24/25
ஞாயிறு மதியம்
ஞாயிற்றுக் கிழமை மதியம். மேரி எப்பொழுதும் தனக்குத் தானே ஒதுக்கிக் கொண்ட நேரம்.
குழந்தைகள் இருவருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஒருத்தியைப் போட்டு விட்டு இரண்டு மணி நேரம் தனக்காக அந்த நேரத்தைச் செலவழிப்பாள். அடுத்தடுத்து வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்கவும் , அமுக்கமான வாழ்க்கையைப் புதுப்பிக்கவும், ஓய்வெடுக்கவும் அந்த இரண்டு மணி நேரத்தைப் பயன் படுத்துவாள். நல்ல கதைகள் படிப்பது, பைக் ஓட்டுவது, காப்பி குடித்துக் கொண்டே ஓய்வெடுப்பது போன்றவை அவளது அந்த நேர வேலைகள். கோவாவைச் சுற்றி எக்கச்சக்கமான காப்பிக் கடைகள். அடுத்த தெருவில் இருக்கும் காப்பிக் கடையில் கடைசி டேபிளில் காபி குடித்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு.
இன்றும் அதே இடத்தில் காபி ஆர்டர் செய்து விட்டு சாரா எழுதிய ‘ எளிமையான நிறைவு ‘ என்ற புத்தகத்தைப் படித்தாள். அதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அறிவுரை இருக்கும். அன்றைய தேதிக்கான கருத்தைப் படித்தாள்.
“ நீ ஒரு நாடக மேடையில் நடிக்கும் நடிகன் ! இந்த உண்மை பலருக்குத் தவறாகக் கூடத் தோன்றும்.! ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு பாவத்தை வெளிப்படுத்துகிறாய் ! அதை நீ ஒருவன் மட்டும் தான் செய்ய முடியும். நீ உலகில் பிறந்ததே ஒரு தனி அடையாளச் சின்னம் ஏற்படுத்தத்தான், அதுதான் உன் தனித் தன்மை. அதுக்கு மரியாதை கொடு. உன் திறமைக்கு உருவம் கொடு. நம்பிக்கைக் காலெடுத்து நட ! உன் செயல்கள் அனைத்தும் உன்னைப் போலவே உண்மை என்று உணருவாய் ! நீ மகிழ்ச்சியோடு கூறும் நன்றி என்ற சொல்தான் உன் வாழ்வின் அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்வாய்.! அவள் வேலையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள்.! நம்பிக்கை, முயற்சி இரண்டையும் நினைக்கும்போது தன்னை அறியாமல் மீனங்காடி ஞாபகம் வந்தது. நிச்சயமாய் அந்த மீனங்காடி பசங்கள் அனைவரும் கலைஞர்கள் தான். அதனால் தான் அவர்கள் ஒவ்வொரு நாளையும் உருவாக்குகிறார்கள். அப்போதுதான் அவளுக்கும் புதிதாக உதித்தது. ‘ தானும் கூட கலைஞன் ‘ என்ற எண்ணம் . அவள் பையில் ‘ தலைவனாகும் தகுதி ‘ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் இருந்தது. அதில் அவளது அபிமான எழுத்தாளர் ஜான் கார்டினரின். கட்டுரை இருந்தது. அதைப் படிக்க வேண்டி புத்தகத்தைப் புரட்டினாள் !
ஜான் கார்டினரின் கருத்துக்கள் !.
விதையாய் இருக்கும் மனிதன் பிஞ்சாய், காயாய், கனியாய் மாற வேண்டும். அதுதான் நியதி.
சிலர் மட்டும் ஏன் முளைக்காத விதையாய் இருக்கிறார்கள் ! அவர்கள் கற்றுக் கொள்வதை மறந்து விட்டவர்கள். வளர்வதை நிறுத்திக் கொண்டவர்கள்.
மேரி நினைத்தாள். தன் ஆபீஸில் நிறைய பேருக்கு அது பொருந்தும். ஏன் நேற்றைய மேரிக்கும் அது பொருந்தும். ‘ நேற்றைய மேரி ‘ என்ற நினைப்பை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
அப்படி அவர்கள் இருப்பதன் காரணத்தை ஆராய வேண்டும். ஒரு வேளை வாழ்வில் அவர்கள் பெற்ற துயரங்கள், காயங்கள் அவர்கள் நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் தகர்த்திருக்க வேண்டும். இல்லை என்றால் ‘ஏன் ஓடுகிறோம்’ என்பதை மறந்து ஒடுபவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களைக் குறை கூறவில்லை. வாழ்க்கை கடினம். அதைத் தொடர்ந்து நடத்த தைரியம் தேவை ! அது இல்லாததால் அவர்கள் நடைப் பிணங்களாக – இயந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். பிரெஞ்ச் எழுத்தாளர் கூறியது போல ‘ அவர்களது கடிகாரம் ஒரு கால கட்டத்தில் ஓடுவதை நிறுத்தி விட்டது ‘. நின்ற கடிகாரத்தை ஓடவைக்க முடியும்.
