ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)

11/25

image

கதைகளில் தான் சொல்ல விழைவது என்ன என்பதை “ இதனால் அறியப்படும் நீதி யாதெனில்” என்று கதையை முடிக்கின்ற காலகட்டத்தில்  தெரிந்துகொண்ட நீதி என்ன என்று நாமே முடிவு செய்துகொள்ளும் வகையில் கதைகள் எழுதப்பட்டன. அதன் முன்னோடிகளில் ஒருவராக பிச்சமூர்த்தியை எடுத்துக்கொள்ளலாம்.

1933 ல் எழுதத் தொடங்கிய அவர் 50, 60 களில் மிகவும் கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். நிகழ்வுகள் அக்கால வாழ்க்கைமுறையை ஒட்டியே இருந்தாலும் கருத்து இன்றளவும் பொருத்தமாக உள்ளதுதான் சிறப்பு என்று தோன்றுகிறது.

உதாரணமாக அவரது  “ஞானப்பால்” சிறுகதை

ஒரு  சத்திரத்தை நிர்வாகம் செய்யும்,. கிடைத்த அதிகாரத்தை தன் சுய நலனுக்காகப் பயன்படுத்தும், தவசிப்பிள்ளை.கதாசிரியரின் வார்த்தைகளில் – “சத்திரத்துக்குத் தவசிப்பிள்ளைதான் சர்வாதிகாரி. ஆகையால் சட்டமும் இல்லை, நெறிகளும் இல்லை. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்ப்பார்களா? அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஆளுக்குத் தவசிப்பிள்ளை ஒருநாள் சீட்டைக் கிழித்துவிட்டான். ஆனால் பாவம்! தவசிப்பிள்ளை பேரில் மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. அதிருஷ்டம் வந்து பிடரியில் குந்திக்கொண்டு கட்டளையிட்டால் நிறைவேற்ற வேண்டியதுதானே!”.

 image

பெயரென்று ஒன்று இல்லாவிட்டாலும் , கழுத்தில் லிங்கம் ஒன்றை கட்டியிருப்பதால் ‘லிங்கக்கட்டி’ என்று அறியப்படுகிற .சத்திரத்தில் வந்து சேருகிற ஒரு பண்டாரம்

கதாசிரியரின் வார்த்தைகளில் – ”பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது? சோறு கண்டால் சொர்க்கம். ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இது தான் போக்கிடம். அதை இதைச் செஞ்சிக்கிட்டுக் கிடந்துடுவேன்”

ஆஹா, ஒரு ஆள் சம்பளம் மிச்சம். ஒரு கவளம் சோறுதான் செலவு என தவசிப்பிள்ளை தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொள்கிறார். தானுண்டு, பாத்திரம் பண்டம் தேய்த்து சத்திரத்தைக்கூட்டி செய்யும் வேலையுண்டு, கிடைக்கும் ஓரிரு கவளம் சோறு உண்டு என்று இருந்துவிடுகிறார்.

தவிர  வருகின்ற மக்கள் மூலமாகவும்   வேறெங்கேனும் கலந்துகொள்ளும்  பூஜைமூலமாகவும்   லிங்கக்கட்டிக்கு  காசு கிடைக்கத் தொடங்குகிறது.

நாளடைவில் லிங்கக்கட்டிக்கு  போடுகின்ற கவளத்திலும் கைவைக்கிற தவிசிப்பிள்ளைக்கு லிங்கக்கட்டியிடம் சேரும் காசு மேலும் ஒரு கண். வந்த காசில் கழுத்திலிருக்கும் லிங்கத்திற்கு ஒரு தங்கச்சங்கிலி போடலாமே என யோசனை சொல்கிறார். அந்த ஏற்பாட்டில் தானும் கொஞ்சம் காசு பார்க்கலாம் என திட்டம். ஆனால் லிங்கக்கட்டியோ வேறு ஏற்பாடு செய்து சங்கிலி செய்துகொள்கிறார்.      

ஞானப்பால் உற்சவத்திற்காக சீர்காழி செல்லும் லிங்கக்கட்டியிடமிருந்து சங்கிலியும் லிங்கமும் திருடப்படுகிறது.

சத்திரத்திற்கு திரும்பி வந்து ‘லிங்கத்துக்குப் போய் மட்டி மாதிரி தங்கச் சங்கிலி செஞ்சேனே? பைத்தியக்காரத்தனம்!’ என்று தவசிப்பிள்ளையிடம் சொல்கிறார்.

தவசிப்பிள்ளை ‘ஞானப்பால் கிடைச்சுப்போச்சு’ என்று கிண்டல் செய்கிறார்.

வேலைக்கு சம்பளம் கொடுத்து  வேறு ஆள் வைத்துக்கொள்ளுமாறு லிங்கக்கட்டி சொல்ல “அடப்பாவி! நெசமாகவே ஞானப்பால் கிடைச்சிட்டுதா?” என்கிறார் தவசிப்பிள்ளை.

நிலைகளனுக்கு நம்மை அறிமுகப்படுத்தும் லாவகம் …. கதைமாந்தர்களின் எண்ண ஓட்டத்தை    உணரவைக்கும் சொல்லாடல்களும் உரையாடல்களும், சிக்கலில்லாத கதை சொல்லும் நேர்த்தி … ஆகியவை  பளிச்சிடுகின்றன..

நிகழ்ச்சி அந்த காலத்தது என்றாலும் மனித இயல்பு இந்தக்காலத்திற்கும் பொருந்துகிறது  என்பதுதான் வியப்பு.

இந்தக் கதையினை  பிச்சமூர்த்தி அவர்களின் நடையிலேயே படிக்க விரும்பினால் கீழே குறிப்பிட்டுள்ள வலைப் பதிவில் காணவும். 

 http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_25.html

இதே வியப்பு “வேப்பமரம்” கதையிலும்  தெரியவருகிறது.

அந்தக் கதையை முழுவதுமாய் அடுத்த பக்கத்தில் காணலாம்!