ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)

இந்த மாத எழுத்தாளர் : கு ப ரா  

image

வறுமையில் வாடிய -ஆனாலும் துளிர் விட்டு பிரகாசமாக இருந்த மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா. என்று அழைக்கப்படுகிற கு.ப.ராஜகோபாலன். (1902-44)

பெண் விடுதலை பெண்ணின் சமூக  மேம்பாடு இவற்றையே தன் கதைப் பொருளாக வைத்து எழுதியவர். 

நாடகம், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என்று பல வடிவங்களிலும் வாசகர்களைக் கவர்ந்த கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா), ஏராளமாகக்ச் சிறுகதைகள் எழுதி உள்ளார். எல்லா சிறுகதைகளும் (அக்கால வழக்கத்திற்கு மாறாக) பக்க அளவில் குறைவாக இருக்கும். தாக்கம் எவ்விதத்திலும் குறையாது

அக்காலத்தில் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாக விளங்கிய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் கு ப ரா வும் தான். “கு.ப.ரா மாதிரி ஒரு வரியாவது என்னால் எழுத முடியுமா என்று எனக்கு ஆதங்கம்"  என்று தி.ஜானகிராமன் சொன்னதாகச் சொல்வார்கள்

சிறந்த சிறுகதைகள் பட்டியல் என்று நான் பார்த்த எந்த பட்டியலிலும் இவரது "விடியுமா?” இல்லாத பட்டியல் என் கண்ணில் படவில்லை. பல பட்டியல்களில்  “கனகாம்பரம்” தென்படுகிறது.

அவரது “காமுவின் கதை” இப்படிப் போகிறது

விடிந்ததுமே மனைவி காமு  டைப்ரைட்டரில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் கணவன். அவள் லாகவத்துடன் சர்வசாதரணமாக டைப் அடிப்பதைவிட,  பல்கூட தேய்க்காமல் ஆரம்பித்தது தான்  ஆச்சரியம்.
என்னவென்று கேட்டதற்கு, இரவில் ஒரு கதை மனதில் உருவானதாகவும் அது கலைவதற்குள் அடித்து முடித்துவிட்டதாகவும் சொல்கிறாள். கதையைப் படிக்கலாம், ஆனால் அபிப்ராயம் சொல்லக்கூடாது என்கிறாள்.

காமு எழுதிய கதை

தாய்தந்தையற்ற, மாமாவினால் வளர்க்கப்படும் மோஹத்திற்கு அம்மையினால் ஒரு தழும்புகூட இல்லாவிட்டாலும் கண்பார்வை போய்விடுகிறது. அவள் பார்வை இல்லாமலேயே  வாழக் கற்றுக்கொண்டுவிடுகிறாள்.

[……      இந்த இடத்தில் ஒரு வர்ணனை – காக்கைச் சிறகு போன்ற புருவங்கள், சர்பம்போன்ற பின்னல்,:- கண்விழிகள் மட்டும் கருவிழிகளற்ற இரண்டு கண்ணீர் ஊற்றுக்கள்.-  இதைப்படித்ததும்    "இந்த வர்ணனையை என் மனதிலிருந்து எப்படித்  திருடினாய்?“ என்று கேட்கிறான் கணவன்.  அதற்கு "அதான் அப்பொழுதே  சொன்னேனே, கேலி செய்யக் கூடாதென்று?” என்கிறாள் காமு   ]

     காமு எழுதிய கதை  தொடர்கிறது 

ஆனால் திருமண வயது வந்தபோது எப்படி அவளைக் கரையேற்றுவது என்று மாமாவும் அத்தையும் கவலைப்படுகிறாகள். .ஒருநாள் மாமனும் அத்தையும் உறங்கியபிறகு மாமனின் மகன் ரமணி, மோஹம்  கண்ணீருடன் படுத்திருப்பதைப் பார்க்கிறான். பெரியவர்களின் துயரமும் கவலையும் தன்னால்தான் என்ற சோகம் அவளுக்கு. தானே அவளை திருமணம் செய்துகொள்கிறேன் என்று ரமணி.சொல்கிறான். பெற்றோரின் அரைமனச் சம்மதத்துடன் செயலாற்றவும் செய்கிறான்.

ஒருநாள், “என்னைக் கல்யாணம் செய்துகொண்டதால் எவ்வளவு சிரமம் உங்களுக்கு?” என்று மோஹம் கேட்கிறாள். தனக்கொன்றும் சிரமமோ, குறையோ இல்லை என்று ரமணி சொல்ல,. – ‘அனாதையான என்னைக் கைப்பிடித்த என் அத்தானை கண்குளிரப் பார்க்க முடியவில்லையே’ என்கிற குறை தனக்கிருப்பதாக மோஹம் சொல்கிறாள். அதற்கு “உன் மனம் குளிர இப்படியே நீ இருந்துவிட்டால் போதும் போ” என்கிறான் ரமணி..

காமு எழுதிய கதை முடிகிறது.

கதையைப் படித்துவிட்டு  “அதிருக்கட்டும் "என் மனத்தை எப்படி ஊகித்தாய் சொல்லு… என் மனமே இந்தக் கதையா யிருக்கிறதே. நீ ‘மாயாவி’ தான்” என்று கணவன் ஆச்சரியப் படுகிறான்.

இந்த இடத்தில்தான் காமு எழுதியது தன் சொந்தக்கதைதான் என்று நமக்கு உறைக்கிறது. திரும்பவும் படிக்கும்போதுதான் , அதற்குண்டான சங்கேத வார்த்தைகள் நம் கண்ணில் படுகின்றன.  உத்தியிலும், சரளத்திலும் மிகச் சிறந்த கதை.
முன்னே குறிப்பட்ட கதைகளின் லிங்க்

“விடியுமா"     http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_30.html

"கனகாம்பரம்"  http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_15.html

 image

பக்கம் 11/25