மீனங்காடி

                                                      22/25

image

அடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது.! மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள்.! அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் !

      image

                       உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்

                இன்றைய மெனு – இன்றைய ஸ்பெஷல்

 

            மேரி மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனாள்.  அவளுக்கு ரொம்ப குஷியாக இருந்தது.  மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த போஸ்டரே சொல்லிற்று.  உடனே டோனிக்கு போன் செய்ய ஓடினாள்.!

      அவளோட முதல் வெற்றி ! மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. இன்னும் நிறைய செய்யணும். “ டோனி ! இதைப் பத்தி உங்கிட்டே நிறையப் பேசணும் ! எப்ப உன்னை சந்திக்கலாம்?”

      “ சனிக்கிழமை சந்திக்கலாமே ! உன் குழந்தைகளையும் கூட்டிட்டு மீனங்காடிக்கு வாயேன் !”

      “ ஓகே !” உற்சாகமாய் இருந்தாள் மேரி .

                        மீனங்காடியில் சனிக்கிழமை

 

      “ மீனங்காடி சனிக்கிழமை ரொம்ப பிஸியாக இருக்கும்.  காலையில் சீக்கிரமா வாயேன் !”

      “ நீ எப்ப வருவே ?”

      “ காலையில அஞ்சு மணிக்கு !”

      “ ஊகும் ! அவ்வளவு விடியற் காலையில் குழந்தைகளைக் கஷ்டப் படுத்த முடியாது.”

      “ சரி ஐந்தரைக்கு வா !” சிரித்துக் கொண்டே சொன்னான் டோனி.

      “ அதெல்லாம் முடியாது. எட்டு மணி?”

      “ சரி வா !”

      குழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் ஸ்கூல் – வீடு என்று ஒரே மாதிரி இருந்ததற்கு புதுசா மீன் மார்க்கெட்டுக்குப் போவது கொஞ்சம் மாறுதலா இருந்தது.

      “ என்ன மீன் இருக்கும்? பெரிய மீன் எல்லாம் இருக்குமா?  சுறா மீன் ? எங்களை மாதிரி பசங்கள் வருவாங்களா விளையாட ? “ கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார்கள் ஜோவும், ஜேனும்.

      மீனங்காடி அப்போதைக்குக் கொஞ்சம் அமைதியாக இருந்தது.  டோனியை நேரடியாகப் பார்த்தாள்.  மீனங்காடி அழகாக  எல்லாம் அதன் அதன் இடத்தில் விவரம் எல்லாம் எழுதி வைத்து – பார்க்கவே நன்றாக இருந்தது, ஒரே ஒரு இடத்தில் மட்டும் மீன் எதுவும் இல்லை.  ஐஸ் கொட்டிக் கிடந்தது.

      “ ஹேய் ! குட் மார்னிங் !” வழக்கம் போல சிரித்துக் கொண்டே வந்தான் டோனி.  “ யார் இந்த குட்டி மீன்கள் ?” குழந்தைகள் ஜோவையும், ஜேனையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

      “ மேரி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் “

      உடனே நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்தாள்.

      “ நோ ! நோ ! உன் வேலையைச் சொல்லலை.  என் வேலையை ஆரம்பிக்கணும்னு சொன்னேன் ! நீங்க மூணு பேரும் அங்கே இருக்கிற மீன்களை எல்லாம்  எடுத்து அழகா அடுக்கி வைக்க உதவுவீங்க என்று நம்புகிறேன் “ என்றான்.

      “ ஓ ! செய்றோமே ! – ஜோ அவன் பின்னால் ஓடினான். மேரி தோளைக் குலுக்கிக் கொண்டாள். ஜேன் அம்மா கையைப் பிடித்துக் கொண்டாள் !

