ஏன் கிருஷ்ணன் சூதாட்டத்தைத் தடுக்கவில்லை?

இன்டெர்நெட்டில் வந்த ஒரு அருமையான விளக்கக் கட்டுரை!

image

மகாபாரதத்தில் ‘வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று கிருஷ்ணன் தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? உத்தவர் கேட்ட கேள்வியும் கிருஷ்ணன்  அதற்குக் கூறிய விளக்கமும் இது வரை கேள்விப் படாதவை! 

. “பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ , நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை  அறிய  ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கிருஷ்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக  நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும்
நன்கறிந்த ஞானியான நீ, ‘உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட, முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம்
அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
தண்டனையாக,அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ
சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை!

image


‘திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்
வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள்
தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ’;துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்தபிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த
நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?’;’; என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;
மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

image


பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன்
தொடர்ந்தான்.

“துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி,
பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,‘நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என்
சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும்
நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்
காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள
மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம்.

ஆனால்,அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்
தவறையும் செய்தான். ‘ஐயோ! விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க
வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்.என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான் . யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்,  அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும்வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும்
இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்
சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும்  தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய
மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன
தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

image


“அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?”
என்றார் உத்தவர்.

“கேள்” என்றான் கண்ணன்.

“அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?”

புன்னகைத்தான் கண்ணன். 

“உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்மவினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில்
குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்
கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?”
என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்!  எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற
முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர,  அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப்
போராடவில்லை!

image

பக்கம் 8/25 

சனி

image

சனியின்    சிறப்பு        அடுத்த     நாள்        விடுமுறை
சனியின்    சிறப்பு       அரப்புடன்   எண்ணை    முழுக்கு    
சனியின்    துவக்கம்     வாரத்தின்   முடிவு
சனியில்    கிட்டிடும்     வாரத்தின்   கூலி
சனியின்    சனி தசை   சகலரையும் வாட்டும்
சனியின்    இரவுக்       காய்ச்சல்    சுகமான     காய்ச்சல்                   சோம்பலைக் கொஞ்ச     நவக்கிரகம்  சுற்ற தேவை சனி
வார        வழக்கத்தில் விடுபட     தேவை      சனி
படம்        பார்க்க      கண்ணுறங்க தேவை      சனி
காதல்       புரிய        ஊர் சுற்ற   தேவை      சனி

கணவன் மனைவியை திட்டுவது சனியனே   
தாய் குழந்தையைத் திட்டுவதும்  சனியனே 
கெட்டபின் சுட்டிக் காட்டுவதும் சனியனே 
தொடர்ந்து துயர் தருவதும் ஏழரைச் சனியனே 

அவரைப் பகைத்து அழிந்தவர் ஆயிரம்ஆயிரம்
அரசனை  ஆண்டியாக்கி  பெண்ணிணை  பேதையாக்கி    
வீரனைக் கோழையாக்கி அறிஞனை முட்டாளாக்கி 
மனிதனை மிருகமாக்கி  தேவரைத் தரையில் தள்ளி 
அனைவருடன் விளையாடும் வித்தகர்   சனீஸ்வரர் !
ஈ ஸ்வரனுக்குச் சமம் அதனால்  சனீஸ்வரன் 
காகம் ஏறும் தம்பிரான்  எண்ணைப் பிரியன் 
அவரிடம் பிரியமாய்க் கெஞ்சுவது எமைத் தொடாதே!
காலைப் பற்றி காலை வாரும் நிபுணர்  அவர் 
கணக்கில் வல்லானைத் தொட மாட்டாராம்!

ஷீர்டிக்கு அருகில் சனிக்கு ஒரு கோவில் 
சனி சிங்கனாபூர்  என்ற அழகான திருத்தலம் 
வீடுகளுக்கு கதவே இல்லாத சிறப்பான ஊர் 
சனிப்       பார்வை     தவிர்க்க     அவரைத்    துதி
திருநள்ளாறு    கோவிலில் காட்சிதரும் பகவான்
துன்பம் தொலைய  அவரைத்  தினமும்   துதி !

பக்கம்  9/25 

ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)

இந்த மாதம்: தி ஜானகிராமன்

[ வெல்லத்தை எத்தனை முறை சுவைத்தாலும்  இனிப்பு தான்  தி.ஜானகிராமன் தியாகய்யர் பற்றிய கதையை ஏற்கனவே பார்த்தோம். இது ‘துணை’ என்ற கதையைப் பற்றி! ]

image

தி ஜானகிராமன் என்கிற படைப்பாளியை மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி போன்ற நாவல்கள் மூலம் பலர் அறிந்திருந்தாலும் அவருடைய சிறுகதைகள் அவ்வளவாக பேசப்படவில்லை என்பது என் கருத்து. அவரது நாவல்களில் மையக்கருத்தாகவோ அல்லது பின்னணியாகவோ ஒரே விஷயம்  இருப்பதாக பலத்த குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தபோது பலருக்கு (அண்மையில் மறைந்த திருமதி. ராஜம் கிருஷ்ணன் உட்பட) வருத்தம் அல்லது கோபம்.

