பார்க்காதே……காட்டாதே

8/25

image

                  பார்க்காதே         பார்க்காதே !
                  காட்டாதே         காட்டாதே !

எந்தப்  பெண்ணின் நெஞ்சையும் தப்புக் கண்ணால் பார்க்காதே
சொந்தப் பெண்ணே ஆனாலும் சில்லும விஷமம்  பண்ணாதே
மாடி வீட்டு  பொண்ணு கிட்டே மோடி மஸ்தான்  காட்டாதே
கோடி வீட்டு பொண்ணு  கிட்டே பாடிலாங்க்வேஜ்  பேசாதே !

கல்லுப் பிள்ளை  போல  நீயும்  கட்டுக்குள்ளே      இருக்கணும்
வெல்லப்பிள்ளை ஆனாலும்  எறும்பு கடிச்சா  பொறுக்கணும்
நல்லபிள்ளை  போல  நீயும்   வாலைச் சுருட்டி   இருக்கணும்
செல்லப் பிள்ளை போல நீயும்  கையைச் சூப்பிக் கிடக்கணும் !

புல்லைப்பாத்த மாட்டைப் போல  என்னை நீயும் மேயாதே
துள்ளிக்குதிக்கும் குட்டி போல  முட்ட முட்ட   வாராதே
அள்ளித்தின்ன முதலை போல  வாயை நீயும்  பிளக்காதே
கள்ளிப்பாலை   குடிக்க  நீயும்  சப்புக் கொட்டி  நிற்காதே !!

பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)

10/25

image

தாமரை மலரின்மேல்  உறைபவளே போற்றி ! 
  கமலத்தைக்  கையிலேந்தி அருள்பவளே போற்றி !
கமகமக்கும் பட்டாடை மினுமினுக்கும் பொன்னகைகள்
  தரித்துநல்  தரிசனம் தருபவளே போற்றி !
எம்பெருமான் மாலனவன்  நாயகியே போற்றி !
  குறையாத செல்வங்கள் கொடுப்பவளே போற்றி !
எம்மீது உன் கருணைக் கண்பார்வை படட்டும் !
  நலமாக வாழ்ந்திடவே அருள்மாரி பொழியட்டும் !

மன்பதையை இயக்குகின்ற வைகுண்ட நாயகியே !
  மக்கள்தம் உணர்வுகளை அணுவணுவாய்  உணர்ந்தவளே
அனுதினமும் உன்நாமம் பாடுகின்ற அடியார்க்கு 
  இன்பங்கள் செல்வங்கள் அள்ளியள்ளிக் கொடுப்பவளே
என்மனது நினைவுகளும் சொல்களும் செயல்களும் 
  எப்போதும் எஞ்ஞன்றும் உன் நாமம் போற்றிடவே
என்னையே நன்னெறியில் இயக்கிவிடு என்றுநான் 
  அன்னையே உன்னையே அடிபணிந்து வேண்டுகின்றேன் !

பொன்வேய்ந்த குடங்களிலே புனிதகங்கை நீரூற்றி 
  அபிஷேகம் ஆராதனை உளங்குளிர செய்வித்த
மின்னுகின்ற  மேனியதில் ஆபரணம் அணிசெய்த 
  மிடுக்கோடு நிற்கின்ற திருமகளே போற்றி!
அன்போடு நெறியோடு துதிபாடும் அடியாரை
  அரவணைத்து அருள்புரியும் நாயகியே போற்றி !
பொன்மகளே குலமகளே மாலனவன் தேவியென 
  வைகரையில் நான் தொழும் அன்னையே போற்றி!

ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)

11/25

image

கதைகளில் தான் சொல்ல விழைவது என்ன என்பதை “ இதனால் அறியப்படும் நீதி யாதெனில்” என்று கதையை முடிக்கின்ற காலகட்டத்தில்  தெரிந்துகொண்ட நீதி என்ன என்று நாமே முடிவு செய்துகொள்ளும் வகையில் கதைகள் எழுதப்பட்டன. அதன் முன்னோடிகளில் ஒருவராக பிச்சமூர்த்தியை எடுத்துக்கொள்ளலாம்.

