமிழ்நாடு எருமை வள போர்டு ஆயிரம் எருமைகளை டெல்லியிலிருந்து வாங்கியது. யார் கிட்டேயும் சொல்லாதே! அதிலேயும் பயங்கர ஊழல் இருக்கு! அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.இந்த வீட்டுக் காரன் பேங்க் லோன் போட்டு என்னை வாங்கினான். இன்னைக்குக் காலையில ஜன்னலாண்ட உன் மூஞ்சியைப் பார்த்ததும் எனக்கு உன் ஞாபகம் வந்தது. இன்னிக்கு அந்த திதி.  சீவாச்சு! உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லேடா!”

“ஸாரி தாத்தா உங்களை நிக்க வைச்சே பேசிக்கிட்டிருக்கேன்! உள்ளே வாங்களேன்! உட்காருங்கோ!”

“எப்படிடா உள்ளே வர்றது? வந்தாலும் அந்த நொண்டி நாற்காலிலே எப்படிடா உட்கார்ரது? நீ பேசாம ஜன்னலாண்ட உக்காந்துக்கோ! எனக்கு நாலு காலும் வலிக்குது! நான் படுத்துகிட்டே பேசறேன்!”

“தாத்தா உங்களுக்கு இது கஷ்டமாயில்லையா?”

“ரொம்ப மோசம்டா இந்த மாட்டுக் கொட்டகை! கொசு நிறைய இருக்கு டெல்லி ரொம்ப சூப்பரா இருக்கும். அங்கே பிரைம் மினிஸ்டர் மாட்டுப் பண்ணையில் இருந்தேன். தவலை தவலையா கோதுமை தின்னுட்டு இங்கே மற்ற சொங்கி மாடுகளோடு போஸ்டர் தின்ன ரொம்ப வெக்கமாயிருக்குடா!”

“ஏன்  தாத்தா! பால் கறக்கறச்சே உங்களுக்கு வலிக்குமா?”

“டெல்லியில  ஒரு சிங் வந்து கறப்பான் பாரு வலியே தெரியாது. இங்கேயும் இருக்கானே ஒருத்தன்! இதமா  கறக்கத் தெரியலை! கொஞ்சம் வலிக்கறது.”

“என்ன தாத்தா எதுக்கெடுத்தாலும் டெல்லி டெல்லி! அந்த ஊர் ரொம்ப உசத்தியா போயிடுச்சோ?”

“ஆமாண்டா! டெல்லி டெல்லி தான்! காலங்காத்தாலே அந்த சிங் சத்தம் போட்டு எழுத்துக் கூட்டி டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பர் எல்லாம் படிப்பான். நியூஸ் எல்லாம் காதிலே விழும். ஊர் நல்லா இருந்தாலும் ஊழல் ஜாஸ்திடா! எனக்குப் போடற தவிடு புண்ணாக்கில கூட ஊழல் பண்ணினாங்கன்னு தெரிஞ்சப்பறம் பால் கொடுக்கிறதைக் கொஞ்சம் கொஞ்சமாக் கொறைச்சிட்டேன்! அப்பறம் மோடி ஜெயிச்ச அன்னிக்கு சொன்னா நம்ப மாட்டே! மூணு மணி நேரம் கன்டினுவசா பால் கொடுத்தேன். லிம்கா ரெக்கார்ட்ஸ்ல கூட என்ட்ரி ஆயிருக்கு!”

“தாத்தா நீங்க எப்போ காங்கிரஸ்லேர்ந்து பிஜேபிக்கு மாறினேள்?”    

“எல்லாம் நம்ம குருஜி யோசனை தான். அவர் ஆர் எஸ் எஸ் பக்தராம். அதனாலே தான் என்னை வாரணாசியிலிருந்து டெல்லிக்குப் போய் பிரதமர் மாட்டுப் பண்ணையில் இருக்க வைத்தார். நான் நிறைய சமாசாரம் ஒட்டுக்கேட்டு அவருக்கு சொல்வேன்! 2 ஜியிலிருந்து நிலக்கரி வரை எல்லா ஊழல் சமாச்சாரமும் எனக்குத் தெரியும். இப்பவும் குருஜி தான் எனக்கு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்கு என்னை டிரான்ஸ்பர் செஞ்சிருக்கிறார். அது சரி! இன்னிக்கு என்ன தேதிடா?”

“நவம்பர் நாலு தாத்தா!”

