சில படைப்புகள் – கிருபானந்தன்

  

image

ஒரு சிறுகதை, நாவல், (சில சமயம்) கவிதை படித்தால் ஒரு அபிப்பிராயம் தோன்றுவது சகஜம். சில சமயங்களில் அவற்றை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலும் மேலும் எதைப் படிக்கலாம் என்ற ஐடியாவும் கிடைக்கும்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் திரு குமரி அனந்தன் எழுதிய நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் சின்ன அண்ணாமலை அவர்கள் பேசும்போது பேசுவது ஒருகலை என்றால் பேச்சைக் கேட்பதும் ஒரு கலை, சமையல் ஒரு கலை என்றால் சாப்பிடுவதும் ஒரு கலை என்றார். அதுபோல எழுதுவது ஒரு கலை என்றால் விமர்சனமும் ஒரு கலை தானே?.

கருத்து சொல்லும்போதைவிட எழுதும்போது மிகக் கவனமாய் இருக்கவேண்டி உள்ளது. பல விமர்சகர்கள் “வேஸ்ட்” “தண்டம்” என்றெல்லாம் எழுதுவது படைத்தவரை மட்டுமல்லாமல்  அதை ரசிப்பவரையும் மதிப்பிடுவது என்றாகிறது.  ஒரு பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஒரு நேர்காணலில் ஒரு கதை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது சரி, ஆனால் நன்றாக இல்லை என்று சொல்லவேண்டாமே என்றார்..

ஒரு பேராசிரிய நண்பர்  “தரமில்லாப் படைப்புகளை பாராட்டுவது அந்த எழுத்தாளர் வளர விடாமல் தடுக்கிறது” என்று சொல்லுவார். விமர்சகர்கள் சிலரை குட்டிக் கெடுக்கிறார்கள் அல்லது சிலரை  நக்கிக் கெடுக்கிறார்கள் என்று மலையாளத்தில் ஒரு பேச்சு உண்டாம்

ஒருமுறை எழுத்தாளரின் முன்னிலையில் நடந்த விமர்சன நிகழ்ச்சியில்  விமர்சனங்கள் சற்று கடுமையாகவே இருந்தன. அந்த எழுத்தாளரும் சற்று கடுமையாகவே மறுமொழி அளித்தார்.

நண்பர்  ஒருவர்  அச்சமயம். படைப்பு வெளியான பிறகு அது பொதுவில் வந்துவிடுகிறது. சாதகமாகவோ பாதகமாகவோ விமர்சிக்கப்பட்டால் எழுத்தாளர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கோபித்துக்கொள்வது ஏன்? மற்றவர்கள் விமர்சிக்கக்கூடாது என்று எதிர்பார்த்தால் நீங்கள் இனி உங்கள் டைரியிலேயே எதுவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என்று ஒரு போடுபோட்டார்.

படைப்பு பற்றிய அபிப்ராயங்களைச் சொல்லாமல் ‘பிரிண்ட் நல்லாயிருக்கு. பெரிய எழுத்தில் போட்டிருப்பது படிக்க ரொம்ப சௌஹரியம்’ என்று நழுவுவதையும் பார்த்திருக்கிறோம். சிலர் “கோட்பாடு”, “உத்தி”, “உலக இலக்கியத்தரம்”, “கட்டமைப்பு” என்றெல்லாம் வேறு அலைவரிசையில் எழுதுவார்கள். அதெல்லாம் எனக்கு “bouncer”

எந்த ஒரு படைப்பாளியும் தனது படைப்புகள் பேசப்பட வேண்டும் என விரும்புவது இயற்கை. அதுபோல் விமர்சகரும் தனது விமர்சனங்கள் பலரைப் போய்ச்சேர வேண்டும்  என விரும்புகிறார். விமர்சனங்களும் விமர்சிக்கப்படுகின்றன.

 சில வலைப்பூக்களில்  வந்த விமர்சன  மறுமொழிகளுக்கு விமர்சகர் காட்டமாக பதில் அளித்திருந்தார். ஒரு விமர்சகர் தனது விமர்சனம் விமர்சிக்கப்படுவதை விரும்பாதது ஒரு தமாஷ்தான்.

image

இதன் பின்னணியில் ஒரு விமர்சனத் தொடர் …

முதலில் ந.பிச்சமூர்த்தி. – அடுத்த இதழில்  பார்ப்போம்!