1933 ல் எழுதத் தொடங்கிய அவர் 50, 60 களில் மிகவும் கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். நிகழ்வுகள் அக்கால வாழ்க்கைமுறையை ஒட்டியே இருந்தாலும் கருத்து இன்றளவும் பொருத்தமாக உள்ளதுதான் சிறப்பு என்று தோன்றுகிறது.

உதாரணமாக அவரது  “ஞானப்பால்” சிறுகதை

ஒரு  சத்திரத்தை நிர்வாகம் செய்யும்,. கிடைத்த அதிகாரத்தை தன் சுய நலனுக்காகப் பயன்படுத்தும், தவசிப்பிள்ளை.கதாசிரியரின் வார்த்தைகளில் – “சத்திரத்துக்குத் தவசிப்பிள்ளைதான் சர்வாதிகாரி. ஆகையால் சட்டமும் இல்லை, நெறிகளும் இல்லை. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்ப்பார்களா? அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஆளுக்குத் தவசிப்பிள்ளை ஒருநாள் சீட்டைக் கிழித்துவிட்டான். ஆனால் பாவம்! தவசிப்பிள்ளை பேரில் மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. அதிருஷ்டம் வந்து பிடரியில் குந்திக்கொண்டு கட்டளையிட்டால் நிறைவேற்ற வேண்டியதுதானே!”.

 image

பெயரென்று ஒன்று இல்லாவிட்டாலும் , கழுத்தில் லிங்கம் ஒன்றை கட்டியிருப்பதால் ‘லிங்கக்கட்டி’ என்று அறியப்படுகிற .சத்திரத்தில் வந்து சேருகிற ஒரு பண்டாரம்

கதாசிரியரின் வார்த்தைகளில் – ”பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது? சோறு கண்டால் சொர்க்கம். ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இது தான் போக்கிடம். அதை இதைச் செஞ்சிக்கிட்டுக் கிடந்துடுவேன்”

ஆஹா, ஒரு ஆள் சம்பளம் மிச்சம். ஒரு கவளம் சோறுதான் செலவு என தவசிப்பிள்ளை தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொள்கிறார். தானுண்டு, பாத்திரம் பண்டம் தேய்த்து சத்திரத்தைக்கூட்டி செய்யும் வேலையுண்டு, கிடைக்கும் ஓரிரு கவளம் சோறு உண்டு என்று இருந்துவிடுகிறார்.

தவிர  வருகின்ற மக்கள் மூலமாகவும்   வேறெங்கேனும் கலந்துகொள்ளும்  பூஜைமூலமாகவும்   லிங்கக்கட்டிக்கு  காசு கிடைக்கத் தொடங்குகிறது.

நாளடைவில் லிங்கக்கட்டிக்கு  போடுகின்ற கவளத்திலும் கைவைக்கிற தவிசிப்பிள்ளைக்கு லிங்கக்கட்டியிடம் சேரும் காசு மேலும் ஒரு கண். வந்த காசில் கழுத்திலிருக்கும் லிங்கத்திற்கு ஒரு தங்கச்சங்கிலி போடலாமே என யோசனை சொல்கிறார். அந்த ஏற்பாட்டில் தானும் கொஞ்சம் காசு பார்க்கலாம் என திட்டம். ஆனால் லிங்கக்கட்டியோ வேறு ஏற்பாடு செய்து சங்கிலி செய்துகொள்கிறார்.      

ஞானப்பால் உற்சவத்திற்காக சீர்காழி செல்லும் லிங்கக்கட்டியிடமிருந்து சங்கிலியும் லிங்கமும் திருடப்படுகிறது.

சத்திரத்திற்கு திரும்பி வந்து ‘லிங்கத்துக்குப் போய் மட்டி மாதிரி தங்கச் சங்கிலி செஞ்சேனே? பைத்தியக்காரத்தனம்!’ என்று தவசிப்பிள்ளையிடம் சொல்கிறார்.

தவசிப்பிள்ளை ‘ஞானப்பால் கிடைச்சுப்போச்சு’ என்று கிண்டல் செய்கிறார்.

