மாமுனிவர் பிருகுமகளாம் திருமகளே போற்றி
கமலத்தை யுறைவிடமாய்க் கொண்டவளே போற்றி
எம்பெருமான் திருமாலின் ஈரமிகு நெஞ்சினிலே
கொலுவிருக்கும் கோதையே குலமகளே போற்றி
தாமோதரன் மனையாளே அருகிருந்து காப்பவளே
அன்பின் திருவுருவே குணவதியே போற்றி
தேமதுர இன்னிசையின் நாதத்தின் வடிவினளாய்
திகட்டாத இனிமையைத் தருபவளே போற்றி
இருள்நீக்கு மொளிவடிவா யிருப்பவளே போற்றி
செல்வங்க ளனைத்திற்கும் தலைவியே போற்றி
தரணிவாழ் மாந்தர்கள் வானுறை தேவர்கள்
பரணிபாடி கொண்டாடும் நாயகியே போற்றி
அருள்சொரியும் எழில்கொஞ்சும் கமலக்கண் பார்வையினால்
உலகினையே காக்கின்ற தேவிநின் தாள் போற்றி
சார்ங்கமெனும் வில்லினையே ஆயுதமா யேந்தி நிற்கும்
திருமாலின் துணையாளே திருமகளே போற்றி
செந்தாமரை மலர்களது மிருதுவான இதழ்கள் போல்
மெலிதான எழிலான கண்களையு முடையவளே
சிந்தையெலா முனைநினைத்து ஆழ்மனதில் பொங்கிவரும்
அன்பையும் பக்தியையும் கரைத்தே யுருவாக்கி
அந்தியிலும் காலையிலும் அனுதினமும் துதிப்போர்க்கு
செல்வங்கள் பதவிகள் ஆனந்தம் வந்தெய்தும்
சிந்தியாது செய்துவிட்ட பாவங்கள் மறைந்துவிட
பூஜித்த பலன்களவை பக்தரெமைக் காக்கட்டும்