உன்னைப் பற்றி உனக்கே தெரியாத ஒரு உண்மை எனக்குத் தெரியும், அதுதான் உன் சக்தியின் அளவு. நீ செய்து காட்டியதை விட பல மடங்கு சக்தி உன்னிடம் இருக்கிறது,
கார்டினர் என்றால் கார்டினர்தான். என்ன அழுத்தமான கொள்கை ! எங்கள் ஆபீஸில் நிறைய கடிகாரங்களுக்கு சாவி கொடுக்க வேண்டும். என்னையும் சேர்த்து என்று மேரி எண்ணிக் கொண்டாள்.
அடுத்த ஒரு மணி நேரம் மேரி அவளது நோட்டுப் புத்தகத்தில் நிறைய எழுதினாள். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. வீட்டுக்குப் புறப்படு முன் எழுதிய குறிப்புக்களை ஒரு முறை படித்தாள். அதுதான் அடுத்த நாளுக்கு – அதாவது திங்கட் கிழமைக்கு வழி காட்டியாகப் போகிறது!
என் தொழிலில் எனக்கு இப்போதைய தேவை ‘ நான் தலைவி ‘ என்ற எண்ணம் ! தோல்வி வரலாம். துவண்டு விடக் கூடாது. கத்தி எடுக்கப் போகிறேன். காயம் எனக்கே படலாம். ஆனால் சும்மா இருந்தால் தோல்வி நிச்சயம். துவக்கப் போகிறேன். என் முதல்படி – என்னுடைய எண்ணப் போக்கை மாற்றிக் கொள்வது. தன்னம்பிக்கை, உண்மை, தைரியம் இவை தான் என் ஆயுதங்கள். நின்று கொண்டிருக்கும் கடிகாரங்களை ஓட விடப் போகிறேன். கார்டினர் சொன்னது போல கற்பதையும், வளர்வதையும் குறிக்கோளாகக் கொண்டு மீனங்காடியில் பார்த்துப் புரிந்து கொண்டதை வைத்து எங்கள் ஆபீஸில் அந்த குப்பை மேட்டை கோபுரமாக மாற்றப் போகிறேன் ! இது உறுதி . ‘
திங்கட் கிழமை காலை
காலையில் அஞ்சரை மணிக்கே குழந்தைகளை எழுப்ப வேண்டியதாயிற்று. வேறு வழி இல்லை. குழந்தைகளை சீக்கிரம் காப்பகத்தில் விட்டு வேலையை உடனே ஆரம்பிக்க வேண்டும். “ சாரி ! குட்டீஸ் ! இனிமே இந்த மாதிரி விடியற்காலையில உங்களை எழுப்ப மாட்டேன். இன்னிக்கு அம்மாவுக்கு ஆபீஸில் முக்கியமான வேலை இருக்குமா ! ப்ளீஸ் !. தூக்கம் கலையாத குழந்தைகள் “ பரவால்லேம்மா “ என்றார்கள். ஜோ, சீக்கிரம் போனால் சீக்கிரம் வீடியோ கேம் ஆடலாம் என்று சொல்லிக் கொண்டான்.
குழந்தைகள் தலையில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, அவர்களைக் காப்பகத்தில் விட்டு விட்டு ஆறு மணிக்கெல்லாம் ஆபீஸ் சென்றாள். சூடான காபி எடுத்துக் கொண்டு தனது இருக்கைக்குப் போனாள். பேப்பரை எடுத்துப் பெரிய எழுத்தில் எழுதினாள்.
உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்
படிகள்
ஒன்று – ஒரு மீட்டிங் கூப்பிட்டு மனம் விட்டுப் பேச வேண்டும்.
இரண்டு – எல்லோருக்கும் புரிகிற மாதிரி ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘என்ற செய்தி தயார் செய்ய வேண்டும்.
மூன்று – எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும்.