வேலைக்கு சம்பளம் கொடுத்து  வேறு ஆள் வைத்துக்கொள்ளுமாறு லிங்கக்கட்டி சொல்ல “அடப்பாவி! நெசமாகவே ஞானப்பால் கிடைச்சிட்டுதா?” என்கிறார் தவசிப்பிள்ளை.

நிலைகளனுக்கு நம்மை அறிமுகப்படுத்தும் லாவகம் …. கதைமாந்தர்களின் எண்ண ஓட்டத்தை    உணரவைக்கும் சொல்லாடல்களும் உரையாடல்களும், சிக்கலில்லாத கதை சொல்லும் நேர்த்தி … ஆகியவை  பளிச்சிடுகின்றன..

நிகழ்ச்சி அந்த காலத்தது என்றாலும் மனித இயல்பு இந்தக்காலத்திற்கும் பொருந்துகிறது  என்பதுதான் வியப்பு.

இந்தக் கதையினை  பிச்சமூர்த்தி அவர்களின் நடையிலேயே படிக்க விரும்பினால் கீழே குறிப்பிட்டுள்ள வலைப் பதிவில் காணவும். 

 http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_25.html

இதே வியப்பு “வேப்பமரம்” கதையிலும்  தெரியவருகிறது.

அந்தக் கதையை முழுவதுமாய் அடுத்த பக்கத்தில் காணலாம்! 

ந. பிச்சமூர்த்தியின் ‘வேப்பமரம்’ சிறுகதை ( எஸ்.கே.என் )

12/25

image

நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும், என் கிளைகள் பேயாடும். மழை பெய்யும், வாசனை ஒன்றை விசிறுவேன். சித்திரை பிறக்கும். என் மலர்கள் தேனீக்களை அழைக்கும். நான் வெறும் வேப்பமரமாகத்தான் இருந்தேன்.

ஆனால் இப்போது யோகம் அடிக்கிறது. நான் தெய்வமாகி விட்டேன். எனக்கு வந்திருக்கும் பெருமையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாள் தவறாமல் யாராவது இங்கு வருகிறார்கள். மரக்கடை வியாபாரி ஒருவன் மட்டும் என்னை முறையாக அறுத்தால் 20 பலகையாகும். வியாபாரத்துக்கு  அறுத்தால் 25 ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இப்பொழுது வருபவர்கள் எல்லாம் என் உடம்பைச் சுற்றி மஞ்சள் பூசிக் குங்குமம் இடுகிறார்கள். சாம்பிராணிப் புகை போடுகிறார்கள். அகலில் நெய்விளக்கு வைக்கிறார்கள். வெற்றிலை பாக்குத் தேங்காய் பழம் வைத்துக் கும்பிடுகிறார்கள். வெள்ளிக்கிழமைதான் கூட்டம் தாங்கவில்லை. ஏராளமாக மாவிளக்கைப் படைக்கிறார்கள்.

இந்த யோகம் ஒரு மாதமாக அடிக்கிறது. ஆனால் இந்தப் பங்களாக்காரருக்கு என்னால் தொந்தரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. எப்போதுமே ஒருவிதம் இல்லாவிட்டால் ஒருவிதம் என்னால் தொந்தரவுதான். வேப்பம் பழத்தைத் தின்று காக்கை எச்சமிட்டதோ, சின்னச் செடியாய் முளைத்து நான் ஆளானதோ இப்பொழுது இருக்கிறவருக்குத் தெரியாது. அப்பொழுதெல்லாம் அவர் சின்னப் பையன். தகப்பனார் இருந்தார். பல் குச்சிக்கு வேப்பங்கிளையைத் தெருவில் போகிறவர்கள் ஒடிக்க ஆரம்பித்ததிலிருந்து வம்பு ஆரம்பித்து விட்டது.

image

வேப்பமரம் ஒன்று இருக்கிற விஷயம் நகரசபையார் வெளியிட்ட ஏல நோட்டீசைப் பார்த்த பிறகுதான் இவர் கவனத்துக்கு வந்தது. அதற்குப் பிறகு என் விஷயத்தில் இவருக்குத் திடீரென்று அக்கறை பிறந்தது. வக்கீல் வீட்டுக்குப் போய் நகரசபைக்கு ஆட்சேபணை நோட்டீஸ் ஒன்று கொடுத்தார். அதற்குப் பிறகு நகரசபை ஆணையாளரைப் பார்த்துப் பேசினார். முடிவாக பிளான் சங்கிலி எல்லாம் எடுத்துக் கொண்டு அதிகாரி ஒருவர் வேலியோரம் வந்து அளந்து  பார்த்தார். அவர் என்ன சொன்னாரோ என்னவோ, ஏலப் பேச்சு அதற்கு அப்புறம் அடங்கிப் போய்விட்டது.