      “ மாஸ்டர் ஜோ ! உன் சைசுக்கு பூட்ஸ் இல்லை.  ஆனா குட்டி ஜாக்கெட் தர்றேன் ! நாம இந்த மீன்களை எல்லாம் ‘ பேக்  பண்ணலாம். “

      டோனி ஜோவைக் கூட்டிக் கொண்டு கடையின் பின் பக்கம் போனான்.  ஜேன் அம்மாவை விட்டுப் போகாமல் ஐஸ்ஸை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.

பத்துப் பதினைந்து நிமிஷம் இரண்டு பேரையும் காணோம் !  மேரியும் கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கட கட என்று மீன் வண்டி வரும் சத்தம் கேட்டது.  ஒரு பெரிய டிராலியில் மலை மாதிரி மீன்களைக் கொட்டிக் கொண்டு ஐஸ் கட்டிகளோட டோனியும், ஜோவும் வந்து கொண்டிருந்தார்கள்.  டோனி தான் தள்ளினான்.  ஜோ அதன் கைப் பிடியில் தொங்கிக் கொண்டே தரையில் பட பட வென்று காலைத் தேய்த்துக் கொண்டே வந்தான் !

                              ஆட்டம் கொண்டாட்டம்

image

      “ அம்மா ! உள்ளே எவ்வளவு மீன் கொட்டிக் கிடக்கு தெரியுமா ! இவ்வளவு ! “ என்று கையை விரித்துக் காட்டினான் ஜோ.  “ நான் தான் எல்லாத்தையும் வண்டியில ஏத்தினேன் ! சரி தானே டோனி அங்கிள் ?”  டோனி சிரித்துக் கொண்டே கேட்டான் ! “இதெல்லாம் பேக் பண்ண எனக்கு உதவி செய்வாயா ஜோ ?”  “ ஓ யெஸ் “ – டோனிக்கு மீன் எடுத்துக் கொடுக்கிறது, ஐஸ் கட்டி கூட வைக்கிறது. ஜோ உயரத்திற்கு ஒரு பெரிய மீன்.  அதை இரண்டு பெரும் தூக்கி அழகா படுக்க வைத்தார்கள். “ சே ! காமிரா கொண்டு வர மறந்திட்டேனே !” என்று மேரி வருத்தப் பட்டாள். டோனி ஜோவை வேலை வாங்கியது மனதுக்கு இதமாக இருந்தது.  ஜோவுக்கு பரம குஷி !

டோனி திடீரென்று “ மீன் என் கையைக்  கடிச்சிடுச்சு “ என்று அலறினான்.  ஜோ ஒரு நிமிஷம் பயந்து பார்ப்பான்.  அப்புறம் விளையாட்டு என்று தெரிந்ததும் ‘ ஆஹா ஓஹோ ‘ என்று சிரிப்பான்!. அன்னிக்கு   ‘ உனக்குப் பிடிச்ச ஹீரோ யார் ? என்றால் ரஜினி, கமல், கிரிக்கெட் தோனி எல்லாரையும் விட்டுட்டு மீனங்காடி டோனி  அங்கிள் தான் என்று சொல்வான்.

ரொம்பவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர் குழந்தைகள்  இருவரும்.!

“ சரி ஜோ ! ஜேன்! இப்போ உங்க அம்மாவுக்கு ஒரு சின்ன ‘கிளாஸ் ‘ எடுப்போம் ! உங்க ஆபீஸில் அடுத்தது என்ன செய்யணும் என்பதை ஜோ உனக்குச் சொல்லுவான்.  “

      “ ஜோ !”

      “ ஆமாம் ! அவனையே கேளு ! உங்க ஆபீஸில் இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன தெரியுமா ! எல்லா குழந்தைகளுக்கும் அது தெரியும்.  நாம தான் வயதான பிறகு அதை மறந்து சீரியசாயிடறோம்.  ஜோ ! நீ சொல்லு ! ஸ்கூல்ல ரீசஸ் பீரியடிலே நீ என்ன செய்வே ?”

