ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)

                                                  7/25                                                    

இம்மாத எழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி 

image

பத்மஸ்ரீ, சாஹித்ய அகெடமி, சரஸ்வதி சன்மான், பாரதிய பாஷா பரிஷத்  என பல விருதுகளால் கெளரவிக்கப்பட்ட, ஆர். பார்த்தசாரதி என்னும் திரு. இந்திரா பார்த்தசாரதி நிதர்சனத்தை ஒரு அங்கதச் சுவையோடு ( அங்கதத்துக்கு  புரிகிற பாஷையில்  சொல்லணும்னா  – சடையர்  – satire )  நம்முன் வைப்பதில் மன்னன். சிறுகதை, நாவல்கள் கட்டுரைகள் தவிர நாடகங்களும் எழுதியுள்ளார்.

அவரது மனிதாபிமானம் என்னும் கதை.

ஒரு அறையில் வேறு மூன்று நபர்களுடன் தங்கியிருக்கும் தனது நண்பன் பற்றி டெல்லியில் வேலை பார்க்கும் ஒருவர் சொல்வதாக  இந்தக் கதை. நண்பர்கள் வேறு வேறு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். ‘ரிவோலி’ தியேட்டரில் படம் பார்க்க அறையில் வசிக்கும் நண்பன் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறான்.

(இ பா, இந்தக்கதையில் இரு நண்பர்களுக்கும் பெயரையே குறிப்பிடவில்லை. வசதிக்காக கதை சொல்பவரை நம்ம ஆள்  என்றும் மற்றவரை நண்பன் என்றும் வைத்துக்கொள்ளலாம்)

நம்ம ஆள் நண்பன் அறைக்குப் போகும்போது  நண்பனுக்கு மஞ்சள்காமாலை என்று தெரிகிறது. அவனோ அலோபதியில் நம்பிக்கை இல்லாதவன். மறுமுறை பார்க்கச் செல்லும்போது தனியாக அறையில் மோசமான நிலையில் கிடக்கிறான். மற்ற அறை நண்பர்கள் யாரும் இல்லை. அவனை மருத்துமனையில் மிக்க சிரமத்தோடு சேர்த்து விடுகிறார் நம்ம ஆள்.  அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும் பிரச்சினைகளோடு உடனடியாக ஆபரேஷன் செய்ய சம்மதித்து கையெழுத்திடவும் நேர்கிறது.

நண்பனின் குடும்பத்தினரின் முகவரிக்காக திரும்பவும் அவன் அறைக்குச் செல்கிறார். அங்கு அறை நண்பர்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் விவரம் தெரியாததால் மறுநாள் அவன் அலுவலகத்திலிருந்து முகவரி பெற்று தந்தி அடிக்கிறார். நண்பன் ஆபத்திலிருந்து வெளிவந்து விட்டாலும் அவனது தம்பி வரும்வரை நண்பனைக் கவனித்துக் கொள்கிறார்.

ஒய்வு தேவைப்படுவதால் நண்பன் சொந்த ஊர் சென்று விடுகிறான்.

திரும்பி வந்த பிறகு சந்திக்கும்போது “ரொம்ப தாங்க்ஸ்” என்கிறான் நண்பன்.  கூடவே “ரிவோலியிலே ஒரு சினிமா படம், பேர் ஞாபகமில்லே. டிக்கெட் வாங்கின மறுநாள்தான் நான் படுத்துட்டேன்”

“ஸோ?”

“எனக்கு நீ ஏழரை ரூபா தரணும்” என்றான் நண்பன்.

என்று கதையை முடிக்கிறார் இ .பா

இந்தக்கதையின் இடையே நம்ம ஆள் கூட தங்கியிருப்பவன் (காலையில் காயத்ரி மந்திரம் – இரவில் நீலப்படம்"), நண்பனின் அறைவாசிகள் சீட்டாட்டம் (பெயர் அவசியமில்லாததால் அவர்களை ‘இரண்டு ஏஸ்’ , ‘கலர்’, “மூன்று ஏழு” என்றுதான் சொல்கிறார் ), மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த டாக்ஸி டிரைவர் (உதவி செய்வதோடு பணமும் வாங்காமல் “என்னையும் ஒரு நண்பன் என்று வைத்துக்கொள்ளுங்கள்”) என பல சிறு பாத்திரங்கள் . இ பா அவர்களின் சாதுரியமான உரையாடல்களும் கிண்டல் தொனிக்கும் கதை சொல்லும் முறையும் வழக்கம் போல.

அவரது மற்ற இருகதைகளின் லிங்க்

http://azhiyasudargal.blogspot.in/2012/09/blog-post_6.html

http://azhiyasudargal.blogspot.in/2011/01/blog-post_20.html

டெல்லி வாழ் தமிழர்கள், மத்திய அரசு அதிகாரிகளிடையே போலி கௌரவம், நுனி நாக்கு ஆங்கில ‘அறிவு ஜீவிகள் ‘என பலரையும் கிண்டல் தொனிக்க எழுதிய கதைகள் அனேகம். நினைவில் இருக்கும் சில கதைகள் – ஒரு இனிய மாலைப்பொழுது,  ஒரு கப் காபி,  அஸ்வத்தாமா, ஏற்பாடு, நான் கண்டேனா?, வழித்துணை.

இவரது முக்கிய நாவல்கள் :  தந்திரபூமி, குருதிப்புனல் (சாகித்ய அகாடமி பரிசு) ,ஆகாசத்தாமரை, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, மாயமான் வேட்டை, தீவுகள், யேசுவின் தோழர்கள், சுதந்திர பூமி, கிருஷ்ணா கிருஷ்ணா ,வேதபுரத்து வியாபாரிகள்,  வெந்து தணிந்த காடுகள், திரைகளுக்கு அப்பால்.  

நாடகங்கள்:   உச்சி வெயில் ( மறுபக்கம் என்றபெயரில் திரைப்படம்) ,ஔரங்கஜீப் ,நந்தன் கதை, ராமானுஜர், போர்வை போர்த்திய உடல்கள் .