ஆறுமாதங்களுக்கு முன்பு மற்றொரு சங்கடம் முளைத்தது. எனக்கு அது சங்கடமாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவரால் அப்படி நினைத்ததால்தானே? முளைப்பதும், இலை விடுவதும், கிளையாவதும், மலர்வதும் நாமாகச் செய்கிற காரியமா? அவை  எல்லாம் தாமாக நடக்கின்றன. விரும்பினால்கூட, நம்மால் தடைப்படுத்த முடியாது. ரோட்டுப் பக்கம் போகாதே என்று ஒரு கிளைக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அது கேட்கவே இல்லை. அந்தக் கிளை பழுக்க ஆரம்பித்ததும் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் கவலைப்பட்டு என்ன பயன்? நாளடைவில் கிளை பட்டுப் போய்விட்டது.

ஒருநாள் யாரோ பிச்சைக்காரன் மரத்தடியில் தகரக் குவளையையும், கழியையும் வைத்துக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தான். நல்ல வெயில் வேளை! பலமான காற்று ஒன்று அடித்தது. மளமளவென்று ஓசையுடன் பட்டுப்போன கிளை திடீரேன்று முறிந்து விழுந்தது. கிளை விழுந்த ஒரு நிமிஷத்துக்குள் அங்கே பெரிய கும்பலும் கூக்குரலும் ஆகிவிட்டன. அந்தக் கலவரத்துள் முதலில் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு தலையில் காயம்பட்ட ஒரு இளைஞனைத் தூக்கி ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு சிலர் சென்றபொழுதுதான் விஷயம் புரிந்தது. கீழே சென்றுகொண்டிருந்த இளைஞன் தலையில் கிளை விழுந்து, ஆபத்தை உண்டாக்கி விட்டது! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததற்கோ, தெருப்புறம் கிளை நீண்டு சென்றதற்கோ நானா  பொறுப்பு? இந்தச் சின்ன விஷயம் அந்தக் கும்பலுக்குத் தெரியவில்லை. அடுத்தாற் போலப் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரனுக்கு ஒன்றும் நேரவில்லையே என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

ஒரே கும்பலாக விழுந்தடித்துக்கொண்டு பங்களாவுக்குள் நுழைந்தார்கள். பங்களாக்கார அம்மா பயந்துபோய் முன் ஹாலுக்கு வந்தாள். ஆளுக்கு ஒருவராக, நெருப்புக் கக்க, தாறுமாறாகப் பேசினார்கள். “மரத்தை வெட்டிவிட்டு மறுகாரியம் பார்க்கிறீர்களா? இல்லை, நாங்க வெட்டி விடட்டுமா?” என்று அதட்டிக் கேட்டபோது அந்த அம்மாளுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. “ஐயா வந்தவுடன் சொல்லிச் செய்யச் சொல்லுகிறேன்” என்றார். அதற்கு ஏற்றாற்போல், பங்களாக்காரர் நுழைந்ததும், கும்பல் அவர்மீது பாய்ந்தது. விஷயத்தை அறிந்துகொண்ட பங்களாக்காரர் இரண்டு நாளுக்குள் வெட்டி விடுவதாக உறுதி கூறியதில் கூட்டம் கலைந்தது. ஒருவன் மட்டும், “இப்பொழுதெல்லாம் வெட்ட வேண்டாம். ஓர் ஆளைக் கொன்ற பிறகு வெட்டலாம்” என்று அவருடைய உறுதிமொழியைக் கிண்டல் செய்துகொண்டே போனான்.