 மீன் வண்டியை நகர்த்திக்  கொண்டிருந்த ஜோ தலையைத் திரும்பிப் பார்க்காமலே பதில் சொன்னான் –  "விளையாடுவோம் “.

மேரி நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள். ‘

விளையாட்டு – ஆட்டம் – கொண்டாட்டம் ‘ அதுதான் அவள் மீனங்காடிக்கு வந்த முதல் நாள் நடந்து கொண்டிருந்தது.  நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று டை கட்டி ஆபீஸில் வேலை செய்பவர்கள் எல்லாம் இடைவேளையின் போது குழந்தைகள் போல விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  மீனைத் தூக்கிப் போடுவது, ஒருத்தரை ஒருத்தர்  கிண்டல் செய்வது, சத்தம் போட்டுப் பேசுவது, கோரஸாக எல்லோரும் ‘ போகுது பார் ‘ என்று பாடுவது எல்லாம் அவர்களின் விளையாட்டு தான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அவற்றை எல்லாம் மனக் கண்ணில் கொண்டு வந்த மேரிக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.

  “ தப்பா நினைக்காதே மேரி ! இது உண்மையான வியாபாரம் தான்.  லாபம் சம்பாதிக்கத் தான் நாங்கள் இருக்கிறோம்.  ஆனால் ஒரு சின்ன உண்மையைக் கண்டு பிடிச்சோம்.  சீரியஸா வியாபாரம் செய்யணும்; ஆனால் அதை விளையாட்டா செய்யணும் ! என்ன ஒண்ணுக்கொண்ணு ஏடா கூடமா இருக்கா? எங்க வாடிக்கையாளர் எல்லாம் இதை பெரியவர்களுக்கான மரியாதையான விளையாட்டு என்று நினைக்கிறார்களே தவிர தப்பா நினைக்கிறதில்லை.”

இதிலே நிறைய வசதி இருக்கு மேரி !  நாங்க மற்ற கடைகளை விட அதிகம் விற்கிறோம்.  நிறைய லாபம் வருது.  நாங்க எங்க வேலையை சந்தோஷமா செய்யறோம். இல்லேன்னா இது ரொம்ப கஷ்டமான வேலை.  மீனங்காடி தொழிலாளிகள் அனைவரும் ஒரு ஜெயிக்கிற கிரிக்கெட் டீம் மாதிரி நல்ல நண்பர்களாகப் பழகுகிறோம்.  இந்த உண்மை உலகத்திற்கே தெரிஞ்சதினாலே நாங்கள் உலக நாயகர்களாகி விட்டோம்.  எல்லாம் எப்படி ?  யோசிச்சு யோசிச்சு ‘ ஜோ ‘ சொன்ன வேலையைத் தான் செய்தோம்.  செய்யறோம் செய்வோம் ! எப்படி விளையாடணும் என்று எங்களுக்குத் தெரியும் “

“ ஏம்மா ! உங்க ஆபீஸ் சிடு மூஞ்சிக்களை எல்லாம் இங்கே கூட்டிட்டு வாயேன் ! டோனி அங்கிள் அவர்களுக்கு எப்படி விளையாடறது என்று சொல்லித் தருவார்! சரியா டோனி அங்கிள் ?”

