மீனங்காடி

image

மாற்றத்திற்கு முதல்படி தைரியம் 

      அடுத்த இரண்டு நாளைக்கும் மேரிக்கு ஆபீஸில் சரியான வேலையாக இருந்தது. அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால் அவள் எண்ணம் முழுவதும் ‘ டோனி ‘ சொன்ன ‘ எண்ணத்திலேயே ‘ இருந்தது.  அவனோட பேசும்போது  மீனங்காடியின் தத்துவம் சரி என்று தோன்றினாலும் இடை இடையே நிறைய சந்தேகமும் வந்து கொண்டிருந்தன. ‘ சந்தேகம் வரும்போது அதைப் பற்றி நிறைய தகவலைத் தேடிக் கண்டுபிடி ‘ என்று அவள் பள்ளிக்கூட ஆசிரியர் சொன்னது ஞாபகம் வந்தது. வெள்ளிக் கிழமை பாஸ் பிரசாத்துடன் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்தாள். போனை எடுத்தாள். 

 “ பிரசாத் ! நம்ம சேர்மன் சொன்னபடி மக்களை உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்க என்ன செய்யலாம்”  உங்கள் யோசனையைச் சொல்லுங்களேன் “ – நிதானமாகத் தான் கேட்டாள் மேரி !

 “ என்னது ! உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்கிறதா? அதெல்லாம் புதுக் கம்பெனிகளுக்குத்  தான். அது இதுன்னு உன் நேரத்தை ஏன் வீணடிக்கிறே” “

மேரிக்கு ஆத்திரம் வருவது போல் இருந்தது. மெல்ல பல்லைக் கடித்துக் கொண்டாள்.

 “ இதோ பாருங்கள் பிரசாத் ! இந்த வேலையை நான் எடுத்துக் கொண்ட போதே நம்ம ரெண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். இதில் நாம நிறைய செய்ய வேண்டியிருக்கும் என்று. இப்போ அது ரொம்பத் தீவிரமா போய்க் கொண்டிருக்கு ! நீங்க என் பாஸ் ! என்னை விட உங்களுக்குத்தான் இதை சரி செய்யற பொறுப்பு, அக்கறை இருக்கணும்.  நீங்க எனக்கு உதவப் போகிறீர்களா? இல்லை முட்டுக் கட்டை போடப் போகிறீர்களா? “

 மேரிக்குத்  தன்னையே நம்ப முடியவில்லை. ‘ நாமா இப்படித் தைரியமாகப் பேசினோம் ‘  என்று. பேசின பிறகு ரொம்ப நன்றாகவே இருந்தது.

 பிரசாத் அனுபவசாலி. பனங்காட்டு நரி. இந்த மாதிரி யாராவது எதிர்த்துப் பேசினால் அவருக்குக் கோபம் வராது. சந்தோஷமாக இருக்கும். ‘ சரி! சரி ! மேரி ! கவலைப்படாதே ! சேர்மன் அந்த கருத்தரங்கில் கலந்துக்கிட்டபோது எடுத்த டேப் எங்கிட்டே இருக்கு. எனக்கு அதைக் கேட்க நேரமில்லை. நீ அதைக் கேட்டுட்டு அதோட முக்கிய கருத்து என்ன என்று எனக்குச் சொல்லு !”

 “ சரி சார் ! நான் வந்து வாங்கிக்கறேன் .”

image

                       நெஞ்சம் நிறைந்த பயணம்

காரில் போய்க் கொண்டிருந்தாள் மேரி.  சரியான டிராபிக்.  ‘ பம்பர் டு பம்பர் ‘ இருந்தது. ஆனாலும் அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.  தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள். ‘ எப்போ எனக்கு என்மேல நம்பிக்கை போச்சு?  ரெண்டு வருஷம் இருக்குமா? அது எப்படி திரும்ப வந்தது?  இந்த ரெண்டு வருஷத்திலே மேலதிகாரிகிட்டே இவ்வளவு அழுத்தம் திருத்தமா பேசினது இது தான் முதல் தடவை. அவளுக்கு அவளையே பிடித்திருந்தது. மனதின் அடித்தளத்தில் சந்தோஷமும் எட்டிப் பார்த்தது.  ‘ சரி ! சரி ! ரொம்ப கொண்டாடாதே ! பாஸ் கொடுத்த டேப்பைக் கேளு ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

காரின் ஸ்டீரியோ ஸ்பீக்கரில் கேசட்டின் சப்தம் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.  ஆரம்பமே ஒரு நம்பிக்கையை ஊட்டுற பாட்டு ! தனக்காகவே எழுதியது போலவே இருந்தது.

image

பா. விஜய்யின் ‘ ஆட்டோகிராப் ‘ பாட்டு ! என்ன சுகமான அன்பான ஆணித்தரமான பாட்டு.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே !  
வாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே !        
ஒவ்வொரு  விடியலுமே சொல்கிறதே !
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே !

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் !
லட்சியம் நிச்சயம்  வெல்லும் ஒரு நாளில்

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி  விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது.
என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும்                                                                                                             மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினமும் கண்டால்
ஒரு நாளில் நிஜமாகும்.

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே !

