ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
சுட்டெரிக்கும் சூரிய கண்ணே !
கதகதப்பூட்டும் காந்தச் சுடரே !
மேகத் திரையில் முடி விலகித் தாபமூட்டுகிறாய் !
கோடையில் வியர்வை ஆற்றைப் பெருக்குகிறாய் !
சூட்டைப் போட்டு என் சூட்டைக் கிளப்புகிறாய் !
உனக்கென்ன ஆசை என்னை நிர்வாணப் பக்கிரியாக்க
உன் கரங்கள் என் மேனி தழுவ வருவது D வைட்டமினோ
வாடையில் உன் கிரணம் பட மேனி தவிக்கிறதே !
மார்கழிப் பனித் துளியில் வைரமென மின்னுகிறாய் !
பார்வையில் பனிப் போர்வை விலக்கும் கண் உனக்கு !
காலையில் கன்னம் சிவந்து குழந்தையாய் கொஞ்சுகிறாய்
மாலையில் கன்னம் கனிந்து குமரியாய் ஒளிகிறாய்
இடையில் மட்டும் ஏன் இப்படி சுட்டு எரிக்கிறாய் !
அண்ட வெளியின் பழம் பெரும் பூதமே !
பாரதி தொட்ட சுட்டும் விழிச் சுடரே !
பூமி ராதை உன்னைக் கொஞ்ச சுற்றிச் சுற்றி வருகிறாள் !
கண்ணன் நீயோ கோபியர் கிரகங்களுடன் நடனமாடுகிறாய் !
உன் கண்ணின் பிரதிபலிப்பு தானே சந்திர ஒளி !
அவள் மீது உனக்கு ஏன் தனிப்பட்ட ஆசை !
மாதம் ஒரு நாள் உன் நெஞ்சில் ஒளித்து வைக்கிறாய்!
மலை முகட்டில் கடற் கரையில் வயல் வெளியில்
நீ துயில் கொள்ளும் துயில் எழும் காட்சியே சாட்சி !
மூன்று வேளையும் உணவு உண்ண நீ அடுப்பூட்டுகிறாய் !
மூன்று வேளையும் செய்ய வேண்டும் உனக்கு வந்தனம்
நீ ஒரு உருளும் சக்கரம் !
உன் கிரணமே சரணம்
பக்கம் 24/25