அற்புதமான பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

இரண்டு முதியவர்கள் 79 வயது முதியவரையும் அவரது 98  வயது தகப்பனாரையும் “பென்ஷன்” ஆபீசுக்கு அழைத்துச் செல்ல  நேரிடும் ஒருவரின் அனுபவமாக ‘துணை’ என்கிற கதையை இழையோடும் மெல்லிய நகைச்சுவையோடு  சொல்லுகிறார்.

image

98 வயதுக்காரர் ‘லேடி’ என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இளம்வயதில் சுருட்டி தலையணையாக வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தலைமுடியாம். அவரது மகன் பெயரோ சின்னக்குழந்தை. தந்தையையும், தாத்தாவையும்  “மஸ்டர் டே"க்கு  (ஓய்வூதியம் பெறுவோருக்கு வருடம் ஒருமுறை நேரில் செல்லவேண்டிய கட்டாயம்) வழக்கமாக அழைத்துச் செல்லும் சின்னக்குழந்தையின் மகன் (58 வயது)  காசிக்குப் போயிருந்ததால் தன் நண்பரின் மகனின் உதவியை நாடுகிறார் சின்னக்குழந்தை.

இரு முதியவர்களையும் வண்டி ஏற்பாடு செய்து அழைத்துசென்று, பென்ஷன் வாங்கியபிறகு திரும்பும் வழியில் மாட்டுவண்டி குடைசாய்துவிடுகிறது. பெரியவர்கள் இருவருக்கும் லேசான அடி. இவனுக்குத்தான் பிராக்ச்சர். நினைவிழந்த இவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று கட்டுடன் வீட்டில் சேர்த்துவிடுகிறார்கள் இரு முதியவர்களும்.

"அம்மா, எங்களோடு வந்ததற்குத் தண்டனை உங்க குழந்தைக்கு. படு கிழங்கள் இருக்கோமே, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ? ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை ..”   என்று சின்னக்குழந்தை சொல்ல, “நாம அழச்சிண்டு வந்துட்டோம்” என்று முடிக்கிறார் ‘லேடி’ கிழவர்.

கதை முழுவதும் வரும் உரையாடல்கள் தான் வெகு இயற்கை.

“ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு  பிள்ளை, அவருக்கு ஒரு  பிள்ளை.. ”

“என்னப்பா சொல்லிக்கொண்டே போனா?”

“அதுதான் நிறுத்திப்பிட்டேனே.. அஞ்சு தலைமுறை … ”

“இவர் அப்பாவுக்குத் தொன்னுத்தெட்டு வயதுன்னு சொன்னாரே, கேட்டியா.. நாலைந்து வருஷமா இப்படித்தான் சொல்லிண்டிருக்கார்.”

 அழைத்துப்போக கிளம்புகையில்

‘லேடி’ கிழவரிடம் அருகில் சென்று இவன் “சௌக்யமா” என்பர் கேட்க அவர், “யாரது, எனக்கு கண்தான் தெரியாது. காது கேட்கும்.” என்கிறர் ‘லேடி’, வயதானவர்கள் முன் இயல்பாகவே உச்சஸ்தாயியில் பேசுகிறது தவறு என்று உணர்த்தும்வகையில்.

கிளம்பும்போது, “என்னடா, சின்னக்குழந்தை கிளம்பலாமோல்லியோ?” என்று ‘லேடி’ கேட்க “ இதோ ஆயிற்று .. சட்டை போட்டுக்க வேண்டியதுதான்” என்கிறர் சின்னக்குழந்தை.

“பேஷ்.. முன்னாடியே போட்டுக்க முடியலையோ? என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப்போறியோ, தெரிலை, சரி சரி, வா, சட்டுன்னு” என்கிறார் ‘லேடி’.   

       அங்கே கஜானா அருகில்,

“ஏன் பிள்ளையை மட்டும் அழைச்சிண்டு வந்திருக்கே, பேரன் எங்கே?” என்று ஒருவர் கேட்க

“காசிக்குப்போயிருக்கான்” என்கிறர் ‘லேடி’

“காசிக்கா? போடு சாம்பிராணி.  ஏன்? நீயும் போயிட்டு வரப்படாதோ"     

"நானுமா? பேஷ்.. ஹூசூர் கஜனாவே காசியா இருக்கு நமக்கு , நன்னாச்சொன்னே போ … ”

“எத்தனை மாஸ்டர் ஆச்சு.. அறுபது இருக்குமா?”