                        அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே

       திடீரென்று ஒருத்தன் மேரி கிட்டே வந்து , “ ஹேய் ! பத்திரிகை லேடி ! மீன் வாங்கலையா என்று கேட்டுக் கொண்டே வந்தான்.  டோனியின் சிஷ்யன் கையில் ஒரு குட்டி மீனை எடுத்துக் கொண்டு , “ ரொம்ப சல்லிசா தர்றேன் ! இதோட தாடி எலும்பு கொஞ்சம் உடைஞ்சிருக்கு !  அதனாலத் தான்  சல்லிசா தர்றேன் ! “ மீனோட வாயைத் திறந்து காட்டினான்.  இதுக்குப் பேரு  ‘சிரிக்கும் சிங்காரி ‘ ஒரு ரூபாய் தான்! ‘’  அவளிடம் வேடிக்கையாகப் பேசினான் அந்த ஓநாய் போல இருக்கும் வயதான இளைஞன். கூட்டத்தினர் அவனுக்கு வைத்த பெயர் ‘ ஓநாய்த்  தாத்தா ‘. டோனி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான்.  ஜோவுக்கு அதைப் பிடிக்க ஆசை ! ஜேனுக்கு இப்ப தான் பயம் கொஞ்சம் தெளிந்தது.  அம்மா பின்னாலிருந்து கொஞ்சம் தைரியமாக அந்த ஓநாய்த் தாத்தா கிட்டே வர ஆரம்பித்திருக்கிறாள். 

 image

      மேரி ஒரு ரூபாய் கொடுத்து அந்த மீனை வாங்கினாள்.  ஏன் அவனை எல்லோரும் ‘ ஓநாய் தாத்தா ‘ என்று கூப்பிடுகிறார்கள் என்று யோசிக்கவே வேண்டாம் .  அவர் தலை அப்படி இருந்தது.  அது மட்டுமல்ல அவர் பார்க்கும் பார்வை,  அப்படி இப்படி நடக்கிற விதம் அசல் ஓநாய் தான்.  தன்னை அப்படி அழைப்பதில் அவருக்கும் ரொம்பப் பெருமை.!  வயதான மனிதரானாலும் என்ன சுறுசுறுப்பு ! உற்சாகம் ! வீட்டில் பழகின ஓநாய் என்று சொல்லலாம் .  அவளவு ஜாலி ! ஜோவுக்கும் ஒரு ‘ சிரிக்கும் சிங்காரி ‘ வாங்கிக் கொடுத்தாள்.

“ எனக்கும் ஒண்ணு “ என்று ஜேன் கேட்க அவளுக்கும் தனியே பையில் போட்டு சிரிக்கும் சிங்காரி கொடுத்தார் ஒநாய்த் தாத்தா !.  சிங்காரமாகச் சிரித்தார்கள் அனைவரும்.!

 image

      டோனி ஓநாய்த் தாத்தாவிடம் , “ ரொம்ப நன்றி தாத்தா ! நீங்கள்  மேரிக்கு சிரிக்கும் சிங்காரி மட்டும் கொடுக்கவில்லை.  மூன்றாவது ‘ மருந்தும் ‘ கொடுத்தீர்கள் “ என்றான்.

      “ நிஜமாவா ?” மேரி ஆச்சரியத்தில் மீன் மாதிரி வாயைத் திறந்தாள்.

      “ மேரி இரண்டாவது தடவை இந்த மீனங்காடிக்கு வந்தாயே ! அப்போ  இங்கே என்ன நடந்தது ? நினைச்சுப் பாரு மேரி ! உன் மனசில் என்ன நிலைச்சு நின்னது ? “

      “ ஒரு காலேஜ்  பொண்ணு ! 20 வயது இருக்கும்.  அவள் மேடை மேலே ஏறி மீன் பிடிக்க ஐஸ் பாதையில் ஓடியாடி .  இரண்டு மூன்று தடவை தடுக்கி விழுந்து.  கடைசியில் தட்டுத் தடுமாறி மீனை ரெண்டு கையாலும்  லபக்குன்னு பிடிச்சு   ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது போல குதித்தாளே !     அதுவா ?  

      “ சரியா சொன்னே மேரி !  அந்தப் பொண்ணுக்கு அந்த நிகழ்ச்சி நினைவில் இருக்குமா ? “

      “ நிச்சயமா ! அவள் ஓடும் போது பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அவள் கூடவே ஓடி, தடுக்கி விழுந்து, கடைசியில் நாங்களும் அவள் கூடச் சேர்ந்து மீனைப் பிடித்து துள்ளிக் குதித்தது போல ஒரு பிரமை. 

