மீனங்காடி

                        திங்கள் காலை

 

image

      மேரி ஆபீஸுக்குள் நுழைந்து லிப்டில்  ஏறும் போதே அவள் பாஸ் பிரசாத்தைப் பார்த்து விட்டாள். “ சரி ! தனியாக அவர் கிட்டே போய் விவரமா சொல்கிற வேலை மிச்சம ‘ என்று எண்ணிக் கொண்டாள்.  ஆனால் லிப்டில் எக்கச்சக்கமான கூட்டம்.  பேச முடியவே இல்லை.  மூன்றாவது மாடி  வந்ததும் வெளியே செல்லப் போவதற்கு முன்னால் “ மிஸ்டர் பிரசாத் ஒரு சின்ன பரிசு ! இதுக்குப் பேர் சிரிக்கும் சிங்காரி “  “ என்ன மேரி இது ? “ அவர்  கேட்கு முன் மேரி வெளியே வந்து விட்டாள்.  லிப்ட் கதவு மூடிக் கொண்டது..

image

      அவள் நாற்காலியில் உட்கார்ந்த உடன் போன் அடித்தது. பிரசாத் தான்.  அதை அவள் எதிர் பார்த்திருந்தாள்.  ‘ வேடிக்கையான பரிசு மேரி “ அவர்  பேச்சிலேயே ஒரு சிரிப்பு தெரிந்தது.  அவர் கிட்டே சனிக்கிழமை மீனங்காடிக்குச் சென்றது – கண்டது – படித்தது எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னாள்.

      “ நீ செய்ய நினைக்கிறதைச் செய் மேரி ! மீனங்காடி சமாசாரம் நம்ம நிதிக் கம்பெனிக்கு எப்படி ஒத்து வரும் என்று புரியவில்லை.  ஒண்ணு மட்டும் நிச்சயம் ! டென்ஷனோட வந்த என்னை உன் ‘ சிரிக்கும் சிங்காரி ‘ சிரிக்க வைத்தது என்றால் உன்னால் அதுக்கு மேலேயும் ஏதாவது செய்ய முடியும் !”

      போனை வைத்ததும் அவளுக்கே அவள் பேச்சு செயல் எல்லாம் பிடித்திருந்தது.  மற்ற மேனேஜர் எல்லாம் பிரசாத் கூட இப்படிப் பேச யோசிப்பார்கள்.!  எப்போதும் ‘ ஆமாம் சார் ! சரி சார் ! ‘ என்று தான் பேசுவார்கள்.  நாம் இப்படி வெளிப்படையாப் பேசினது அவருக்குப் பிடித்திருக்கு என்று தான் அவரது குரலே சொல்லிற்று.!

                        ஜாலியா ஒரு பயணம்

image

அடுத்த இரண்டு வாரங்களிலும் திங்கட்கிழமை காலை மீட்டிங்கில் மேரி இதைப் பற்றித் தான் பேசினாள்   ‘ ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் நம்முடைய எண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நீங்கள் போட்ட ‘ மெனு கார்ட் ‘ அழகாக எடுத்துக் கூறியது.  நீங்கள் துணிச்சலாகச் செய்த அந்த நிகழ்ச்சி நம்ம கம்பெனியில் மிகவும் பிரபலமாகி விட்டது என்ற சேதி உங்களுக்குத் தெரியுமா ?   இப்போது நாம் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்.  நீங்கள் எல்லோரும் அதை மனப்பூர்வமாக, அனுபவ பூர்வமாக, நேரடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  மதியம் சாப்பாட்டு இடைவெளி போது நாம் அனைவரும் ஒரு குட்டி பயணம் போகிறோம்.  இரண்டு குரூப்பாகப் பிரிந்து செல்வோம். ஒரு குரூப் புதன் கிழமை மதியம்.  அடுத்த குரூப் வியாழக்கிழமை மதியம்.  அன்றைக்கு யாரும் சாப்பாடு கொண்டு வர வேண்டாம்.  கம்பெனி செலவில் சாப்பாடு ஏற்பாடு செய்யப் படும்.

