லாஸ்ட் ஸன்டே (சிவமால்)

7/25

‘பூமா.. இன்னிக்கு ஈவினிங் முரளியும் அவன் வைஃப் சாந்தாவும் நம்ம வீட்டுக்கு வராங்களாம்  .. நேத்திக்கு போன் பண்ணியிருந்தான்’ என்றான் சுந்தர்.

‘ஆமாமாம்.. அவங்க தான் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வராங்க.. நாம அங்கே போறதேயில்லெ…….. நமக்கும் ஒரு மரியாதை வேண்டாமா’ …..?

‘என்ன செய்யறது? .. அவன் வீடு ரொம்ப தூரத்திலில்லே இருக்கு..’

‘அவங்க மட்டும் இங்கே வரதில்லையாக்கும் ’

‘அவங்க டவுனுக்கு வராங்க ..அப்படியே நம்ம வீட்டுக்கும்  வராங்க.. நாம் போறதானா அவங்க வீட்டுக்குன்னு தான் போகணும். நம்ம டைமே ஒத்து வரதில்லே…அவன் அப்படி தப்பா நினைச்சுக்கப்படாதுன்னு தானே ‘அப்போ வந்திருந்தேன்.. இப்போ வந்திருந்தேன்.. நீ இருக்கவில்லை’ ன்னு சொல்றேன்..’

‘ஆமாமா.. இப்படி எத்தனை நாள் தான் பொய் சொல்லப் போறீங்களோ? ’

‘நோ..நோ..இது பொய்யல்ல .. மற்றவங்களைப் பாதிக்கும் வகையில் நாம் சொல்லும் பொய்  தான் பொய். மற்றவைக்கு புளுகு என்று பெயர் என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கார் தெரியுமா? ‘ 

‘பொய்யோ.. புளுகோ . அவங்க தினமும் .ஈவினிங் வெளியிலே போயிடறாங்கன்னு இப்படிச் சொல்லிட்டிருக்கீங்க! அவங்களும் பாவம் நம்பிட்டிருக்காங்க. என்னிக்காவது மாட்டிக்கத் தான் போறீங்க’

‘டோன்ட் வொர்ரி .. மாட்டிக்க மாட்டேன்.’ என்றான் சுந்தர். 

image

சுந்தரும் முரளியும் காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பூமாவும் சாந்தாவும் ஹாலை ஒட்டிய அறையிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

‘முரளி.. லாஸ்ட் ஸன்டே ஈவினிங் நாங்க உங்க வீட்டுக்கு வந்திருந்தோம். நீங்க இருக்கலே..  பக்கத்து வீட்டம்மா  நீங்க எங்கேயோ வெளியிலே போயிருப்பதாகச் சொன்னாங்க’ என்றான் சுந்தர். 

‘ஹெள ஸாட்.!. எப்போ லாஸ்ட்  ஸன்டேயா ..டெலிபோன் பண்ணிட்டு வர மாட்டியோ’ என்றான் முரளி.

‘சடனா டிசைட் பண்ணினோம்..புறப்பட்டோம்.இட் ஈஸ் ஆல் ரைட். இப்பத்தான் பாத்தாச்சே’

‘அதையேன் கேட்கறே!   நானும் ரொம்ப பிஸி.. பதினாலாம் தேதி எங்க அப்பா வரேன்னு எழுதியிருந்தார். அவருக்காகக் காத்துக் காத்து வீ ட்டிலே வெய்ட் பண்ணி ஹோல் டே போரடிச்சுப் போச்சு. அப்புறம் அவர் யூஷ்வல் பஸ் கிடைக்காம ஏதேதோ பஸ் பிடித்து  ராத்திரி வந்து சேர்ந்தார்.  அப்புறம்  அவரோட எல்லா இடத்திற்கும் சுற்றினதில் அலைச்சல் வேறு.  நேற்றுத்தான் ஊருக்குப் போனார். அதனால் தான் இன்னிக்கு வரேன்னு  நேற்று  போன்  பண்ணினேன் “ என்றான் முரளி. 

‘அச்சா.’. என்றான் சுந்தர்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து  விட்டு முரளியும் சாந்தாவும் புறப்பட்டார்கள். அவர்களை  வழியனுப்பிவிட்டு சுந்தரும் பூமாவும் உள்ளே வந்தார்கள்.

விளக்கை அணைக்க முன்னறைக்குப் போன பூமா ‘ஐயோ’ என்று அலறினாள்.

‘என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?’ என்று பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினான் சுந்தர். 

பூமா தன் விரலால் அங்கே மாட்டியிருந்த காலண்டரில் 14 ஆம் தேதியைக் காட்டினாள்.

image

அன்று  ஸன்டே .. சுந்தர் முரளி வீட்டுக்குப் போயிருந்ததாகக் கூறினானே.. அந்த லாஸ்ட்  ஸன்டே.. .