வீட்டுக்காரருக்கு ஒரே கோபம். மனத்துக்குள்ளாக என்மேல் பாய்ந்தார். கும்பல் மேல் பாய்ந்தார். இளைஞன் மேல் பாய்ந்தார். இரண்டு நாள் வரையில் இந்தப் பாய்ச்சலில் ஓயவில்லை.

image

மூன்றாவது நாள் நகரசபையிலிருந்து மரத்தை வெட்டி விடும்படி ஓர் அவசர உத்தரவு வந்தது. உத்தரவு வந்த பிறகு இந்தப் பாய்ச்சல் எங்கோ மறைந்துவிட்டது. ஏலம் போடுகிற முயற்சி தோற்றுவிட்டதால் நகரசபையார் இந்த வேலையில் இறங்கிவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டார். பழையபடி வக்கீல் வீட்டுக்குப் போய், புதிய நோட்டீஸ் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் வக்கீல் மட்டும் இதெல்லாம் பயன்படாதென்று சொல்லியும் இவருக்கு வீம்பு வந்து விட்டது. என்ன ஆனாலும் வெட்டப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்!

நாளைக்கு நடப்பது இன்று யாருக்குத் தெரிகிறது?

அடுத்த நாள் மாலை ஐந்துமணிக்கு பங்களாக்காரர் பங்களா முகப்பில் உட்கார்ந்திருந்தார். திடீரென்று ஒரு பெரிய கும்பல் பங்களாவுக்குள் ஆரவாரத்துடன் நுழைந்தது. உடனே அவருக்கு விஷயம் விளங்காமல் இல்லை. இருந்தாலும் ஊமைப் பையனைப் போல் கண்ணை உருட்டினார்.

“அந்தப் பையன் சாகவில்லை. யாராவது செத்தாலொழிய மரத்தை வெட்டமாட்டீர்களாக்கும்!” என்று பலவாறாகக் கும்பல் இரைந்தது. “கோடாலிக்காரன் வரவில்லை. என்மேல் வஞ்சனை இல்லை” என்று ராஜதந்திரத்தைக் கடைப் பிடித்தார்.

அவர் பேச்சு எடுபடவில்லை. கும்பலின் அட்டகாசமும் கொதிப்பும் ஏறிக்கொண்டிருந்தன. எந்த நிமிஷம் என்ன ஆகுமோ என்று அவருக்குத் திகிலாக இருந்தது. அந்தச் சமயத்தில் அத்தனை பேர் கவனத்தையும் இழுக்கக் கூடிய பெரிய சத்தம் தெருப்புறத்தில் கேட்டது. கும்பல் முழுவதும் பறந்துவிட்டது. பங்களாக்காரரும் பின்தொடர்ந்தார்.

ஒரு பஸ் நடைபாதை மீதேறி என்மீது முட்டிக்கொண்டு நின்றது. வண்டியை விட்டுப் பிரயாணிகள் கலவரத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் இங்கிருந்து போன கும்பல், வீதிக் கும்பல் ஆக எல்லாமாகச சேர்ந்துகொண்டு விட்டன. பத்து நிமிஷம் ஒரே குழப்பம்.

“இந்த மரம் மாத்திரம் இல்லாவிட்டால் என்ன கதியாகியிருக்குமோ!” என்று ஜனங்கள் என்னைப் போற்றத் தொடங்கிவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் விஷயம் விளங்கிற்று.

தெருவில் வந்துகொண்டிருந்த பஸ்ஸின் டயர் வெடித்து விட்டது. பிரேக் பிடிக்கவில்லை. டிரைவர் ஏதோ கணக்குப் பண்ணி ஸ்டீரிங்கை என்னை நோக்கித் திருப்பிவிட்டிருந்தான். என்மீது வண்டி மோதி நின்று விட்டது. நல்ல வேளை ! பஸ் பிரயாணிகள் 24 பேரில் ஒருவருக்கும் சொற்பக் காயங்கூட ஏற்படவில்லை.

image

“மரத்தை வெட்டாததும் நல்லதாகத்தான் போச்சு. இல்லாவிட்டால் இத்தனை பேரும் எமப்பட்டணந்தானே?” என்று கும்பலில் பழைய சமாச்சாரத்தையும் இதையும் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் என்ன, மரந்தானே? பார்த்துக்கொண்டிருந்தேன்.