      நாம் ‘ அவுட்டோர் ‘ பயணம் போகிற இடத்திற்கு உங்களில் சிலர் ஏற்கனவே போயிருக்கக்கூடும்.  நாம் போகிற மீனங்காடி தனி விதம்.  அங்கு கொப்பளிக்கும் சந்தோஷத்தை – சக்தியை உணரவே நாம் அங்கே போகிறோம்.  அங்கே இருக்கிற தொழிலாளிகளும் முதலில் நம்மை மாதிரியே பிரச்சினையில் தவித்து முடிவாக இந்த புதுப் பாதையைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.  அதை அனுபவ பூர்வமாய் உணருவது, பிறகு அதை எப்படி நமது கம்பெனியில் பயன் படுத்துவது ஆகிய இரண்டும் தான் நமது ‘ அவுட்டோர் ‘ பயணத்தின் முக்கிய நோக்கம் !”

      “ ஓ ! மேடம் ! அன்றைக்கு எனக்கு பல் டாக்டர் கிட்டே போகணும் “ “ எனக்கு வேற இடத்தில் லஞ்ச் ஏற்பாடு செய்திருக்கிறேன் “ இப்படி சில குரல்கள் எழாமல் இல்லை.

      ஆனால் மேரி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.  “ நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது.! உங்கள் மற்ற திட்டங்களை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு எல்லோரும் மீனங்காடிக்கு வருகிறீர்கள். ! வர வேண்டும் ! இது மிக மிக முக்கியம் .”

மேரிக்குத் தன் குரலில் இருந்த உறுதியை எண்ண ஆச்சரியமாக இருந்தது.

 image

      புதன் கிழமை மதியம் முதல் குரூப் தயாராக இருந்தார்கள்.  “ நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.! போகும் போது கையில் டீ கப்புடன் போங்கள்.” என்று மேரி டி.வி. விளம்பரத்தில் வருவது போல் சொன்னதைக் கேட்டு அனைவரும் ‘ பக பக ‘ என்று சிரித்து விட்டனர்.  நல்ல ஆரம்பமாகத் தோன்றியது மேரிக்கு.

      வழக்கம் போல மீனங்காடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.  அவ்வளவு பெரிய கும்பலில் நிதிக் கம்பெனியின் கும்பல் கலந்து வெவ்வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் எப்படி உணருகிறார்கள் என்று மேரி அவர்களின் முகத்தையே அடிக்கடி அவர்களுக்குத் தெரியாமல் பார்த்து வந்தாள்.  பலர் ஜாலியாக அனுபவிப்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.  ஜானும், ஸ்வேதாவும்  ஒரு மீன்காரனிடம் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது.  அந்த மீன்காரன் தன்  அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.  மக்கள்  உங்கள் கடைக்கு – ஆபீஸுக்கு வரும் போது அவர்கள் முகத்தைப் பாருங்கள்.  ஒரு நாள் நண்பன் வந்தால் எப்படி ஆர்வத்தோடு பார்ப்பீர்களோ அது மாதிரி பாருங்கள்.!  மற்ற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவர்களை மட்டும் கவனியுங்கள். “ ஜானும், ஸ்வேதாவும் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது மேரிக்குப் பிடித்திருந்தது.

 image

      வியாழக் கிழமை இரண்டாவது குரூப்பும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் போய் விட்டு வந்தார்கள்.  யாரும் அதிகமாகக் கேள்விகள் கேட்கவில்லை.  சாதாரணமாக மீனங்காடி நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அப்பொழுதான் ஒரு புது திருப்பம் நிகழ்ந்தது.  சுஜாதா – ரொம்ப வருஷமா வேலை செய்கிற சீனியர் டைப்பிஸ்ட்.  அவளிடம் மீனங்காடி ஆள் வந்து “ மேடம் ! நீங்கள் அந்த தடுப்புக்குப் பின்னால் இருக்கும் இடத்திற்குப் போய் அந்த மீனைப் பிடிக்கிறீர்களா ? “ என்று கேட்டான். சுஜாதா முதலில் தயங்கினாலும் பிறகு ‘ சரி ‘ என்று மெதுவாகப் போனாள் . ரெண்டு மூன்று தடவை பிடிக்க மீன் நழுவி நழுவிப் போவது கூட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் குஷியாக இருந்தது.  அங்கிருக்கும் அனைவரும் சுஜாதாவையே பார்த்துக் கொண்டு ‘ ஆய் ! ஊய் ! ‘ என்று கத்தினார்கள்.  மூன்றாவது தடவை ‘ கபால் ‘ என்று வெறும் கையால் அந்த மீனை சுஜாதா பிடித்ததும் அங்கிருந்த அனைவரும் சேர்ந்தாற்போல் கை தட்டி  ஆரவாரித்தனர்.  விசில் சத்தம் வேறு !  மீன் மாதிரியே சுஜாதாவும் அன்று சந்தோஷ வலையில் மாட்டிக் கொண்டு ரசித்தாள். !