“மேரி! இன்னிக்கு ஜோ எதை நினைச்சு  சந்தோஷப்படுவான் ?”

      “ பெரிய ஆள் மாதிரி ! உன் கடைக்குப் பின்னாடி போனது .  மீன் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தது.  உன் கூட வேலை செய்து மீனை அடுக்கி வைத்தது.  இதெல்லாம் அவன் ஆயுசுக்கும் மறக்க மாட்டான். “ 

இதுதான் எங்கள் மூலதனம் மேரி !  வாடிக்கையாளர்கள் நம்மிடம் வரும் ஒவ்வொரு நாளையும் அவர்கள் நினைவில் நிற்கிற நாளாய் மாற்ற வேண்டும்.  இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று அவர்கள்  நினைக்க வேண்டும்.  நாங்கள் தீவிரமாக யோசித்து அப்படி ஒரு நாளை அவர்களுக்குக் கொடுக்கிறோம்.  அவர்களுடன் பேசி, பழகி, ஒட்டி உறவாடுவோம்.  அவர்களை  விட்டு மற்ற கடைக்காரர்கள் போல விலகி இருக்க மாட்டோம்.  அதே சமயம் அவர்களை மிகுந்த மரியாதையுடன் எங்கள் விளையாட்டில் பங்கு பெற வைப்போம்.  நாங்கள் வெற்றி அடைந்தோம் என்றால்  அவர்களுக்கு ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ என்றைக்கும் நிலைத்து நிற்குமல்லவா?       

  மேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள். 

      ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘

      அவள் மனம் சிறகடித்துப் பறந்தது.  இவர்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து உறவாடுகிறார்கள்.  வேடிக்கையாகப் பங்கு பெற வைக்கிறார்கள்.  அவர்களும் இவர்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் போல – ஒரு நடனம் போல – ஒரு கலை  நிகழ்ச்சி  போல பங்கு பெறுகிறார்கள்.  அந்த சந்தோஷமான நிகழ்ச்சி அவர்கள் மனத்தில் புன்னகையையும் நிறைந்த மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கிறது.  ‘ அந்த நாள் ஞாபகம் ‘ நெஞ்சிலே என்றைக்கும் இருக்கும்.  வாடிக்கையாளரின் நெஞ்சில் அந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றுவது எவ்வளவு பெரிய கலை !  அதைத் தொடர்ந்து  செய்யும் இந்த  மீனங்காடித் தொழிலாளர்களின்  மனம்  எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் !

      “ ஹலோ ! மேடம் ! என்னாச்சு? வீட்டிலே சொல்லிக்கிட்டு வந்திட்டியா ? “ வேடிக்கையாக விரலைச் சொடக்கினான் டோனி ! மேரி சிலிர்த்துக் கொண்டாள்.  டோனி, ஜோ,ஜேன் மூவரும் சிலை போல நின்று கொண்டிருக்கும்  மேரியை ஒரு  நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். 

      “ சாரி  டோனி ! சாரி குட்டீஸ் ! இந்த ‘அந்த நாள் ஞாபகம்’ அஸ்திரத்தை எங்கள் ஆபீஸில் எப்படிப் போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்ததில் எல்லாவற்றையும்  மறந்து விட்டேன்.“

 ”இதோடு இன்னிக்குப் பாடம் போதும்.! குழந்தைகளுக்கு பசிக்கும் ! நான் வாங்கித் தருகிறேன்.  வாங்க ஜோ ! ஜேன் ! வா மேரி “ என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டான் டோனி .

      “மீன் குட்டிகளா ! உங்களுக்குப் பசிக்குதா ?

      “ ஆமாம் அங்கிள் “ கோரசாக இருவரும் சொன்னார்கள்.

மேரியும் மெல்ல ‘ ஆமாம் ‘ என்று சொல்லி அவர்கள் பின்னால் நடந்தாள்.!

(தொடரும்)

image