இது நடந்த பிறகு மரத்தை வெட்ட வேண்டுமென்ற பேச்சை யாருமே எடுக்கவில்லை. ஆனால் பங்களாக்காரருக்கு மட்டும் என்னைப் பற்றிய நினைப்புத்  தடித்துவிட்டது. ஒரு சமயம் என்னை வெட்டிவிடவேண்டுமென்று நினைப்பார். மற்றொரு சமயம் கூடாதென்று நினைப்பார். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் இவ்வளவு குழப்பத்துக்கும் முடிவு ஏற்பட்டதே, அதுதான் அதிசயமாக இருக்கிறது. பஸ் வந்து மோதிய மூன்றாம் நாள் மற்றொரு கிளையில் அடிப்புறத்திலிருந்து பால் விடாமல் வடிய ஆரம்பித்தது. இதை யார் கவனித்தார்களோ, எப்படித்தான் இந்த விஷயம் ஜனங்களிடையே பரவிற்றோ தெரியவில்லை. அன்று முதல்  தெய்வமாகிவிட்டேன்! தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றும் பெருமை எனக்கு உண்டாகிவிட்டது. வெகு பக்தியுடன், வடிகிற பாலைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். பல நோய்கள் குணமாவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். பங்களாக்காரர் இதுவும் ஓர் ஆச்சரியமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரு விஷயம். இன்று உச்சிப்பொழுதுக்குப் பிறகு ஒரு விஞ்ஞானி இங்கு வந்தார். அவருடன் ஒரு மாணவனும் வந்திருந்தான். மரத்தில் பால் வடிந்ததை ஊன்றிப் பார்த்தார்கள்.

image

“உடம்பில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்வதைப் போல மரத்திலும் செடியிலும் ஜீவரசம் ஏறுவது இயற்கை. சிரங்கு வந்தால் சரீரம் பொத்துக் கொண்டு ரத்தம் முதலியன வடிகின்றனவே. அதைப் போலவே மரத்தில் பொத்துக்கொண்டு ஜீவரசம் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்” என்று விஞ்ஞானி மாணவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

விஞ்ஞானி சொன்னது சரியா? ஜனங்கள் சொல்வது சரியா? எனக்குத் தெரியாது. நான் வெறும் வேப்பமரந்தானே?

குறிப்பு:

நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். 

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

இதழே ! இதழே !

13/25

 கல்கி இதழில் 1992ல்  பரிசு பெற்ற கவிதை

image

பனி  சிந்தும்   முகத்தினில்கட்டிக்கரும்பினைத்     தட்டிப் பிழிந்த  இதழ்

அவள் தந்த   சுகத்தினை   அள்ளிக் குடித்து தன்     தாகம்  தீர்த்த   இதழ் – இனி

இன்ப       இணைப்பினை இருவர்   அடைந்திட  முந்திப் பிறந்த  இதழ் – அவன்
கொண்ட    மனைவியின்  கட்டுக்     கவினுடல்   பட்டுத்  துடித்த  இதழ் !              

பொருள் இல்லை     என்றவர்க்கு  இல்லை என்று உரைத்து  மெல்ல  மடிந்த  இதழ் – பணத்

தொல்லை   இல்லையென கொள்ளை    இன்பமது பொங்கி  வழிந்த இதழ் – இனி

வெள்ளை   உள்ளமதில்   உண்மை உள்ளதென    தெள்ளக் காட்டும் இதழ் – அழும்

பிள்ளை     மகிழ்ந்திட தாய் அமிழ்து அருந்திடும் பால் மணம் தோய்ந்த இதழ் !
 
நல் மண்ணதில்  பொன்னைக் கொழித்திடும் உழவன் பெருமிதம் படர்ந்த  இதழ் – அவன்

கண்ணினுள் மணியவள்  காதல்  கிழத்தி பெய்  மழை    பொழியும் இதழ் – நல்

எண்ணமில்  கயவன்     வஞ்சக மனத்தவன் நஞ்சு மொழி பிறக்கும் இதழ் – நல்

வண்ணமே  பேசி  மக்களையே ( ஏ )  மாற்றும் அரசியல் வாதியின்  இதழ் !!

image