4/25
போற்றி போற்றி பாடல் சொல்வது நூற்றெட்டு
ஏற்றி ஏற்றி எரியும் தீபம் நூற்றெட்டு
ஏற்றம் தந்திடும் காயத்ரி மந்திரமும் நூற்றெட்டு
ஊற்று நீரென இனிப்பது நூற்றெட்டுச் சிவாலயமே
விண்ணின் கதிரவன் சாய்கிரணம் கலசம்விழ
பொன்னின் கும்பமும் மின்னலிட்டு ஒளிகூட்ட
மண்ணில் உறையும் உயிரனைத்தும் பொன்னாக
மின்னும் கோபுரமே நூற்றெட்டுச் சிவாலயமே
முன்னவர் ராமலிங்க சுவாமி முன்னின்று
மூன்று வரிசையில் நூற்றாறு லிங்கமுடன்
அனுமன் பிடித்த மாலிங்கம் தான்சேர்த்து
அணியாய் அமைந்தது நூற்றெட்டுச் சிவாலயமே
ராவணன் கொன்றபாவம் தீர்த்தாய் கடலருகே
கரதூஷன் கொன்றபாவம் தீர்த்தாய் இத்தலத்தில்
கணக்குகள் இல்லாமல் பாவம் புரிந்தஎன்னை
பிணக்காமல் காத்திடுவாய் நூற்றெட்டுச் சிவாலயமே
குடத்தை மண்ணாற்றில் வைத்தபெண் கண்கலங்க
விடத்தை கண்டத்தில் கொண்டஉன்னை நினைந்துருக
மடந்தை துயர்தீர குடமுருட்டி நீர்தந்தீர்
குடந்தை அருகிலுள்ள நூற்றெட்டுச் சிவாலயமே
கணபதி தொடங்கி மூலவர் தாள்பணிந்து
மனதினில் சிவமுடன் பிரகாரம் வலம்வந்து
அனுமந்த லிங்கமும் அம்மனையும் சுற்றிவந்தால்
ஒமென்று உணர்த்திடும் நூற்றெட்டுச் சிவாலயமே
சங்கரர் துணையே பர்வத வர்த்தினி
குங்கும வாசனை பொருந்திய திருவடி
எங்கும் நிறைந்த பங்கய மேனியாள்
தங்கிடும் திருத்தலம் நூற்றெட்டுச் சிவாலயமே
பாவங்கள் செய்யா மனிதன் ஈண்டில்லை
பாவங்கள் செய்தபின் பரிகாரம் தான் தந்து
பாவங்கள் எந்நாளும் புரியாமல் காத்திடும்
பாவநாசம் உறை நூற்றெட்டுச் சிவாலயமே
மலைபோன்ற என்னைப் பொடிப்பொடி ஆக்கினும்
சிலைபோன்ற என்னை சிதைத்து வதைக்கினும்
அலைபோன்று என்னை அலக்க அழிக்கினும்
தலைவணங்க மறக்கிலேன் நூற்றெட்டுச் சிவாலயமே
சந்தங்கள் சேர்த்து ஓதுவார்கள் பண்ணிசைக்க
சிந்தனைக் குவித்து சிவாச்சாரியார் வேதமோத
சுந்தரன் எழுதிய ஈரைந்தும் படித்தவர்க்கு
சொந்தமாய் ஆகிடுமே நூற்றெட்டுச் சிவாலயமே
கும்பகோணத்திலிருந்து தஞ்சை சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ளது.
தலப்பெயர்கள்:
கீழைராமேச்சுவரம், 108 சிவலிங்கங்கள் இருப்பதால் நூற்றெட்டு சிவலிங்கக் கோயில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
தலவிருட்சம் :வில்வம்
மூர்த்திகள்:
இறைவன்:இராமலிங்கேசுவர்இறைவி:பர்வத வர்த்தினி, மலைவளர் காதலி அம்மன்..
தீர்த்தங்கள் :
குடமுருட்டி, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, அக்னி தீர்த்தம்.
இராமலிங்கர் உடனுறை பர்வத வர்த்தினி அம்பாள் ஆலயம் ராமபிரான் காலத்துக் கோவிலாகும். ராமபிரான், சீதை, லட்சுமணன், அனுமனுடன், இராமேஸ்வரம் சென்று காவிரிக்கரையான பாபநாசத்திற்கு வருகிறார்கள். அழகிய தென்னஞ்சோலையும், நீர்வளமும் நிறைந்த பகுதியான பாபநாசத்திற்கு வரும்போது அவர்களை ஏதோ ஓர் நிழல் தொடர்வதாக உணர்ந்தார்கள். இது இராமபிரான் வதம் செய்த பாவம்தான் ராமர். சீதையையும் தொடர்கிறது என உணர்ந்து பாவத்தைப் போக்கி கொள்ள கழுவாய் தேடினார்கள். தங்களுடைய பாவத்தை 108 சிவலிங்கம் எழுந்தருளச் செய்வதன் மூலம் போக்கிக் கொள்ள நினைத்து காவிரியிலிருந்து மணல் கொண்டு வந்து 107 லிங்கங்களை கையால் பிடித்தார்கள்.
ஒரே இடத்தில் கோவிலில் 108 சிவலிங்கங்களை வழிபடுவதன் மூலம் 108 சிவன் கோவில்களை வழிப்பட்ட பேறு கிடைக்கும். 108 சிவலிங்கம் உள்ளதால் பாபநாசம் சிவனின் புண்ணிய பூமியாய் திகழ்கிறது. இராமபிரானின் பாபம் நாசமானதால் இந்த ஊருக்கு பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனை பாபநாசத்தில் 108 சிவாலயத்தை வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு நினைத்தது நடக்கும்.
இக்கோயிலுக்கு பெருமை அளிக்கும் 108 சிவலிங்கங்களில் 106 சிவலிங்கங்கள் உள்ள ஒரு நீண்ட மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபத்தில் மூன்று வரிசைகளில் ஓர் வரிசைக்கு முப்பத்தி ஐந்து இலிங்கங்களாகவும், மூன்றாம் வரிசையில் முப்பத்தி ஆறும் ஆக 106 இலிங்கங்கள் உள்ளன. கருவறையில் உள்ள மூல லிங்கம் ஒன்றும், அனுமந்தலிங்கம் ஒன்றும் சேர்த்து இக்கோயில் 108 சிவ இலிங்கக் கோயிலாக விளங்குகிறது.