நான் நானானால்

image

நான் விதையானால் என்னைப் புதைத்துவிடு 
நான் கதையானால் என்னை   எழுதிவிடு 
நான் செடியானால் என்னைப் பதித்து விடு
நான் கொடியானால் என்னை ஒடித்துவிடு 

நான் மண்ணானால் என்னுள் புதைந்துவிடு 
நான் பெண்ணானால் என்னுள் முடங்கிவிடு
நான் பொன்னானால்  என்னுள் உருகிவிடு 
நான் விண்ணானால் என்னுள் பறந்துவிடு

நான் மழையானால் என்னைப்  பொழியவிடு
நான் பனியானால் என்னை சிலிர்க்கவிடு
நான் கடலானால் என்னைச் சீறவிடு 
நான் அலையானால் என்னைத் தவிக்கவிடு

நான் பண்ணானால் என்னைப் பாடிவிடு
நான் புண்ணானால் என்னைக் கீறிவிடு  
நான் கள்ளானால்  என்னைப் புளிக்கவிடு  
நான் புள்ளானால் என்னைப் பறக்கவிடு

நான் அமிழ்தானால் என்னை  விழுங்கிவிடு 
நான் தமிழானால் என்னை  முத்தமிடு  
நான் உடலானால் என்னுள் கலந்துவிடு
நான் உயிரானால் என்னைப் பறக்கவிடு

நான் நீயானால் என்னை வென்றுவிடு
நான் நானானால் என்னைக்  கொன்றுவிடு

image

பக்கம்  23/25