அன்று பாரதி ! இன்று நிர்கதி ! நாளை?
அன்றுபாரதி: ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
இன்றுநிர்கதி: ஐ பாட் வாங்கித்தா அப்பா – அதில்
ஆங்க்ரிபேர்ட்ஸ் லோட் பண்ணு அப்பா
நெட்கனெக்ஷன் வேணுமே அப்பா – நீ
Outdated ஆகாதே அப்பா
அன்றுபாரதி: காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா
இன்று நிர்கதி: காலை எழுந்தவுடன் ட்யூஷன் – பின்பு
நாள் முழுவதும் பள்ளிடென்ஷன்
மாலை வந்ததும் போகோ – இதில்
ஓடி ஆட நேரமெங்கே அப்பா
அன்று பாரதி: பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா – ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா
இன்று நிர்கதி: பொய்யே எமக்கு வேதம் அப்பா – இன்று
அடுத்துக் கெடுப்பதே அரிச்சுவடி அப்பா
கூகிள் நமக்குத் துணை அப்பா – அதில்
கிட்டாத விஷயமே இங்கில்லை அப்பா
அன்று பாரதி: பாரத நாடு பழம் பெரும் நாடு – நீர்
அதன் புதல்வர் அந்நினைவகற்றாதீர்
இன்று நிர்கதி: பாரத நாடு பழம் பஞ்சாங்க நாடு – அந்நிய
நாட்டின் குடியுரிமையே எங்கள் தேவை.
அன்று பாரதி: தீரத்தி லேபடை வீரத்திலே – நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு – இந்த ( பாருக் )
இன்று நிர்கதி: பேரத்திலே லஞ்ச பேரத்திலே – ஊழலிலே
பலகோடி ஊழலிலே
ஆட்சியிலே சுயநல ஆட்சியிலே
வன்முறையிலே உயர் நாடு – இந்தப்
பாருக்குள்ளே பழம் பஞ்சாங்க நாடு.
அன்று பாரதி: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி
இன்று நிர்கதி: பப்புக்குப் போவதும் பார்களில் குடிப்பதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
கெட்டுப் போவதில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.
அன்று பாரதி: காதலொருவனைக் கைப்பிடித்தே – அவன்
காரியம் யாவிலும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!
இன்று நிர்கதி கண்டதும் மயங்கிக் கைப்பிடித்தே – பின்
அவன் வேண்டாமென்று ரத்து செய்து
அன்னியர் வாழ்வில் மோகம் கொண்டு
நம் பாரதத்தின் பேரைக் கெடுப்போமடி.
அன்று பாரதி: வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்- எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
இன்று நிர்கதி: மலையை அழித்துக் கிரானைட் கொள்ளை அடிப்போம் –அடி
மேலைக் கடலில் கழிவு நீரைக் கலப்போம்
பள்ளிக் கருகினிலே பார்கள் திறப்போம் – எங்கள்
பாரத தேசத்தின் பெருமை அழிப்போம் – எங்கள்
பாரத தேசத்தை நாசமாக்குவோம்.
அன்று பாரதி: சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
இன்று நிர்கதி: சிங்களத்தில் தமிழரைக் காவு கொடுப்போம்
சேதுவைக் காட்டியே ஓட்டு வாங்குவோம்
காவிரியில் ஓடிவரும் நீரைத் தடுத்து
ஏழை உழவரின் வாழ்வை அழிப்போம்.
அன்று பாரதி: ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் பள்ளிச் சாலைகள் வைப்போம்:
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
இன்று நிர்கதி: வெடிகுண்டுகள் செய்வோம் டிரெயினில் வெடிக்கவும் செய்வோம்
பணத்தினைச் சேர்க்க கல்விக்கூடம் திறப்போம் குப்பையைச் சேர்ப்போம் பிளாஸ்டிக் குப்பையைச் சேர்ப்போம்
சுத்தம் தொலைப்போம் கொடிய நோயினைச் சேர்ப்போம்
பாரதி: நெஞ்சு பொறுக்குதிலையே
நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால், நெஞ்சுபொறுக்குதிலையே
பெண்: பகவானே! அறியாமையாலும் ஆணவத்தாலும் அன்று பாரதி சொன்ன நல் வாக்குகளை மறந்தும், மாற்றியும் செய்து நம் நாட்டை இன்று இந்த நிர்க்கதியான நிலைக்கு ஆளாக்கி விட்டோம். நாங்கள் அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளை எல்லாம் பொறுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும். நாளைக்கு வைகுண்ட ஏகாதசி ! பெருமாளே நீங்கள்தான் எங்கள் நாட்டைநலம் பெறச் செய்து எங்களுக்கும் வழி காட்ட வேண்டும்! நாளைக்கு எங்கள் நிலைமை என்ன ? பகவானே !
விஷ்ணு: பக்தர்களே உங்கள் பக்தியை மெச்சினோம். நீங்கள்தான் ஏற்கனவே swacha ஆனந்த் தொடங்கி நாட்டை சீர் திருத்தத் தொடங்கிவிட்டீர்களே பின் என்ன கவலை?நாளை நிம்மதி .நாளை நிம்மதி நாளை நிம்மதிதான்!
பெண்: நம் தாய்த்திருநாட்டை மேம்படுத்த, நாளை நிம்மதியான வாழ்வைப் பெற, நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் என்ன செய்ய வேணும்?
ராகம்: ஏக் தோ தீன், சார் ஒத்துக்கடி படம்: அஞ்சான்
அடி மேல் அடி வைத்து முன்னே செல்வோம்
நாம் ஒண்ணொண்ணா சரி செய்து காட்டிடுவோம்.
வீட்டை சுத்தம் செய்திடுவோம்
நாடு தானா மாறிடுமே ஏ ……….ஏ ( அடி )
நீ பள்ளியிலே நல்லொழுக்கம் கத்துக்கிடணும்
நீ பண்பான இளைஞனாய் வளர்ந்திடணும்
நல்ல நேர்மையான தலைவன் ஆள வந்திடணும்
அவன் சட்டம் நீதி ஒழுங்குதனைக் காத்திடணும்
லஞ்சம் எனும் பேயினை விரட்ட வேணும்
நீயும் அஞ்சாமல் நல்லதை செய்து செய்து காட்டணும் ( அடி )
மது விலக்கை கொண்டு வந்து காட்ட வேணும்
பதுக்கல் கொலை கொள்ளை எல்லாம் தொலைக்க வேணும்
ஜாதி மத பேதம் எல்லாம் அழிக்க வேணும்
அட ஊழலதை நாட்டை விட்டே ஒழிக்க வேணும்
ஏய் வானத்திலே நிலவைத் தொட வேணும்
தாயைப் போல பெண்ணை நாமும் மதிக்க வேணும் .( அடி )
நாம் உலகில் முதலாய் வந்திடணும்
யாரும் போற்றும்படி யாய்மாறிடணும் ( அடி )
பக்கம் 7/25