வலி

image

தலையினை வலிப்போர்க்குத் தயவுடனே மருந்து கேட்டால்
மலையினின் பாறாங்கல்லைத் தலையிலே உருட்டி விட்டால்
 தலைவலி  பறந்து போகும் வாயினால் ஆவி போகும்

வயிற்றினை வலிப்போர்க்கு  வலியுடன் மருந்து கேட்டால்
கயிற்றினால் கட்டிவிட்டுக் கத்தியால் குத்திவிட்டால்
வயிற்று வலி பறந்து போகும் வாயினால் ஆவி போகும்.

கண்ணினை வலிப்போர்க்குக் கனிவுடனே மருந்து கேட்டால்
கள்ளிப்  பாலும் எருக்கம் பாலும் கலந்து ஒரு சொட்டு விட்டால்
உள்ளதும் நொள்ளையாகி ஒரு முழம் தள்ளிப் போமே 

காதிலே வலிப்போர்க்குக் கருத்துடனே மருந்து கேட்டால் 
காதினை விரித்து வைத்து ஊசியால் குத்திவிட்டால்
காதுவலி பறந்து போகும் செவிகள்  டமாரமாகும்  

காலினை வலிப்போர்க்குக் கடுப்புடனே மருந்து கேட்டால்
இரும்பினைப் பழுக்கக் காய்ச்சிக் காலினில் இழுத்து விட்டால் 
கால்வலி பறந்து போகும் வாயினால் ஆவி போகும்

முதுகினை வலிப்போர்க்கு முனகலுடன் மருந்து கேட்டால்
குப்புறப் படுக்க வைத்து சவுக்கினால் விளாறிவிட்டால் 
முதுகுவலி பறந்து போகும்  முதுகெலும்பு முறிந்து போகும் 

நெஞ்சினை வலிப்போர்க்கு நெகிழ்வுடன் மருந்து கேட்டால்
பஞ்சினைக் கட்டிவிட்டு நெருப்பையும் இட்டுவிட்டால்
நெஞ்சுவலி பறந்து போகும் நெஞ்சமே வெந்து போகும்