ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)

இந்த மாதம்: தி ஜானகிராமன்

[ வெல்லத்தை எத்தனை முறை சுவைத்தாலும்  இனிப்பு தான்  தி.ஜானகிராமன் தியாகய்யர் பற்றிய கதையை ஏற்கனவே பார்த்தோம். இது ‘துணை’ என்ற கதையைப் பற்றி! ]

image

தி ஜானகிராமன் என்கிற படைப்பாளியை மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி போன்ற நாவல்கள் மூலம் பலர் அறிந்திருந்தாலும் அவருடைய சிறுகதைகள் அவ்வளவாக பேசப்படவில்லை என்பது என் கருத்து. அவரது நாவல்களில் மையக்கருத்தாகவோ அல்லது பின்னணியாகவோ ஒரே விஷயம்  இருப்பதாக பலத்த குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தபோது பலருக்கு (அண்மையில் மறைந்த திருமதி. ராஜம் கிருஷ்ணன் உட்பட) வருத்தம் அல்லது கோபம்.

அற்புதமான பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

இரண்டு முதியவர்கள் 79 வயது முதியவரையும் அவரது 98  வயது தகப்பனாரையும் “பென்ஷன்” ஆபீசுக்கு அழைத்துச் செல்ல  நேரிடும் ஒருவரின் அனுபவமாக ‘துணை’ என்கிற கதையை இழையோடும் மெல்லிய நகைச்சுவையோடு  சொல்லுகிறார்.

image

98 வயதுக்காரர் ‘லேடி’ என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இளம்வயதில் சுருட்டி தலையணையாக வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தலைமுடியாம். அவரது மகன் பெயரோ சின்னக்குழந்தை. தந்தையையும், தாத்தாவையும்  “மஸ்டர் டே"க்கு  (ஓய்வூதியம் பெறுவோருக்கு வருடம் ஒருமுறை நேரில் செல்லவேண்டிய கட்டாயம்) வழக்கமாக அழைத்துச் செல்லும் சின்னக்குழந்தையின் மகன் (58 வயது)  காசிக்குப் போயிருந்ததால் தன் நண்பரின் மகனின் உதவியை நாடுகிறார் சின்னக்குழந்தை.

இரு முதியவர்களையும் வண்டி ஏற்பாடு செய்து அழைத்துசென்று, பென்ஷன் வாங்கியபிறகு திரும்பும் வழியில் மாட்டுவண்டி குடைசாய்துவிடுகிறது. பெரியவர்கள் இருவருக்கும் லேசான அடி. இவனுக்குத்தான் பிராக்ச்சர். நினைவிழந்த இவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று கட்டுடன் வீட்டில் சேர்த்துவிடுகிறார்கள் இரு முதியவர்களும்.

"அம்மா, எங்களோடு வந்ததற்குத் தண்டனை உங்க குழந்தைக்கு. படு கிழங்கள் இருக்கோமே, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ? ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை ..”   என்று சின்னக்குழந்தை சொல்ல, “நாம அழச்சிண்டு வந்துட்டோம்” என்று முடிக்கிறார் ‘லேடி’ கிழவர்.

கதை முழுவதும் வரும் உரையாடல்கள் தான் வெகு இயற்கை.

“ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு  பிள்ளை, அவருக்கு ஒரு  பிள்ளை.. ”

“என்னப்பா சொல்லிக்கொண்டே போனா?”

“அதுதான் நிறுத்திப்பிட்டேனே.. அஞ்சு தலைமுறை … ”

“இவர் அப்பாவுக்குத் தொன்னுத்தெட்டு வயதுன்னு சொன்னாரே, கேட்டியா.. நாலைந்து வருஷமா இப்படித்தான் சொல்லிண்டிருக்கார்.”

 அழைத்துப்போக கிளம்புகையில்

‘லேடி’ கிழவரிடம் அருகில் சென்று இவன் “சௌக்யமா” என்பர் கேட்க அவர், “யாரது, எனக்கு கண்தான் தெரியாது. காது கேட்கும்.” என்கிறர் ‘லேடி’, வயதானவர்கள் முன் இயல்பாகவே உச்சஸ்தாயியில் பேசுகிறது தவறு என்று உணர்த்தும்வகையில்.

கிளம்பும்போது, “என்னடா, சின்னக்குழந்தை கிளம்பலாமோல்லியோ?” என்று ‘லேடி’ கேட்க “ இதோ ஆயிற்று .. சட்டை போட்டுக்க வேண்டியதுதான்” என்கிறர் சின்னக்குழந்தை.

“பேஷ்.. முன்னாடியே போட்டுக்க முடியலையோ? என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப்போறியோ, தெரிலை, சரி சரி, வா, சட்டுன்னு” என்கிறார் ‘லேடி’.   

       அங்கே கஜானா அருகில்,

“ஏன் பிள்ளையை மட்டும் அழைச்சிண்டு வந்திருக்கே, பேரன் எங்கே?” என்று ஒருவர் கேட்க

“காசிக்குப்போயிருக்கான்” என்கிறர் ‘லேடி’

“காசிக்கா? போடு சாம்பிராணி.  ஏன்? நீயும் போயிட்டு வரப்படாதோ"     

"நானுமா? பேஷ்.. ஹூசூர் கஜனாவே காசியா இருக்கு நமக்கு , நன்னாச்சொன்னே போ … ”

“எத்தனை மாஸ்டர் ஆச்சு.. அறுபது இருக்குமா?”

“அறுபதா? 55ம்  60ம் நூத்திப் பதினஞ்சுன்னா? என்னடா இது ? நூத்திபதினஞ்சுப் வயசா ஆயிடுத்து எனக்கு?”

“பின்னே சொல்லேன்"  

"இதெல்லாம் என்ன கேள்வி?”

“ஏன், கேக்கப்படாதோ”

“கேட்டுண்டே இரு, போ”

                திரும்பி வரும்போது¸

      ரிடையர் ஆகாமலே வேலைபார்க்க முடியாதா என்று பேச்சு வருகிறது.

“ஏன் முடியாது? பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்திலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப்போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுத்துன்னா, முட்டளாப் போயிடறான், கபோதியாப் போயிடுறான்னு கவண்மெண்ட் நெனச்சிண்டு இருக்கு. அவாவா பலத்துகேத்தப்போல வேலை பாக்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55 ன்னு வக்கிறது .. என்னடா பேத்தல்.”

முழுக்கதையையும் படிக்க  https://abedheen.wordpress.com/2011/08/27/janakiraman-taj-thunai/

நாம் அறிந்த, பார்த்த, பழகியவர்களை நினைவுபடுத்தும் வகையில் பாத்திரப்படைப்பு கொண்ட இவரது கதைகள் சில – ‘பாயசம்’, ‘அடுத்த…’, ‘அக்பர் சாஸ்திரி’, ‘வீடும் வெளியும்’, ‘தீர்மானம்’, ‘நடராஜக்கால்’

படத்திற்கு நன்றி: விகடன் & கோபுலு 

 பக்கம்  11/25