
திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
டிசம்பர் 5 அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வானை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. மஹா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
நன்றி: தினமலர்
பக்கம் 13/25