முதல் இரவா?

                                                     8/25

image

நெருப்பைக்        கொட்டி     விட்டுப்     போனவளே !
நெஞ்சைக்         கீறி         விட்டுச்     சென்றவளே !

எங்கோ      பிறந்து      எங்கோ      வளர்ந்து
கண்கள்     கலந்து      கடி மணம்   புரிந்தோம்
இரு மனம்  கூடி        புது மணம்  தேடி
இருவரும்   விரைந்தோம் இரவினை  நாடி !

உன்னை     அழகென்றேன்      அனலில்     மெழுகானாய் !
கன்னிமை   எனதென்றேன்      கண்ணிமை  துடித்திட்டாய் !
கன்னத்தில்  கன்னம்           வைத்தேன்  கள்வனென்றாய் !
கனிந்த      கன்னம்     பழமா       கடித்துத்     தின்னவா !
கன்னத்தின்  ஓரம்        காது        அது இனி   இருக்காது !
கயிற்றைக்  காட்டி       கழுத்தை    ஏன்         வளைக்கிறாய் !
வலிக்கிறது  என்று       சொல்லி     வாய்பொத்த வருகிறாய் !
பொய் சொன்ன இதழுக்கும்   நாவிற்கும்  தண்டனை !           
வாய்ச்      சொற்கள்    நின்ற பின்   நெஞ்சங்கள்  பேசுகிறதே !
நெஞ்சம்     சுடுகிறதே   அது சுரமா       எரியும்      பந்தமா
உரசலில் எழுந்தது  அச்சுரம் பாதியில்  நின்றால்   அபசுரம் !
அணைத்தால் அணையும்  புதுத் தீ     தான்  இதுவோ
கண்ணில்    என்ன       செவ்வரி !   கண்ணே     எரிகிறதா ?

விடியும்     வரை       எரிந்தது     அந்த        விளக்கு
ஆசை       நெய்யிட்டு   வேட்கைத்   திரியிட்டு
காமத்       தீ இட்ட     விளக்கல்லவா     அது !                              
 
கருக்கலில்   எழுந்து      காலை            ஒற்றினாய் !
தீர்க்க       சுமங்கலி    வாழ்த்தொலி       வேண்டினாய் !
கண        நேரத்தில்    கண்கள்           மயங்கினாய் !
மண        மாலையுடன் மடியில்           சரிந்தாய் !

image

இமைகள்    மெல்லத்    துடிக்கின்றன !
இதழ்கள்    சொல்லத்    துடிக்கின்றன !
இதயம்      கொல்லத்    துடிக்கிறது !
ஸ்வாசம்    மெள்ள      நிற்கிறது !

நாடி        வந்தவளின்  நாடி  நின்றது !
பாடி        வந்தவளின்  மூச்சு நின்றது !

முதலும்     முடிவுமான  அந்த இரவினிலே

நெருப்பைக்  கொட்டி     விட்டுப் போனாளே !
நெஞ்சைக்   கீறி         விட்டுச் சென்றாளே !!

image