அகமதாபாத்திற்கு அருகில் உள்ள காந்திநகரில் (குஜராத்தின் தலைநகரம்) அக்ஷர்தாம் என்ற ஸ்வாமிநாராயன் கோவில் உள்ளது! பிரமாண்டமான கோவில்.! அதன் அழகையும் அதில் இருக்கும் குருமார்களின் திறமைகளைப் பற்றியும் இன்டெர்நெட்டில் ஏராளமாக இருக்கின்றன. உலகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மிக நிறுவனங்களில் ஸ்வாமிநாராயன் முதல் இடத்தில் இருக்கிறது என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்! மொத்தம் 1100 கோவில்கள் உள்ளனவாம்!
காந்திநகர் கோவிலில் நடைபெரும் லேசர் – தண்ணீர் ஷோவின் கதை கீழே! வீடியோ மேலே! ஆன்மீகமும் விஞ்ஞானம் இணைந்த நிகழ்ச்சி !
கதையைப் படித்துவிட்டு வீ டியோவைப் பாருங்கள்! மிகவும் நன்றாக இருக்கும்!அபாரம்! அற்புதம் !
வஜஸ்ரவாஸ் என்ற செல்வந்தன் மிகப் பெரிய யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தின் ஆகம விதிப்படி எல்லா செல்வங்களையும் தானம் செய்யவேண்டும்.
வஜஸ்ரவஸுக்கு நச்சிகேதன் என்ற 16 வயது மகன் இருந்தான். தந்தை செய்கின்ற தருமங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். தந்தை பசுக்களை தானம் கொடுக்கும் போது வயதான உபயோகமற்ற பசுக்களையே கொடுப்பதைக் கண்டு வேதனையுற்றான். மற்றும் எல்லா செல்வங்களையும் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டான். அவன் தந்தையிடம் , “தந்தையே! ஏன் நீங்கள் உங்கள் உடமைகளை எல்லாவற்றையும் தானம் செய்யவில்லை?. நான் தங்கள் உடமையில்லையா? என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான். வஜஸ்ரவஸ் பதில் கூறத் தயாராயில்லை. நச்சிகேதனோ திரும்பத் திரும்ப அதே கேள்வியைக் கேட்கவும் அவனுக்குக் கோபம் வந்தது. அந்தக் கணத்தில் ‘ஆம்.உன்னை யமனுக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறேன்’ என்று ஆத்திரத்தில் என்ன சொல்கிறோம் என்பதை உணராமல் கூறினான்.
பிறகு தவறை நினைத்து வருந்தினான். ஆனால் நச்சிகேதனோ தந்தை சொன்ன சொல்லை நிலைநிறுத்த எமன் இருப்பிடம் சென்றான். அந்த சமயம் எமன் அங்கு இல்லை. அதனால் மூன்று நாட்கள் உணவு,நீர்,தூக்கம் இன்றி எமன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தான். எமனும் நச்சிகேதனின் பெருமையை உணர்ந்து மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மூன்று வரம் தருவதாகக் கூறினான்.
முதல் வரம் தந்தை நலமாக இருக்கவேண்டும் என்று கேட்டதும் எமனும் மகிழ்ச்சியுடன் தந்தான்.
இரண்டாவது வரத்தை உலக மக்களுக்காகக் கேட்டான். துக்கம்,துயரம், முதுமை , இறப்பு என்னும் துன்பத்தில் உழலும் மக்கள் எப்படி சுவர்க்கம் அடைய முடியும் என்று எமனிடம் கேட்டான். எமனும் மகிழ்ந்து, எப்படி எந்த யாகத்தைச் செய்தால் ஸ்வர்க்கம் அடையமுடியும் என்ற ரகசியத்தையும் சொன்னான். நச்சிகேதன் சிறுவன் ஆனாலும் எமன் சொன்னதை நன்கு அறிந்து கொண்டதால் எமன் அந்த யாகத்துக்கு நச்சிகேதன் பெயரையே வைத்தான்.
மூன்றாவது வரமாக ’ இறப்புக்குப் பின் மனிதருக்கு நிகழ்வது என்ன’ என்ற மரண ரகஸ்யத்தைச் சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டான். எமனுக்கு நச்சிகேதனை மிகவும் பிடித்தது. ஆனாலும் அந்த ரகஸ்யத்தைச் சொல்ல மனம் வரவில்லை. அதற்குப் பதிலாக பொன்னையும் பொருளையும் சுகங்களையும் ஐஸ்வர்யங்களையும் தருவதாகக் கூறினான். நச்சிகேதனோ அவை எதுவும் தனக்குத் தேவையில்லை; மரண ரகஸ்யத்தை மட்டும் கூறுமாறு வேண்டினான்.
முடிவில் எமனும் மனமகிழ்ந்து மனிதன் ஆத்மாவை உணர்ந்தால் மரணமின்மை என்ற நிலையை அடையக் கூடும் என்று மரண ரகசியத்தை உபதேசித்தான்.
இந்தக் கருத்து தான் கடோபநிஷத்தின் மூலக்கருத்தாகும்.
பக்கம் 4/25