      சுஜாதா மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டியாக விளங்கினாள்.  அன்றைக்கு நிதிக் கம்பெனி ஆட்கள் டீ கப்பைத் தூக்கிக் கொண்டு ‘ போகுது பார் ! போகுது பார் ! என்று சொல்வதை விட துள்ளிக் குதித்து மீனைப் பிடிக்கும் ஆக்ஷனில் இறங்கி இருந்தார்கள்.

                              வெள்ளி மதியம் மீட்டிங் .

 image

      வெள்ளிக் கிழமை மதியம் மேரி இரண்டு குரூப்புகளையும் தனித் தனியே சந்தித்தாள்.  “ நாமும் அந்த மீனங்காடி தொழிலாளிகள் மாதிரி  ஜாலியாக வேலை செய்தால் எவ்வளவு  நன்றாக இருக்கும்? “ என்று பேச்சைத் துவங்கினாள்.  சிலர் தலை ஆட்டினர்.  சிலர் மீன் தலைக்கு மேல் பறப்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  சுஜாதாவின் அவுட்டுச் சிரிப்பு அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது.

இரண்டு குரூப்புகளிலும் எதிர்ப்புகள் வராமல் இல்லை.  ‘ நாம் என்ன மீனா விற்கிறோம்?

‘ இது ஆபீஸ் ‘ அது ஆம்பளைங்க சமாசாரம் ‘ ‘ நம்ம வேலை எப்படிச் செய்தாலும் போர் தான் ‘ “ “ நாம் எதைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது ?  கரன்சி நோட்டையா ?’

      “ நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ! இது மீன் மார்க்கெட் இல்லை. அவர்கள் வேலையை விட நமது வேலை வித்தியாசமானது தான்.  இருந்தாலும் நான் ஒன்று கேட்கிறேன்..  நாமும் ஏன் அவர்களைப் போல ஜாலியா சந்தோஷமா வேலை செய்யக் கூடாது ?  மனம் விட்டுச் சிரிக்கணும் ! வேண்டா வெறுப்போடு இல்லாமல் மன நிறைவோடு  வேலை செய்ய வேண்டும் .

‘ ஏண்டா ஆபிசுக்கு வருகிறோம்’ என்று இல்லாமல் ‘ஆபிசுக்கு வருவதே ஜாலி ‘ என்ற  நினைவு  வர வேண்டும்.  ஏற்கனவே மெனு கார்ட்போட்டு உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள். ! அதற்கு அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டாமா ?”

      சுஜாதா எழுந்தாள்.  எனக்கு அந்த மீனங்காடி சூழ்நிலை மிகவும் பிடித்திருக்கிறது.  ஆனால் இங்கே நம்ம ஆபீசுக்கு வேலைக்கு வருவதே பிடிக்கவில்லை.  மூச்சு முட்டுது இங்கே !  உயிரே இல்லாத இடத்தில் இருப்பது போன்ற உணர்வு தான் எனக்கு இங்கு வருகிறது.  நான் உண்மையைச் சொல்லுவதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.  நான் வேறு வேலைக்குப் போக வேண்டும் என்று  போன மாதமே முடிவு எடுத்து விட்டேன்.  இந்த இடத்தில் உயிரும் உணர்வும் கொண்டு வர முடிந்தால் இங்கேயே இருப்பதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லை.!

      “ ரொம்ப நன்றி சுஜாதா ! “ உண்மையைச் சொன்னதற்காக “ சுரேஷ் எல்லாரையும் பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னான்   “ நான் இந்த இடத்தை ஜாலியான வேலை செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். “

      ரமேஷ் கையைத் தூக்கினான் !  “ சொல்லு ரமேஷ் “  “ மேடம் ! அன்றைக்கு நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொன்னீர்கள்.!  எந்த மேனேஜரும்  இது மாதிரி சொன்னது இல்லை .  நானும் உங்களை மாதிரி தனி ஆளாக இருந்து கொண்டு என் பையனை வளர்த்தி வருகிறேன்.  எனக்கும் இந்த வேலை , சம்பளம், பாதுகாப்பு எல்லாம் அவசியம்.  நானும் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறேன்.  நான் மற்ற டிபார்ட்மெண்ட் ஆட்கள் வந்தால் எரிந்து எரிந்து விழுந்திருக்கிறேன்.  காரணம் அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.  