நான்கு – நம்பிக்கையோடு உறுதியாகவும் இருக்க வேண்டும்.
அடுத்தது – மிகவும் கடினமான செயல். ‘ அவர்களிடம் எப்படிப் பேசப் போகிறேன் ?’ மனதில் தோன்றிய கருத்துக்களைப் பேப்பரில் எழுதினாள்.!
திங்கட் கிழமைகளில் மக்கள் இரண்டு ‘ஷிப்டில் ‘ வருவார்கள். முதல் குரூப் அவளுடன் மீட்டிங்கில் இருக்கும் போது அடுத்த குரூப் வேலையைப் பார்ப்பார்கள். அப்புறம் அடுத்த குரூப்போடு மீட்டிங்.
முதல் குரூப் வந்து சேர்ந்தது. மீட்டிங் துவங்கியது. வழக்கமாக அவர்கள் ‘ இது சரியில்லை அது சரியில்லை ‘என்ற குற்றம் குறைகளுடனே ஆரம்பிப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள். அனைவரும் நல்லவர்களாகவே தோன்றியது. அவள் நெஞ்சு ‘ பட பட ‘ என்று அடித்துக் கொள்வது அவளுக்கே கேட்டது. எல்லோரும் மேரியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஆரம்பித்தது……
மேரியின் விளக்கம்
“ இன்று மிக மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் ஆலோசனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது சேர்மேன் ஒரு கருத்தரங்கிற்குப் போய் விட்டு வந்த பிறகு நமது கம்பெனி இன்னும் சக்தி வாய்ந்த, சுறு சுறுப்பான, துடிப்பான கம்பெனியாக மாற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். எந்தக் கம்பெனியின் வெற்றிக்கும் அவை தான் திறவு கோல்கள். ! அவர் நமது கம்பெனி மேலதிகாரிகளிடம் நமது செயல்பாடுகளைப் பற்றி விவாதித்தாராம். அந்த விவாதத்தில் நமது டிபார்ட்மெண்டைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா ? ‘ குப்பைத் தொட்டி ‘ ஆமாம் ‘ குப்பைத் தொட்டி தான் ‘ என்று மிகவும் வருத்தத்தோடு கூறிக் குறைப் பட்டுக் கொண்டாராம். நாம் வேலை செய்கிற – நமக்குச் சொந்தமான டிபார்ட்மெண்டைப் பற்றி கூறப்பட்ட வார்த்தை ‘ குப்பைத் தொட்டி ‘ ! அதை சரி படுத்துவது, மாற்றுவது தான் நமது முக்கியமான் கடமை ! வேலை ! இல்லையா ?”
மக்கள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. மேரி ஒவ்வொருவராக அனைவரையும்உற்றுப் பார்த்தாள். ஆனந்த் எழுந்து நின்றான் – ரொம்பவும் சீனியர் அவன். “ இந்த வேலையை வேறு யாரையாவது செய்யச் சொல்லுங்கள் ! அப்போ புரியும் இது எவ்வளவு வெறுப்பான, போரான வேலை என்று. சுறு சுறுப்பு இருந்தா என்ன இல்லாட்டா என்ன ? வேலை எப்படியும் நடக்குதில்லே? வேலை செய்யாமல் சும்மாவா உட்கார்ந்திருக்கோம் ?”
குப்பைத் தொட்டி என்று சேர்மனே சொன்னாரே என்று யாரும் கவலைப் பட்டது மாதிரி தெரியவில்லை. மற்றவர்கள் சொல்லிக் கேட்டுக் கேட்டுப் பழகி விட்டது போலும்.
மேரி தொடர்ந்தாள்.
“ இது இத்தோட முடியற சமாசாரம் இல்லை ! சேர்மன் அவருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் இதை மறந்திடலாம். பிரசாத் கூட விட்டு விடலாம். ஆனால் நான் இதை இப்படியே விட்டு விடத் தயாரா இல்லை. இந்த ‘ குப்பைத் தொட்டி ‘ என்ற வார்த்தையை, நமது டிபர்ட்மெண்டைப் பற்றி சொன்ன விதத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். நம்மிடம் பேசப் – பழகத் தயங்குகிறார்கள் ! அவர்களைக் குறை கூறுவானேன் ? நம்மில் யாருக்கு இங்கே வேலை செய்யப் பிடிக்கிறது ? நாமும் இதைக் ‘ குப்பைத் தொட்டி ‘ என்று தானே நினைக்கிறோம்.! இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நான் இன்றைக்கு உறுதி எடுத்துக்கிட்டேன் ! ஏன் தெரியுமா ?”
ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஆச்சரியத்துடன் மேரியைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யாரும் பேசவில்லை, முணுமுணுக்கவில்லை. பயங்கரமான அமைதி நிலவியது.
“ உங்க எல்லாருக்கும் என் சோகக் கதை தெரியும். நானும் ஜானும் இரண்டு குழந்தைகளுடன் எப்படி கனவுகளுடனும் ஆசைகளுடனும் இந்த ஊருக்கு வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஜானின் திடீர் மறைவு என்னை தனியாளாக மாற்றி விட்டது. ஜானின் இன்சூரன்ஸ் பணம் அவரது ஆஸ்பத்திரி செலவிற்குப் பத்தலை. அதனால் நான் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறேன்.
இதற்கும் ஆபீசுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இது என்னை எப்படிப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். உங்களில் சில பேர் என்னை மாதிரி தனித்து இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறீர்கள். அவர்களுக்குப் புரியும் நான் சொல்வதன் அர்த்தம். புரியும்படி சொல்கிறேன் ! எனக்கு இந்த வேலை மிக மிக அவசியம் !சமீப காலங்களில் என் திறமை குறைந்து விட்டது போல ஒரு உணர்வு. அலை போகிற வேகத்தில் நானும் போனேன். வேலை போய் விடக் கூடாதே என்ற பயத்தில். இப்போது அந்த வேலைக்கே உலை வைபப்து போல் ஆகி விட்டது நான் சென்று கொண்டிருக்கும் பாதை ! இன்றிலிருந்து இதெல்லாம் பழங் கதையாகப் போகிறது.!
இன்று தான் இதன் கடைசி எல்லை.! எனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பது பற்றிச் சொன்னேன். ஆனால் அதற்காக என் வாழ்க்கையை, வருங்காலத்தை ஒரு ‘ குப்பைத் தொட்டியில் ‘ கழிக்க விரும்பவில்லை. குடும்பத்தைப் பற்றி, குழந்தைகளைப் பற்றிய பயம் இந்த நிமிடத்திலிருந்து என்னை விட்டுப் போய் விட்டது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க ஏன் அவற்றைக் கண்டு பயந்து ஓட வேண்டும்? நாம் ஆபீஸில் அதிக நேரம் செலவழிக்கிறோம். அதை ஏன் வீனடித்துக் கொள் வேண்டும் ? நாம் இருக்கிற இடத்தை – வேலை செய்யற இடத்தை – சந்தோஷமான இடமாக மாற்ற வேண்டும் – மாற்றப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன் !
ஒரு நல்ல சேதி ! நான் ஒரு அலுவலக ஆலோசரை சந்தித்தேன். இந்த வேகம், விவேகம், சுறு சுறுப்பு, ஜாலி, சக்தி இவை எல்லாவற்றிலும் திறமையானவர். உலகப் புகழ் பெற்ற அலுவலகத்தில் இருக்கிறார். நீங்கள் எல்லோரும் விரைவில் அவரைச் சந்திக்கப் போகிறீர்கள் ! அவர் சொன்ன முதல் அறிவுரை என்ன தெரியுமா ?
“ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் “
மேரி இன்னும் விளக்கமாக எப்படி இந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி சொன்னாள். விளக்கமாகவே சொன்னாள். கடைசியில் ‘ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் ‘ என்று அவர்களின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
சுரேஷ் கையைத் தூக்கினான்! மேரி தலை அசைத்ததும் பேசத் தொடங்கினான். “ ஒரு கேள்வி ! நாம் பைக் ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு மடையன் திடீரென்று குறுக்கே ஓடினால் அவனை இறங்கி நாலு அறையாவது அறையாமல் போக முடியுமா ! இந்த இடத்தில் நான் எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது ? “
“ சுரேஷ் ! நான் ஒரு பதில் கேள்வி கேட்கிறேன் ! ரௌடிகள் இருக்கிற குப்பத்துப் பக்கம் போகும்போது இப்படி நடந்தா உன்னால தைரியமா இறங்கி அடிக்க முடியுமா !”
“ ஐயய்யோ ! அவங்க நம்மை சட்னி ஆக்கிடுவார்கள் .”
‘ அங்கே வித்தியாசம் தெரியுதல்ல ! அங்கே வேற மாதிரி நடந்துக்கிறோம். அது மாதிரி தான் பய உணர்ச்சி இருந்தால் எல்லா இடத்திலும் ஒரேமாதிரி எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
“ ஓகே ! மேடம் ! நான் ஒப்புக்கிறேன் !”