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் !
வானம் அளவு யோசிப்போம் !
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம் !

லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை  உறுதியோடு போராடு !

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீ எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா ! தூக்கம் என்ன என் தோழா ?
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அன்றே வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

மேரியின் நெஞ்சம் விம்மியது.  எனக்காகவே எழுதிய பாட்டா இது?’ மாணவன் தவிக்கும்போது ஆசிரியர் தானே தேடி வருவார் ‘ என்ற பொன்மொழி எவ்வளவு உண்மை ! ஒவ்வொரு வார்த்தையுமே நம்பிக்கை இழந்த எனக்காகவே எவ்வளவு அழகாக ஆணித்தரமாக இருக்கிறது.  நான் எப்படி இப்படிப் போனேன்? ஜானின் திடீர் மறைவு – இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு – இவையா என்னை – என் நம்பிக்கையை பயமுறுத்துகின்றன? தோற்று விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் தானே என்மீது படர்ந்து இருக்கிறது !

image

இந்த வேலையை விட்டு புது வேலை தேடலாம்.  ஆனால் அது ஆபத்தானது. வேலை கிடைக்கத் தாமதமாகலாம். இருக்கிற வேலையும் போகலாம் ! சரி ! வேலையை விடாமல் இதையே தொடர்ந்து செய்து வந்தால் என்ன ஆகும்?  அப்போதும் வேலை போகலாம். அதுக்காக உயிரே இல்லாத ஒரு வேலையில் மரக்கட்டை மாதிரி கிடப்பதற்கு அவள் தயாராக இல்லை.  மீறி மீறிப் போனால் என்ன நடக்கும்? வருங்காலம் எப்படி இருக்கும் என்று ஊகிக்கவே முடியவில்லை. ‘

இப்படியே ஏனோ தானோ என்று வாழும் வாழ்க்கை என்ன வாழ்க்கை? என் குழந்தைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டாமா?  தீர்மானித்து விட்டாள். திங்கட்கிழமை புது முயற்சி ஆரம்பிக்கப் போகிறேன். முதல் வேலை என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போகிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்.  என்ன நடந்தாலும் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்.

 ‘ எனக்குத் திறமை இருக்கிறது ! நிறைய இடங்களில் அதை நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். எதையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும்.  மனதிலே தோன்றுகிற பயத்தை வேரோடு பிடுங்கி எறியணும். வாழ்க்கையை ஓட்டறதுக்காக இல்லை. அது சிறப்பா அமையணும் என்பதற்காக இதைச் செய்யணும். சோதனையில் வெற்றி பெறணும் என்பதிற்காக அல்ல.  வாழ்வில் வெற்றி பெறணும் என்பதற்காக இதைச் செய்ய வேண்டும்.  என்மீது எனக்கு நம்பிக்கை  வளர இதுதான் சரியான வழி !

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

குழந்தைகள் காப்பகத்தில் காரை நிறுத்தியதும் கீழே இறங்காமல் தனது நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக் காரிலேயே எழுதத் தொடங்கினாள்.!

 ‘ விலை மதிப்புள்ள வாழ்க்கையை
  விழித்திருக்கும் பாதி நாட்களை
  குப்பைத் தொட்டியில் போடுவதா?’

இப்படித்தானே என் கீழே வேலை செய்யும் அனைவரும் எண்ணுவார்கள். இந்த மூன்றாம் மாடிக்கென்று ஒரு தனி கலாசாரம் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிறது.!
அதை நான் உடைக்கப் போகிறேன் ! என்ன துன்பம் வந்தாலும் சரி !

சமீபத்திய நிகழ்வுகள் என் நம்பிக்கையைக் குலைத்திருக்கலாம் !

நன்மையில் முடியும் என்ற எண்ணத்தோடு நம்பிக்கையைப் புதுப்பிக்கப் போகிறேன் !

ஒன்றும் செய்யாமல் அழிவதை விட திருப்தியாகச் செய்து அழிவு வந்தால் அது அழிவே இல்லை !  

‘போருக்குத் தயார்!  கத்தியைத் தீட்டி விட்டேன் ‘ காரின் கதவைத் திறந்து புது உற்சாகத்தோடு குழந்தைகளை அழைத்துச் செல்லக் காப்பகத்தில் நுழைந்தாள்.

image

:” ஏம்மா ! உன் கண் கலங்கியிருக்கு ! அழுதியா? “
 ‘ ஜோ ‘ கிட்டே எதையும் மறைக்க முடியாது. “ ஆமாண்டா கண்ணா ! அழுதேன் அது ஆனந்தக் கண்ணீர்.”
“ அப்படீன்னா?”
“ அது இருக்கட்டும் ! நீங்க எப்படி இருந்தீங்க ?”
 “ அம்மா ! அம்மா ! நான் நம்ம குடும்பப் படம் வரைஞ்சேன். மிஸ் கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க ! காட்டட்டுமா?”
“ காட்டேன் “
நாலு பேரை வரைந்திருக்கிறாள்.  கடவுளே ! என் நம்பிக்கைக்கு இப்படி சோதனையா? பெருமூச்சு விட்டாள்.
“ வா ! ஜோ ! ஜேனையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகலாம்!

(தொடரும்)