12/25
அன்பின் திருவுருவே அலங்கார நாயகியே
தஞ்சமென்று வந்தோரை தாங்கியே நிற்பவளே!
என்னையன் திருமாலின் இதயத்து நாயகியே
உலகமது உருண்டோட உறுதுணையா யிருப்பவளே
மின்னுகின்ற வுன்விழியின் கருணையின் நீரூற்று
பொன்மாரி பொழிந்துவுன் பக்தரையே களிப்பூட்டும்
உன்பாதம் பணிந்தயிவ் வேழைதம் மேனியிலும்
சிலதுளிகள் தெளிக்கட்டும் வாழ்க்கை மலரட்டும் !
தேவியுன் னருளோடு வேய்ந்தவிப் பாடல்கள்
ஒலிக்கின்ற மனைகளிலே மகிழ்ச்சியும் பொங்கட்டும்
ஒவ்வாமை ஏழ்மை நெருங்காம லிருக்கட்டும்
இல்லையென்ற சொல்லே இல்லாம லிருக்கட்டும்
செவ்வனே நடப்பதெலாம் நல்லவையா யிருக்கட்டும்
பிணியென்ற வார்த்தைக்குப் பணியிலாமல் போகட்டும்
அவனியிலே மாந்தரெலாம் ஒற்றுமையா யிருக்கட்டும்
அன்போடு அமைதியும் ஊரெல்லாம் பரவட்டும் !
அன்னையே திருமகளே தேவியே அனுதினமும்
ஒருவேளை யுனைதுதித்தால் பாவங்கள் நீங்கிவிடும்
இருவேளை யுனைதுதித்தால் செல்வங்கள் நிறைந்துவிடும்
மூன்றுவேளை யுனைதுதித்தால் எதிரிகள் விலகிடுவர்
நாள்முழுது முனைதுதித்தால் மகிழ்ச்சியும் பெருகிவிடும்
நற்குணங்கள் நற்செயல்க ளெமைதமை வந்தடையும்
சான்றோரும் புகழ்பாடும் பெரும்பேறு நாடிவரும்
அண்டங்களை இயக்குகின்ற ஆதிலக்ஷ்மியே போற்றி !
உலகையே செழிப்பாக்கும் தான்யலக்ஷ்மியே போற்றி !
கோழையை வீரனாக்கும் வீரலக்ஷ்மியே போற்றி !
வலிமையைத் தந்தருளும் கஜலக்ஷ்மியே போற்றி !
மழலை யின்பம்தரும் சந்தானலக்ஷ்மியே போற்றி !
வெற்றிக் கொடிகட்டும் விஜயலக்ஷ்மியே போற்றி !
பார்புகழ வாழவைக்கும் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி !
செல்வங்கள் பெருக்குகின்ற தனலக்ஷ்மியே போற்றி !
அறம் வாழ ஈரஞ்சு அவதாரம் எடுத்த ஸ்ரீமன்
நாரணன் தேவியாம்மகாலக்ஷ்மி நின்பாதம்
போற்றிபோற்றி போற்றிபோற்றி போற்றிபோற்றி
— சம்பூர்ணம் —