“அறுபதா? 55ம்  60ம் நூத்திப் பதினஞ்சுன்னா? என்னடா இது ? நூத்திபதினஞ்சுப் வயசா ஆயிடுத்து எனக்கு?”

“பின்னே சொல்லேன்"  

"இதெல்லாம் என்ன கேள்வி?”

“ஏன், கேக்கப்படாதோ”

“கேட்டுண்டே இரு, போ”

                திரும்பி வரும்போது¸

      ரிடையர் ஆகாமலே வேலைபார்க்க முடியாதா என்று பேச்சு வருகிறது.

“ஏன் முடியாது? பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்திலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப்போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுத்துன்னா, முட்டளாப் போயிடறான், கபோதியாப் போயிடுறான்னு கவண்மெண்ட் நெனச்சிண்டு இருக்கு. அவாவா பலத்துகேத்தப்போல வேலை பாக்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55 ன்னு வக்கிறது .. என்னடா பேத்தல்.”

முழுக்கதையையும் படிக்க  https://abedheen.wordpress.com/2011/08/27/janakiraman-taj-thunai/

நாம் அறிந்த, பார்த்த, பழகியவர்களை நினைவுபடுத்தும் வகையில் பாத்திரப்படைப்பு கொண்ட இவரது கதைகள் சில – ‘பாயசம்’, ‘அடுத்த…’, ‘அக்பர் சாஸ்திரி’, ‘வீடும் வெளியும்’, ‘தீர்மானம்’, ‘நடராஜக்கால்’

படத்திற்கு நன்றி: விகடன் & கோபுலு 

 பக்கம்  11/25 

அரோகரா கோஷம் விண்ணதிர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்!
டிசம்பர் 05,2014
image

திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.

டிசம்பர் 5 அன்று  அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு  அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வானை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

image

image
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. மஹா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

நன்றி: தினமலர் 

பக்கம்  13/25 

திதத் தத்தத் தித்தத – அருணகிரியார்

வைணவப் புலவரான வில்லிபுத்தூரார் சனியூர் என்ற ஊரில் பிறந்தவர். 

வில்லிபுத்தூரார் புலவர்களிடம் போட்டி வைத்து யார் தோல்வி அடைகிறார்களோ அவர்களின் காதுகளை, வென்றவர் அறுக்க வேண்டும் என்று கூறினார். இப்படியாக பல பேருடைய காதுகளைப் போட்டியில் வென்று அறுத்தார் வில்லிபுத்தூரார்.

image

ஒருமுறை அவ்வூருக்கு வந்த முருக  பக்தரான  அருணகிரிநாதர் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று போட்டியில் கலந்து கொண்டார். 

image

அந்தப்  பாடலாவது ..

திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி

(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து

(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து

(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.

பதவுரை:

திதத்த ததித்த ..திதத்த ததித்த என்னும் தாள  வாத்திசைகளை,

திதி … தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,

தாதை … உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,

தாத … மறை கிழவோனாகிய பிரம்மனும்,

துத்தி … புள்ளிகள் உடைய படம் விளங்கும்,

தத்தி … பாம்பாகிய ஆதிசேஷனின்,

தா … முதுகாகிய இடத்தையும்,

தித … இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)

தத்து … அலை வீசுகின்ற,

அத்தி … சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),

ததி … ஆயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக் கொண்டு,

து … அதை மிகவும் வாங்கி  உண்ட (திருமாலும்),  போற்றி வணங்குகின்ற,

இதத்து … போ¢ன்ப சொரூபியாகிய,

ஆதி … மூலப்பொருளே,

தத்தத்து … தந்தங்களை உடைய,

அத்தி … யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,

தத்தை … கிளி போன்ற தேவயானையின்,

தாத … தாசனே,

திதே துதை … பல தீமைகள் நிறைந்ததும்,

தாது … ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,

அதத்து உதி … மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,

தத்து அத்து … பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)

அத்தி தித்தி … எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),

தீ … அக்னியினால்,

தீ … தகிக்கப்படும்,

திதி … அந்த அந்திம நாளில்,

துதி தீ … உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,

தொத்ததே … உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

பொழிப்புரை ………

நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சோலையில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே!, தேவயானையின் தாசனே! ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.

image

இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றார்.

 மேலும் அருணகிரியார், இனி இது போன்ற போட்டி வைக்கலாகாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்தார்.

வில்லிபுத்தூரார் தன் பாவத்தைத் தீர்க்க மகாபாரதத்தைத் தமிழில் எழுதினார். அதுவே வில்லிபாரதம் என்று அழைக்கபடுகிறது.

பக்கம்  14/25