பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள் (கோவை சங்கர்)

image

பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள்
     உயர்ந்தோங்கும் பயிர் கண்டு பூரிப்பு கொள்கின்றாள்
தங்கமன்ன நிலமகளின் செழிப்போங்கச் செய்கின்ற 
    பண்புமிகு மாந்தர்க்கு வாழ்த்துகள் கூறுகிறாள் 
சிங்கமென வானோக்கி நிற்கின்ற பயிரே போல் 
    நேர்மையொடு மனிதருமே வாழ்ந்திடவே சொல்கின்றாள் 
மங்காத பூமகளின் ஈரமுடை நெஞ்சம்போல் 
    ஈரமிகு நெஞ்சினராய் பயின்றிடவே கூறுகிறாள்! 

உணவதுவும் உடையதுவும் ஏருழவன் உதவியினால் 
   சீர்பெற்ற வாழ்க்கையுமே ஒழுக்கத்தின் தயவதனால் 
பணிவுநிறை உழவர்தம் கள்ளமிலா உள்ளம் போல்
   வெள்ளையுள்ளம் கொண்டவராய் புகழோடு வாழ்ந்திடுவீர்
மணங்கொண்ட மலரே போல் ஒளிவீசும் தீபம்போல்
   குணங்கொண்ட  குடும்பத்தில் இன்பங்கள் நிறையட்டும்
எண்ணங்கள் ஈடேற ஆசிபல கூறிடவே  
பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள்

பக்கம்  13/25