 "என்னது நவம்பர் நாலா! சீவாச்சு! “ – தாத்தா அலறினார். படுத்துக் கொண்டிருந்தவர் நாலு கால்லே எழுந்து நின்றார்.

image

 ”என்ன ஆச்சு தாத்தா?“

 ”எனக்கு விடுதலைடா! விடுதலை! நாலு வருஷம் ஒன்பது மாசம் பதினாலு நாள் இன்னிக்கோட முடியுதுடா! என் எருமைக் காவல்  தண்டனை இன்னிக்கு ராத்திரி பன்னிரண்டோட முடியுதுடா! “ தாத்தா  ஆடிப் பாட ஆரம்பித்துவிட்டார்.

 ”விடுதலைன்னா எப்படி தாத்தா! எனக்கு ஒண்ணும் புரியலையே!“

 ”நேரமாச்சு சீவாச்சு! இன்னிக்கு ராத்திரி 12 மணிக்கு நான் செத்துப் போவேன்! அப்பறம்  காசிக்குப் போகணும்.“

"எப்படி?”

“செத்தப்பறம் காத்து மாதிரி தானேடா! கொஞ்சம் தம் பிடிச்சா காத்தாலே ஆறு மணிக்கெல்லாம் காசி போயிடலாம். புயல் வார்னிங் ஒண்ணும் இல்லியே? குருஜி நம்ம பாடியை கங்கைக் கரையில எடுத்து பத்திரமா வைச்சிருப்பார். நம்ம உடம்பு தானான்னு செக் பண்ணிட்டு உள்ளே புகுந்திட வேண்டியது தான். அப்பறம் என்ன? ஷேவ் பண்ணிட்டு கங்கா ஸ்நானம் பண்ணிட்டு ..ஐயையோ கடிகாரம் பன்னிரெண்டு அடிக்குதே!”

“அது அஞ்சு நிமிஷம் பாஸ்ட் தாத்தா! நீங்க சீக்கிரம் சொல்லுங்க!" 

 ”அப்பறம் என்னடா ! பழைய படி உன் தாத்தாவா வெளியே வந்து ஷேத்ராடானம் போயிட்டு டிசம்பர் 6 அன்னிக்கு அயோத்யா போயிட்டு டெல்லி வந்து முடிஞ்சா மோடியைப் பாத்துட்டு கரிப் ரத் டிரைனைப் புடிச்சு டிசம்பர் 10ந்தேதி சென்னைக்கு வருவேன். சரி. நீ ஜன்னலைச் சாத்திட்டுப் படுத்துக்கோ! நான் சாகறச்சே நீ பாக்கக் கூடாது. ஆசை தீர நாலு தடவை  கத்திடறேன்! ம்மேய்ய்! ம்மேய்ய்! ம்மேய்ய்! ம்மேய்ய்!“

image

டிசம்பர் 10தித் தேதி சென்னைக்குப் போய் சென்ட்ரலில் கரிப் ரத் டிரைனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நான் கண்டது கனவாயிருக்குமோ என்ற டவுட் வேற!

டிரையினிலிருந்து  தாத்தா மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.  அவர் கிட்டே போய் ‘தாத்தா!’ என்றேன்!

"அடேய்! சீவாச்சுவா? நீ எப்படிடா இங்கே வந்தே?”

“என்ன தாத்தா! நீங்க தானே போன வாரம் சொன்னீங்க!" 

"என்னடா உளர்ரே! நாலே  முக்கால் வருஷத்துக்கப்பறம் இப்போ தான் உன்னைப் பாக்கிறேன். டெல்லியில் ஒரு சர்தார்ஜியோட மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். உங்களையெல்லாம் பாக்கிற ஆசையில இப்ப தான் வர்றேன்! ஒண்ணு தெரியுமோ? இப்போல்லாம் நான் அந்த எருமை மாதிரி கத்துவது கிடையாது தெரியுமா? உங்கப்பன் எப்படிடா இருக்கான்? உங்கம்மா திருந்திட்டாளாடா? ரேவுக்குட்டி எத்தனாங் கிளாஸ் படிக்கிறா?”

இவர் நிச்சயமா என் தாத்தா தான். அப்படியானால் அவர்.. அது… நான் கண்டது கனவாய் தானிருக்கும். எருமைக் காவல் தண்டனையாவது வெங்காயமாவது! அப்படியானால் தாத்தா இன்னிக்கு கரிப் ரத்திலே வர்ற சேதி எனக்கு எப்படித்தெரியும்? ஏதோ இடிக்குதே!

“தாத்தா! வாங்க உடுமலைப்பேட்டை பஸ்ஸைப்    பிடிக்கலாம்! " 

நடந்தோம்!