நாம் மட்டும் இங்கே  இந்த  டிபார்ட்மெண்டில் அவதிப் படுகிறோமே என்ற வெறுப்பு, கோபம், ஆத்திரம். நீங்கள் அன்று பேசின பிறகு உணர்ந்தேன். – எவ்வளவு தவறான எண்ணம் என்னுடையது என்று.  நாம் நம்ம டிபார்ட்மெண்டை குப்பையா நினைத்தால் இது குப்பைத் தொட்டிதான்.  நாம இதை கோபுரமா நினைச்சா அது கோயிலாக மாறாதா ?  இதைப் பத்தி தீவிரமாக யோசித்தேன்.  நாமும் முயற்சிப்போம்.   நம்மால் இங்கேயே ஒரு ஜாலியான – சந்தோஷமான ஆபீஸை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.”

      “ ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ் !  அவனை மிகவும் நன்றியுடன் பார்த்தாள் மேரி ”

 image

      “ இன்னும் சிலர் ரமேஷின் வார்த்தைக்குத் தலை ஆட்டுவது எனக்குப் புரிகிறது.  நீங்கள் சொல்கிற வார்த்தைகள் எல்லாம் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்.  இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் ! அவற்றை நான் பெரிதும் மதிக்கிறேன்.  உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி !  நாம் நமது ஆபீஸை நாம் விரும்புகிற ஒரு இடமாகக் கூடிய சீக்கிரம் மாற்றுவோம்.! இதில் கொஞ்சங்கூட சந்தேகமில்லை.!” கை தட்டல் பிறந்தது

      .  “ வருகிற திங்கட்கிழமை முதல் மீனங்காடித் தத்துவத்தை நமது மூன்றாம் மாடியில் அமுல் படுத்துவோம்.  அதுவரை நீங்கள் உங்களுக்கு மீனாங்காடியில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் அவை உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றியும் யோசியுங்கள் !  உங்கள் எண்ணம், கருத்து, சந்தேகங்கள் அனைத்தையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள்.!  நாம் அடுத்த தடவை சந்திக்கும்போது மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றித் தீர்மானிப்போம்.!  அதுவரைக்கும் ஜாலியா யோசியுங்கள்.”

      “ சரி ! நாம் கரன்சி நோட்டைத் தூக்கிப் போடா விட்டாலும் இங்கே இருக்கிற குப்பைத் தொட்டியை தூக்கி எறியலாமா ?”  ஜேக்கப் கேட்டதும் அனைவரும் சிரித்தார்கள்.! சிரிப்பு அலை போல தொடர்ந்து வருவது அனைவருக்கும் புரிந்தது.

 image

      “ என்னென்ன செய்யலாம் ‘ என்று கோடு போட்டுக் காட்டினாள் மேரி ! எல்லோரும் அந்த வார விடுமுறையில் அதைப் பற்றி நன்றாக யோசித்து விட்டு புதுப் புதுத் திட்டங்களுடன் வர வேண்டும் “ என்று திரும்பத் திரும்பச் சொன்னாள் மேரி ! 

      எல்லோரும் சென்ற பிறகு தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள் மேரி !  கொஞ்சம் சோர்வாகத் தோன்றியது.  சனி ஞாயிறு நாட்களில் யோசித்து விட்டு வாருங்கள் என்று சொன்னோமே ! செய்வார்களா ?  பெரிய நம்பிக்கை தோன்றவில்லை மேரிக்கு.  பெருமூச்சு தான் வந்தது. 

      ஆனால் அந்த வார சனி ஞாயிறு விடுமுறையில் அவர்களில் யார் திரும்பவும் அந்த மீனங்காடிக்கு குழந்தை குட்டிகளுடன் போனார்கள் என்பது மேரிக்கு சத்தியமாகத் தெரியாது.

 image

(தொடரும்) 

பக்கம்  21/25