“ சுரேஷ் ! இதை விட சரியான கேள்வியைக் கேட்க முடியாது ! இன்னொரு சமாசாரம் . மத்தவங்க பைக் ஓட்டுவதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நாம் எப்படி நடந்துக்கணும் என்பதை மாத்திக்க முடியும். புரியலையா ? நம்ம கம்பெனியில் எந்த வேலையை யார் பார்க்கணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியாது. ஆனால் இந்த வேலையை – நம்ம வேலையை – இப்படித் தான் செய்யணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியும் ! புரியுதில்லே ? நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி தீவிரமா யோசியுங்கள் ! பிறகு முடிவெடுப்போம் நமது எதிர்காலம் இதைப் பொறுத்துத் தான் இருக்கப் போகிறது.! குட் லக் !”
அடுத்த ‘ ஷிப்ட் ‘ மீட்டிங்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் நடந்தது. யாரும் எதுவும் கேட்காதபோது சுரேஷ் எழுப்பின அதே கேள்வியை உதாரணமாக வைத்தாள். காலை மணி பத்தரை வரை மீட்டிங் போயிற்று. மிகவும் சோர்வாக இருந்தாலும் மனதளவில் தனது கருத்தைத் தேர்ந்தெடுக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தது குறித்து மிகவும் சந்தோஷப் பட்டாள். !
ஒரு வாரம் ஓடியது. மேரி வழக்கம் போல தினமும் எல்லா இடங்களுக்கும் போனாள். நடுவில் சுரேஷைப் பார்த்தாள்.
“ மேடம் ! அன்னிக்கு மீட்டிங்கில் என்னைக் கிழிச்சிட்டீங்க !”
“ சாரி ! சுரேஷ் ! நான் சொன்னது தப்பாப் பட்டுதா?”
“ மேடம் ! நீங்க எனக்குப் பெரிய உதவி செஞ்சீங்க ! என்னுடைய சொந்த வாழ்க்கை சமீபத்தில் கன்னா பின்னான்னு போயிக்கிட்டிருக்கு. நீங்க எனக்கு ஞாபகப் படுத்தினீங்க ! என் முடிவுகளை நான் தான் எடுக்க வேணும்னு ! அதை எடுக்க எனக்கு தைரியம் தான் வேண்டியிருக்கு ! “
“ தைரியமா ? புரியலையே !”
“ என் வாழ்க்கை திசை மாறி ஓடிக்கிட்டிருக்கு. நான் அதை சரி செய்ய ஏதாவது செய்யணும். எல்லோரும் என்னைப் பழி வாங்கறாங்க என்று நினைச்சு எந்த பிரயோசனமும்இல்லை. பிரச்சனையை சந்திக்கணும். அதை விட்டு ஓடிப் போறதில எந்த பலனும் இல்லே என்பதை அன்றைக்கு புரிஞ்சிக்கிட்டேன். பொதுவா சொல்றேனேன்னு நினைக்காதீங்க ! இது என் சொந்த – பர்சனல் வாழ்க்கை.”
எல்லாம் சரியாப் போயிடும் சுரேஷ் ! நம்பிக்கை இருந்தாப் போதும். என்னை நம்பி இதைச் சொன்னதற்கு ரொம்ப நன்றி சுரேஷ் .”
“ மேடம் ! நாங்கள் எல்லோரும் உங்களை நம்பறோம் ! நீங்களே பாருங்கள் ! எங்கள் வேலை எல்லாம் எவ்வளவு போராயிருக்கு ! அதனால் தான் ஏகப்பட்ட குற்றச் சாட்டுக்கள் ! எங்க கூட எல்லோரும் மோத வருவது போல ஒரு உணர்ச்சி ! இதை மாத்த எந்த முயற்சி வேணும்னாலும் எடுங்க ! அதைச் செய்யற முதல் ஆளாய் நான் இருப்பேன் “.
ஆச்சரியமாக இருந்தது மேரிக்கு ! இப்படி எல்லாம் பாராட்டு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மக்கள் எல்லோருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாலும் ‘ நாம வேலை செய்யற இடத்திலே சந்தோஷம் இருக்கணும்’ என்ற கருத்து எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. ஆனால் வெளிப்படையா எதுவும் நடக்கலை!
அடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது.! மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள்.! அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் !